ADDED : ஆக 13, 2011 01:35 AM
திருச்சுழி : திருச்சுழி அருகே, சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டதால், அங்குள்ள மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், திடீர் பதட்டம் உருவானது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே, பரளச்சி, கீழ்க்குடி, குதிரை காட்டூரணியில், கருப்பசாமி கோயில் உள்ளது. இங்கிருந்த, கல்லால் செய்யப்பட்ட கருப்பசாமி சிலையை, சில நாட்களுக்கு முன், யாரோ உடைத்து விட்டனர். தொடர்ந்து, அங்குள்ள உலகநாயகி அம்மன் கோயிலின் கருப்பசாமி சிலை, உலக நாயகி அம்மன் சிலைகளும் உடைக்கப்பட்டன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன், முனீஸ்வரர் கோயிலில் உள்ள, சாமி சிலைகளும் உடைக்கப்பட்டன.
ஏற்கனவே, சிலைகள் உடைப்பு குறித்து, பரளச்சி போலீசில் புகார் கொடுத்திருந்தும், அச்சம்பவம் தொடர்வதால், ஆத்திரமுற்ற கிராம மக்கள், கீழ்க்குடி மெயின் ரோட்டில், மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு திடீர் பதட்டம் உருவாகவே, அருப்புக்கோட்டை டி.எஸ்.பி., ஜானகிராம், திருச்சுழி இன்ஸ்பெக்டர் கண்ணன், பரளச்சி எஸ்.ஐ., காளைச்சாமி ஆகியோர், கிராம மக்களை சமாதானம் செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்படி, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் இரண்டு மணி நேரம், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


