Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/காகித ஆலை மோசடி: சன் "டிவி' சக்சேனா உடுமலை கோர்ட்டில் ஆஜர்

காகித ஆலை மோசடி: சன் "டிவி' சக்சேனா உடுமலை கோர்ட்டில் ஆஜர்

காகித ஆலை மோசடி: சன் "டிவி' சக்சேனா உடுமலை கோர்ட்டில் ஆஜர்

காகித ஆலை மோசடி: சன் "டிவி' சக்சேனா உடுமலை கோர்ட்டில் ஆஜர்

ADDED : ஆக 06, 2011 01:50 AM


Google News

உடுமலை : காகித ஆலை மோசடி வழக்கில், சன் 'டிவி' நிர்வாகி சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் ஆகியோர் நேற்று உடுமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்களை, 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் தீபா உத்தரவிட்டார். உடுமலையைச் சேர்ந்த சீனிவாசன், தனக்கு சொந்தமான கருமத்தம்பட்டி காகித ஆலையை, கிங்ஸ்லி, திருவல்லிக்கேணி தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன் உட்பட எட்டு பேர் மிரட்டி வாங்கிக் கொண்டதாக, திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, எம்.எல்.ஏ., அன்பழகன் ஜூலை 29ல் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



இந்த வழக்கில், சன் 'டிவி' நிர்வாகி சக்சேனா, அவரது உதவியாளர் ஐயப்பன் ஆகியோரை கைது செய்ய அனுமதி கோரி, உடுமலை ஜே.எம்.1 கோர்ட்டில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அனுமதி பெற்ற பின், பிற வழக்குகளில் கைதாகி புழல் சிறையில் இருந்த இருவரையும், ஆக., 3ல் போலீசார் கைது செய்தனர்.



புழல் சிறையில் இருந்து, பலத்த பாதுகாப்புடன் இருவரையும் நேற்று அழைத்து வந்த போலீசார், உடுமலை ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை மாஜிஸ்திரேட் தீபா விசாரித்தார். சக்சேனா வழக்கறிஞர் தரப்பில், 'போதுமான ஆதாரங்கள் இல்லாமல், புகார் மனுவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால், சிறையில் அடைக்கக் கூடாது' என, வாதிடப்பட்டது. இதற்கு அரசு தரப்பில், 'சக்சேனா மற்றும் ஐயப்பன் கைது செய்யப்பட்டதற்கு போதிய முகாந்திரம் உள்ளது' என தெரிவிக்கப்பட்டது. ஜாமின் வழங்கவும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் தீபா, இருவரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். 'வரும் 9ம் தேதி ஜாமின் மனு குறித்த விசாரணை நடத்தப்படும்' எனவும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர். 'இன்று காலை, புழல் சிறைக்கு மீண்டும் இவர்கள் கொண்டு செல்லப்படுவர்' என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us