போர் நிறுத்தத்தை அறிவித்தது உல்பா: மத்திய அரசு வரவேற்பு
போர் நிறுத்தத்தை அறிவித்தது உல்பா: மத்திய அரசு வரவேற்பு
போர் நிறுத்தத்தை அறிவித்தது உல்பா: மத்திய அரசு வரவேற்பு
புதுடில்லி : அசாம் மாநிலத்தில் செயல்பட்டு வரும், 'உல்பா' அமைப்பு, நேற்று முன்தினம் வெளியிட்ட போர் நிறுத்த அறிவிப்பை, மத்திய அரசு வரவேற்றுள்ளது.
'அசாம் மாநிலம் இந்தியாவில் இருந்து பிரிந்து தனி நாடாக வேண்டும்' என்ற கொள்கையுடன் 1979 முதல், 'உல்பா' அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை மத்திய அரசு பயங்கரவாத அமைப்பாகவும், அமெரிக்கா, கவலைக்குரிய அமைப்பாகவும் அறிவித்துள்ளன.
இதன் தலைவராக அரவிந்த ராஜ்கோவாவும், படைத் தலைவராக பரேஷ் பரூவாவும் உள்ளனர். இவர்களில் ராஜ்கோவா சமீபத்தில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
அரவிந்த ராஜ்கோவா சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோரை சந்தித்து, பேச்சுவார்த்தை குறித்த தன் ஆர்வத்தை தெரிவித்தார். ஆனால், பரேஷ் பரூவா, பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், உல்பாவிற்குள்ளேயே குழப்பங்கள் ஏற்பட்டன.
இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜ்கோவா வெளியிட்ட அறிக்கையில், 'அசாம் தனி நாடு கோரிக்கை பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்ற, அசாம் மக்களின் விருப்பத்தை மதித்து அங்கீகரித்து, இந்திய அரசுடன் பேச்சுவார்த்தையைத் துவங்குவது என, உல்பா பொதுக் குழு முடிவு செய்துள்ளது. அதனால், காலவரையற்ற போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட, உல்பா தலைவருக்கு பொதுக்குழு முழு அதிகாரம் வழங்கியுள்ளது. போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வருகிறது' என்றார்.
இந்நிலையில், பேச்சுவார்த்தையை எதிர்த்து வரும் பரேஷ் பரூவா நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'ராஜ்கோவாவின் அறிவிப்பு, உல்பாவின் கொள்கை மற்றும் இலக்குக்கு எதிரானது. அசாமுக்கான ஆயுதப் போராட்டம் தொடரும்' என்று கூறியுள்ளார்.
ராஜ்கோவாவின் அறிவிப்பு குறித்து நேற்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில், 'உல்பாவின் முடிவை மத்திய அரசு வரவேற்கிறது. போர் நடவடிக்கையைக் கைவிடும் ஒப்பந்தத்தில் உல்பா விரைவில் கையெழுத்திடும், ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அடிப்படை விதிகள் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தைக்கான அரவிந்த ராஜ்கோவாவின் முடிவை வரவேற்றுள்ள, அசாம் முதல்வர் தருண் கோகாய், வன்முறையைக் கைவிட்டு பேச்சு வார்த்தையில் இணையும்படி பரேஷ் பரூவாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


