/உள்ளூர் செய்திகள்/சென்னை/வழக்கம் போல்' தென்மாவட்ட ரயில்கள் அனைத்தும் "ஹவுஸ் புல்'வழக்கம் போல்' தென்மாவட்ட ரயில்கள் அனைத்தும் "ஹவுஸ் புல்'
வழக்கம் போல்' தென்மாவட்ட ரயில்கள் அனைத்தும் "ஹவுஸ் புல்'
வழக்கம் போல்' தென்மாவட்ட ரயில்கள் அனைத்தும் "ஹவுஸ் புல்'
வழக்கம் போல்' தென்மாவட்ட ரயில்கள் அனைத்தும் "ஹவுஸ் புல்'
ADDED : ஜூலை 24, 2011 03:32 AM
சென்னை:தீபாவளிக்காக ரயில்களில் முன்பதிவு துவங்கிய அரை மணி நேரத்தில்,
தென்மாவட்ட ரயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. அதிகபட்சமாக பாண்டியன்
எக்ஸ்பிரஸ் ரயிலில் 225 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இதனால்,
பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.தீபாவளி பண்டிகை அக்., 26ம்
தேதி புதன் கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்காக, ரயில்களில் முன்பதிவு வசதி
நேற்று முதல் துவங்கியது. அக்., 21ம் தேதி வெள்ளிக்கிழமை பயணிப்பதற்காக,
முன்பதிவு நேற்று நடந்தது.சிலர் முதல் நாள் இரவே, முன்பதிவு மையங்களில்
முகாமிட்டனர்; பலர் அதிகாலையில் வந்தனர். காலை 8 மணிக்கு முன்பதிவு
துவங்கியதும், அரை மணி நேரத்தில் தென்மாவட்டங்களுக்கு இரவு நேரத்தில்
இயக்கப்படும் பாண்டியன், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட அனைத்து ரயில்களும்
நிரம்பிவிட்டன.
குறிப்பாக பாண்டியன், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்கள், 10 நிமிடங்களிலேயே
நிரம்பிவிட்டன.நேற்று பகல் 2 மணி நிலவரப்படி, பாண்டியன் எக்ஸ்பிரசில் 225,
நெல்லை எக்ஸ்பிரசில் 106, பொதிகை ரயிலில் 95 என, அனைத்து ரயில்களிலும்
காத்திருப்போர் பட்டியல் நீள்கிறது. வாராந்திர ரயில்களான திருச்செந்தூர்,
மதுரை எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் அனைத்து இருக்கைகளும் முடிந்துவிட்டன.பகல்
நேர ரயில்களில் மட்டும் இருக்கை வசதி உள்ளது. குருவாயூர் எக்ஸ்பிரஸ்
ரயிலில் 275 இருக்கைகளும், வைகை எக்ஸ்பிரசில் 1,233 இருக்கைகளும்
உள்ளன.இதற்கிடையே, அக்., 22ம் தேதி முதல் பயணிப்பதற்கான முன்பதிவு, இன்று
முதல் நடக்கிறது. ஏமாற்றத்தை தவிர்க்க, பொதுமக்கள் முன்னதாகவே முன்பதிவு
மையங்களுக்கு சென்றால் தான், இருக்கை வசதியை உறுதி செய்ய
முடியும்.முன்பதிவு மையங்கள் கண்காணிப்பு: சென்னை சென்ட்ரல், எழும்பூர்,
மாம்பலம், பெரம்பூர் உட்பட அனைத்து ரயில்வே முன்பதிவு மையங்களிலும்,
ரயில்வே முதன்மை பாதுகாப்பு ஆணையர் காந்தி உத்தரவின் பேரில், ரயில்வே
பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கண்காணிப்பு
பணி குறித்து, சென்ட்ரல் ரயில் வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர்
திருச்செல்வன் கூறியதாவது:சென்னை நகரில் உள்ள அனைத்து ரயில்வே முன்பதிவு
மையங்களிலும், தீபாவளி வரை தீவிர கண்காணிப்பு பணி நடக்கிறது. அதிகாலை 4 மணி
முதல், முன்பதிவு மையத்திற்கு வருபவர்களை வரிசைப்படுத்தி, அமர
வைக்கப்படுவர். வருபவர்கள், புரோக்கர்களா என்பதை அறிய, அவர்களிடம் விசாரணை
நடத்தப்படும். அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி உட்பட
சென்னை நகரை ஒட்டி அமைந்துள்ள ரயில்வே முன்பதிவு மையங்களிலும் கண்காணிப்பு
பணி நடக்கிறது.இவ்வாறு திருச்செல்வன் கூறினார்.ரயில்வே பாதுகாப்பு
படையினரின் பாதுகாப்பு பணியை, முதன்மை பாதுகாப்பு ஆணையர் காந்தி நேற்று
காலை நேரில் சென்று பார்வையிட்டார்.மக்கள் ஏமாற்றம்: தீபாவளி, பொங்கல்
பண்டிகை நாட்களில், தென்மாவட்ட ரயில்களுக்கான முன்பதிவு துவங்கிய 5 முதல்
10 நிமிடங்களுக்குள், அனைத்து இருக்கை மற்றும் படுக்கை வசதிக்கான முன்பதிவு
முடிந்து விடும். நாடு முழுவதும் முன்பதிவு செய்வதே காரணம் என்று
கூறினாலும், தனியார் டிக்கெட் ஏஜன்சிகள், புரோக்கர்கள் மூலம் அனைத்து ரயில்
நிலையங்களிலும் முதல் நாள் இரவே வரிசையில் நிற்க வைத்து
விடுகின்றனர்.அவர்கள் மூலம் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே
மொத்தமாக டிக்கெட்களை முன்பதிவு செய்து விடுகின்றனர். பின்னர் அவற்றை,
கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதன் காரணமாக, வரிசையில்
நிற்பவர்களுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை.மூன்று, நான்காவது ஆளாக வரிசையில்
நின்றாலும் அவர்களுக்கு ஆர்.ஏ.சி., அல்லது காத்திருப்போர் பட்டியல்
டிக்கெட் தான் கிடைக்கிறது. அதே நிலை நேற்றும் தொடர்ந்ததால், முன்பதிவு
செய்ய அதிகாலையிலேயே காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்
சென்றனர்.