Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/குற்றவாளிகளை பிடிப்பதற்காக வாகன சோதனை நடத்த உத்தரவு

குற்றவாளிகளை பிடிப்பதற்காக வாகன சோதனை நடத்த உத்தரவு

குற்றவாளிகளை பிடிப்பதற்காக வாகன சோதனை நடத்த உத்தரவு

குற்றவாளிகளை பிடிப்பதற்காக வாகன சோதனை நடத்த உத்தரவு

ADDED : ஜூலை 28, 2011 09:11 PM


Google News
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உலா வரும் குற்றவாளிகளை கைது செய்வதற்காக, ஒரே நேரத்தில் நகரில் பல இடங்களில் திடீரென வாகன சோதனையில் ஈடுபட போலீசாருக்கு எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில், 14 செக்போஸ்ட்கள், 5 ரோந்து வாகனங்கள், மூன்று நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. மேலும், அனைத்து ஸ்டேஷன் பகுதியிலும் ரோந்து பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுவருகின்றனர்.ஏற்கனவே உள்ள செக்போஸ்ட் பகுதியில் மட்டும் வாகன சோதனை மேற்கொள்ளும்போது, குற்றவாளிகள் வேறு வழித்தடங்களில் தப்பி ஓடி விடுகின்றனர். இதை தடுக்கும் வகையில், திடீர் திடீரென காலை, மாலை நேரங்களில் ஒரு மணி நேரம் சோதனை நடத்த உத்தரவிடப்படுகிறது. எந்தெந்த பகுதியில், எத்தனை மணிக்கு ஒரே நேரத்தில் வாகன தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மைக் வாயிலாக எஸ்.பி., பாலகிருஷ்ணன் உத்தரவிடுகிறார். குறிப்பிட்ட நேரம் முடிந்ததும், தணிக்கை முடிந்ததா, எவ்வளவு வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன; குற்றவாளிகள் சிக்கினரா என விசாரிக்கிறார். போலீஸ் செக்போஸ்ட் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே உள்ளன; வேறு வழித்தடத்தில் குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது என்பதற்காக, வெவ்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்படுகின்றன. ஒதுக்கப்படும் அந்த ஒரு மணி நேரத்திலும், அவ்வழியே வருபவர்கள் சோதனையில் இருந்து தப்பிக்காத வகையில், ஒவ்வொரு 15 நிமிடத்துக்கு ஒருமுறை அதே பகுதியில் குறிப்பிட்ட கிலோ மீட்டர் தூரம் இடங்களை மாற்றி சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள போலீசாருக்கு கூட, எந்த இடத்தில், எந்த நேரத்தில் சோதனை என முன்கூட்டியே தெரிவதில்லை. இவ்வாறு மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும், திடீர் வாகன சோதனை நடக்கிறது. இரவு, அதிகாலை, பகல், மதியம் என நேரங்கள் தினமும் மாற்றி, மாற்றி சோதனைக்கு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு தினமும் ஒரு மணி நேரத்தில் 600 முதல் 1,000 வாகனங்கள் வரை தணிக்கை செய்யப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us