ஏற்காட்டில் திடீர் நீர்வீழ்ச்சியால் உற்சாகம் : சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
ஏற்காட்டில் திடீர் நீர்வீழ்ச்சியால் உற்சாகம் : சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
ஏற்காட்டில் திடீர் நீர்வீழ்ச்சியால் உற்சாகம் : சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

சேலம்: ஏற்காடு மலையில் உருவாகியுள்ள திடீர் நீர்வீழ்ச்சியில், சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து வருகின்றனர்.
சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், அரசு விடுமுறை நாட்களில், அடிக்கடி ஏற்காடு மலைக்கு வந்து, குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருந்து செல்வது வழக்கம். ஏற்காடு மலை 'குளுகுளு' கிளைமேட்டை அனுபவிக்க, ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். கோடை காலத்தில், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், ஏற்காடு மலைக்கு பயணிகள் வந்து செல்வர்.
தற்போது, ஏற்பட்டுள்ள திடீர் நீர்வீழ்ச்சியின் காரணமாக, பயணிகள் கூட்டம் கனிசமாக அதிகரித்துள்ளது. ஏற்காடு மழையில், 21 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. 60 அடி மற்றும் 40 அடி பாலம் மற்றும் சில கொண்டை ஊசி வளைவு பகுதியில், பெரும் பாறைகளில் இருந்து தண்ணீர் அருவியாக கொட்டி வருகிறது.
இந்த திடீர் நீர்வீழ்ச்சியில், குடும்பத்துடன் பயணிகள் குளித்து மகிழ்கின்றனர். இந்த திடீர் நீர்வீழ்ச்சியை கேள்விப்பட்டு, ஏராளமான பொதுமக்கள், ஏற்காடு மலையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். ஏற்காடு பின்புறமான கொட்டச்சேடு, குப்பனூர் பகுதியிலும் பெரிய பெரிய பாறைகளில் இருந்து அருவியாக தண்ணீர் கொட்டி வருகிறது.
ஏற்காடு கிளியூர் நீர்வீழ்ச்சியில், பயணிகள் பல நூறு அடி தூரம் இறங்கி, பாறைகளை கடந்து செல்வது சிரமம். மேலும், பெண்கள், சிறுவர், சிறுமியர், முதியவர்கள் கிளியூர் நீர்வீழ்ச்சிக்கு சென்று குளிப்பது இயலாத காரியமாக இருந்து வரும் நிலையில், ஏற்காடு மலைகளில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள திடீர் நீர்வீழ்ச்சி, அனைவரும், எவ்வித சிரமம் இன்றி நீராட வசதியாக இருப்பதால், பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.


