ADDED : ஜூலை 25, 2011 09:45 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சியிலுள்ள முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன.பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பால்குடம் கொண்டு வந்தனர்.
இதில், 30 குடங்களில் கொண்டு வரப்பட்ட பால் கொண்டு காலை 10.45 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர், மகா தீபாராதனை நடந்தது. மாலை 6.00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய முருகன், சித்திரை தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், கோவில் செயல் அலுவலர் ஜெயசெல்வம், அய்யாசாமி குருக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பொள்ளாச்சி விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் காலை 9.30 மணிக்கு முருகருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. ஐயப்பன்கோவில், மாகாளியம்மன் கோவில்களில் முருகருக்கு அபிஷேகம் நடந்தது.