புதிய லஞ்ச ஒழிப்பு ஆணையராக பிரதீப் குமார் பதவியேற்பு
புதிய லஞ்ச ஒழிப்பு ஆணையராக பிரதீப் குமார் பதவியேற்பு
புதிய லஞ்ச ஒழிப்பு ஆணையராக பிரதீப் குமார் பதவியேற்பு
ADDED : ஜூலை 15, 2011 04:51 AM

புதுடில்லி:மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் புதிய ஆணையராக, பிரதீப் குமார் நேற்று பதவியேற்றார். ''அரசில் உயர்மட்டத்தில் உள்ள ஊழல், இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்,'' என்றும் அவர் கூறினார்.
மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின், (சி.வி.சி.,) 14வது ஆணையராக நியமிக்கப்பட்ட பி.ஜே.தாமஸ் நியமனம் செல்லாது' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து, ராணுவத்துறை செயலராகப் பணியாற்றிய, பிரதீப் குமார், 62, சி.வி.சி.,யின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி மாளிகையில் நடந்த சிறிய விழாவில், பிரதீப் குமாருக்கு, ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், கேபினட் செயலர் அஜித் சேத், தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி, மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நேற்று பதவியேற்ற பிரதீப்குமார், மூன்று ஆண்டு காலத்திற்கு இந்தப் பொறுப்பில் இருப்பார்.பதவியேற்ற பின் நிருபர்களிடம் பேசிய பிரதீப் குமார், ''அரசில் உயர்மட்டத்தில் உள்ள ஊழல், இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும். இந்த விஷயத்தில், சி.வி.சி., உறுதியாகச் செயல்படும்,'' என்றார். அவர் கூறியதாவது:ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் எந்த விதமான சமரசத்திற்கும் இடமில்லை. தனிப்பட்ட ஆதாயங்களுக்காக பழி தீர்க்கும் செயல்களில் மக்கள் ஈடுபடாமல் விலகி இருக்க வேண்டும். நேர்மையானவர்கள் அச்சமின்றி பணியாற்ற முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்.ஊழல் என்பது ஒரு நோய் அது, நாட்டையும், மக்களையும் பீடித்துள்ளது. ஊழல் இல்லாத நடைமுறைகளை உருவாக்க நாங்கள் முற்படுவோம். ஊழல்பேர்வழிகள் விரைவாகவும், நிச்சயமாகவும் தண்டிக்கப்பட வேண்டும். லஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் மக்கள் நிறைய எதிர்பார்க்கின்றனர். அவர் எதிர்பார்ப்பிற்கு ஏற்றார்ப் போல் செயல்படுவோம். எங்களால் முடிந்தவரை சிறப்பாக செயல்படுவோம்.இவ்வாறு பிரதீப் குமார் கூறினார்.
அவசரமாக விசாரிக்க மறுப்பு: இதற்கிடையில், பிரதீப் குமார் நியமனத்திற்கு தடை விதிக்கக்கோரி, சி.வி.சி.,யின் முன்னாள் ஆணையர் தாமஸ், டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை விரைவாக விசாரிக்க நீதிபதிகள் மறுத்து விட்டார்.தாமஸின் மனு நீதிபதிகள் விக்ரம்ஜித் சென் மற்றும் சிந்தார்த் மிருதுள் ஆகியோர் அடங்கிய, டில்லி ஐகோர்ட்டின் டிவிஷன் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்த போது, 'இந்த கடைசி நேரத்தில், உங்களின் மனுவை அவசர மாக விசாரிப்பது கடினமானது. ஏனெனில், புதிய லஞ்ச ஒழிப்பு ஆணையரின் பதவியேற்பு, காலை 11 மணிக்கு நடைபெறுகிறது' என்றனர். அத்துடன் மனுவை நாளைய விசாரணைக்கு பட்டியலிடும்படி உத்தரவிட்டனர்.


