xகோபிசெட்டிபாளையம் : போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்மமாக இறந்ததால், கோபியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு, கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பக்கத்து வீட்டை சேர்ந்த லாரி டிரைவர் சலீம், 40, சமரசம் செய்தார். இதில், கணேசமூர்த்திக்கும், சலீமுக்கும் இடையே தகராறு முற்றியதில், கணேசமூர்த்தியை சலீம், கத்தியால் குத்தினார். கோபி அரசு மருத்துவமனையில், அவர் அனுமதிக்கப்பட்டார்.
கோபி போலீஸ் ஸ்டேஷனுக்கு, நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு, சலீமை அழைத்துச் சென்ற போலீசார், விசாரணை நடத்திய போது, மயக்கமடைந்த அவரை, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக கூறவே, அரசு மருத்துவமனையில் இருந்த போலீசார் அங்கிருந்து மாயமாகினர். கோவை டி.ஐ.ஜி., - ஈரோடு எஸ்.பி., ஆகியோர், நள்ளிரவில் கோபியில், பொதுப்பணித் துறை ஓய்வு மாளிகையில், கோபி போலீசாருடன், ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து சலீமின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
'கோபி போலீஸ் ஸ்டேஷனுக்கு சலீமை, அவரது மனைவி சாகீரா மற்றும் உறவினர்கள் அழைத்து வரும் போது, மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்தார்' என, கோபி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், சலீமின் உறவினர்களோ, 'விசாரணைக்காக, சலீமை ஆட்டோவில் போலீசார் அழைத்து சென்றனர். ஸ்டேஷனில் அவர் இறந்து விட்டார்' என கூறுகின்றனர்.


