/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சுயேட்சையாக களம் இறங்கும் ச.ம.க.வினர் : சங்கடத்தில் நெளியும் அ.தி.மு.க.வினர்சுயேட்சையாக களம் இறங்கும் ச.ம.க.வினர் : சங்கடத்தில் நெளியும் அ.தி.மு.க.வினர்
சுயேட்சையாக களம் இறங்கும் ச.ம.க.வினர் : சங்கடத்தில் நெளியும் அ.தி.மு.க.வினர்
சுயேட்சையாக களம் இறங்கும் ச.ம.க.வினர் : சங்கடத்தில் நெளியும் அ.தி.மு.க.வினர்
சுயேட்சையாக களம் இறங்கும் ச.ம.க.வினர் : சங்கடத்தில் நெளியும் அ.தி.மு.க.வினர்
தென்காசி : அ.தி.மு.க.கூட்டணியில் இடம் பெற்றுள்ள ச.ம.க.விற்கு உள்ளாட்சி தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை என்பதால் ஆங்காங்கே ச.ம.க.வினர் சுயேட்சையாக வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்னரே தி.மு.க. தனித்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் என அதன் தலைவர் கருணாநிதி கூறினார். ஆனால் அ.தி.மு.க.பொது செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வெளிப்படையாக எதுவும் கூறாமல் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி பற்றி பேசுவதற்கு தனி குழு அமைத்தார். ஆனால் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கான அ.தி.மு.க.வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வந்தார். பொறுத்து, பொறுத்து பார்த்த தே.மு.தி.க.,-இந்திய கம்யூ.,-மா.கம்யூ.,-புதிய தமிழகம் கூட்டணியை விட்டு வெளியேறி விட்டன.
அ.தி.மு.க.,-ச.ம.க.,இடையே பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் ச.ம.க.விற்கு ஒரு வார்டு கூட ஒதுக்கப்படவில்லை. ஆங்காங்கே மாவட்ட செயலாளர்கள் ச.ம.க.போட்டியிட வாய்ப்பு அளிப்பார்கள் என கூறப்பட்டது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. ச.ம.க.தலைவர் சரத்குமார் தென்காசி தொகுதியிலும், துணைத் தலைவர் நாராயணன் நான்குநேரி தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றுள்ளனர். இதனால் அவர்களால் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என்று கூற இயலவில்லை. இதனை அ.தி.மு.க.தலைமை நன்றாக பயன்படுத்தி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
தென் மாவட்டங்களில் ச.ம.க.விற்கு கணிசமான ஆதரவு உண்டு. இதனை உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வினர் பயன்படுத்திக் கொள்வது அவர்களின் நடவடிக்கையில்தான் இருக்கிறது. ஏற்கனவே தங்களுக்கு ஆதரவு அதிகம் இருக்கும் பகுதிகளில் ச.ம.க.வினர் சுயேட்சையாக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். தங்கள் மீது பரிதாபப்பட்டாவது தாங்கள் போட்டியிடும் வார்டுகளில் அ.தி.மு.க.வினர் வாபஸ் பெற்றுக் கொள்வார்கள் என ச.ம.க.வினர் எதிர்பார்க்கின்றனர். இதனை பார்த்து அ.தி.மு.க.வினர் எதுவும் செய்ய இயலாமல் சங்கடத்தில் நெளியும் நிலைதான் உள்ளது.
இதுபற்றி இரண்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் கேட்ட போது, பெயர் வேண்டாம் என்று கூறிவிட்டு, ''கட்சி தலைமை என்ன கூறுகிறதோ அதனைதான் நாங்கள் செய்ய இயலும்'' என்றனர். இது அவர்கள் தங்களின் கட்சி தலைமை மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறதா? இல்லை அச்சத்தின் வெளிப்பாடா என்று தெரியவில்லை. தென்காசி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இவற்றில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக 10 வார்டுகளில் உள்ளனர். இதில் 5 வார்டுகளில் ம.ம.க. வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த வார்டுகளில் மட்டும் அ.தி.மு.க.வினர் அடக்கி வாசிக்கின்றனர். ம.ம.க. வேட்பாளர்களை எதிர்த்து பணியாற்ற வேண்டாம் என நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளரின் நலன் விரும்பிகள் கூறி வருகின்றனர். அ.தி.மு.க.வேட்பாளரை ஆதரித்து எம்.எல்.ஏ., சரத்குமாரை பிரசாரத்திற்கு அழைக்கவும் அவர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர். ஆனால் ச.ம.க.விற்கு ஒரு வார்டு கூட ஒதுக்க அவர்கள் முன் வரவில்லை.
தென்காசி, கீழப்பாவூர், ஆலங்குளம், செங்கோட்டை, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், கடையம், அம்பாசமுத்திரம் யூனியன் பகுதிகளில் ச.ம.க.வினர் யூனியன் கவுன்சிலர், பஞ்.,தலைவர், டவுன் பஞ்.,கவுன்சிலர் பதவிக்கு ஓரிரு இடங்களில் மட்டும் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இங்கு தங்களை வெற்றி பெற செய்ய அ.தி.மு.க.வினர் ஒத்துழைப்பு அளிப்பர் என ச.ம.க.வினர் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையை அ.தி.மு.க.வினர் நிறைவேற்றுவார்களா? அல்லது அவர்களின் தலைமை போல் கூட்டணி கட்சியை ஏமாற்றுவார்களா? என்பது உள்ளாட்சி தேர்தல் முடிவு வெளியாகும் போதுதான் தெரியவரும்.


