காமன்வெல்த் போட்டி குறித்த ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஷீலா தீட்சித் ஆலோசனை
காமன்வெல்த் போட்டி குறித்த ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஷீலா தீட்சித் ஆலோசனை
காமன்வெல்த் போட்டி குறித்த ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஷீலா தீட்சித் ஆலோசனை

புதுடில்லி : காமன்வெல்த் விளையாட்டில் நடந்த ஊழல் பற்றி, மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து, டில்லி முதல்வர் ஷீலா தீட்சித், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஊழலில் டில்லி அரசுக்கு சம்பந்தம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளதால், முதல்வர் ஷீலா தீட்சித் தனது அமைச்சரவை சகாக்களுடன் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் மட்டத்தில் இரண்டு கூட்டங்கள் நடந்தன. இந்த கூட்டத்தில், தலைமைச் செயலர் திரிபாதி பங்கேற்றார்.
இது குறித்து திரிபாதி குறிப்பிடுகையில், 'காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்ட எந்த நிறுவனத்துடனும் முதல்வர் ஷீலா தீட்சித் சம்பந்தப்படவில்லை. அவர் சம்பந்தப்படாத விஷயத்தில் அவர் மீது குற்றம் சாட்டப்படுவது தவறானது' என்றார்.
ராஜ்யசபாவில் கோஷம்: இதற்கிடையே ராஜ்யசபாவில் நேற்று, 'காமன்வெல்த் ஊழலில் டில்லி முதல்வர் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை நடத்த வேண்டும்' என, மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் பிருந்தா கராத் உள்ளிட்டவர்கள் கோரினர். இதற்கு ஆதரவாக பா. ஜ., உறுப்பினர்களும் குரல் கொடுத்தனர். 'கேள்வி நேரத்தின்போது இந்த பிரச்னையை எழுப்புவதை அனுமதிக்க முடியாது' என, ராஜ்யசபா தலைவர் அமீது அன்சாரி, உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அனுமதி மறுத்தார்.


