Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/துப்புரவு பணியில் வெளிநாட்டு நிறுவனங்கள் :சட்டசபையில் குற்றச்சாட்டு

துப்புரவு பணியில் வெளிநாட்டு நிறுவனங்கள் :சட்டசபையில் குற்றச்சாட்டு

துப்புரவு பணியில் வெளிநாட்டு நிறுவனங்கள் :சட்டசபையில் குற்றச்சாட்டு

துப்புரவு பணியில் வெளிநாட்டு நிறுவனங்கள் :சட்டசபையில் குற்றச்சாட்டு

ADDED : செப் 14, 2011 01:22 AM


Google News
சென்னை :''துப்புரவு கான்ட்ராக்ட் எடுக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், அந்த நாடுகளில் இருந்து துப்புரவுப் பணியாளர்களை கொண்டுவருவதில்லை. இங்குள்ள பணியாளர்களைத் தான் பயன்படுத்துகின்றன. இதனால், துப்புரவுப் பணியாளர்களுக்கு பலன் கிடைப்பதில்லை,'' என்று, சட்டசபையில் செ.கு.தமிழரசன் தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:ஆறுமுகம் - இந்திய கம்யூனிஸ்ட்: கடந்த தி.மு.க., ஆட்சியில், தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் உரிமை பறிக்கப்பட்டது. சங்கங்கள் துவக்க நினைத்தாலே, வேலை பறிக்கப்படும் நிலை இருந்தது.அமைச்சர் செல்லபாண்டியன்: ஒரு நிறுவனத்தில் உள்ள தொழிலாளர்களில் 10 சதவீதம் உறுப்பினர்கள் இருந்தால், அந்த சங்கத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று, தனியாக சட்டம் இல்லை. எனினும், இதுபற்றி பரிசீலிக்கப்படும்.ஆறுமுகம்: 'சுமங்கலி' திட்டத்தை பஞ்சாலை நிறுவனங்கள் அமல்படுத்தின. இதுபற்றி ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதா என்று தெரியவில்லை. ஐந்து ஆண்டு தி.மு.க., ஆட்சியில், தொழிலாளர் துறை செயலிழந்தது. கடந்த மூன்று மாதங்களாகத் தான், இத்துறை எழுந்து செயல்படத் துவங்கியுள்ளது. இதே வேகத்தில் போக வேண்டும்.புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும். தற்போது வடமாநிலங்களில் இருந்து நிறைய தொழிலாளர்கள் இங்கு வருகின்றனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் யார்? என்ன என்று தெரியாமல், தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதுகிறது. புதிய தலைமைச் செயலகத்தை முந்தைய அரசு கட்டிய போது கூட, அதில் ஒரு தமிழ் தொழிலாளி கூட வேலை செய்யவில்லை. இடைத்தரகர்கள் மூலம், வடமாநிலத்தினர் இங்கு அழைத்து வரப்படுகின்றனர்.செ.கு.தமிழரசன் - இந்திய குடியரசு கட்சி: தமிழகத்தில் உள்ள தொழிலாளர்களில் 92 சதவீதத்தினர், அமைப்பு சாரா தொழிலாளர்கள். சலவை, முடி திருத்துதல், துப்புரவு, மயானப் பணி போன்றவற்றை ஒரு சமூகமே செய்ய வேண்டிய நிர்பந்தம் இருந்தது. ஆதிதிராவிடர் ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக வர முடியும்; தலைமைச் செயலராக வர முடியும்; ஆனால், கிராம மணியக்காரராக வர முடியாத நிலை இருந்தது. இதை மாற்றி, அவசர சட்டம் மூலம், 3,500 மணியக்காரர்களை எம்.ஜி.ஆர்., நியமித்தார்.தற்போது, டி.என்.பி.எஸ்.சி., மூலம், எஸ்.சி., எஸ்.டி.,யைச் சேர்ந்த, 1,077 வி.ஏ.ஓ.,க்களை நியமிக்க தடை இருந்தது. இந்த தடையை தமிழக அரசு உடைத்துள்ளது.அமைச்சர் தங்கமணி : அ.தி.மு.க., ஆட்சியில் தான் இந்த தடையாணை விதிக்கப்பட்டது போல, ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் பேசினார். தற்போது தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளதால், 1,077 வி.ஏ.ஓ.,க்கள் நியமிக்கப்படுவர்.செ.கு.தமிழரசன் : செருப்பு தைப்பவர்கள், நடைபாதைகளில் தான் சிறிய தடுப்பு போட்டு தொழில் செய்கின்றனர். முந்தைய ஆட்சியில், சிங்கார சென்னை ஆக்குகிறோம் என்று கூறி, செருப்பு தைக்கும் தொழிலை முழுமையாக அழித்து விட்டனர். தற்போது, வெயில், மழையில் அவர்கள் தவித்து வருகின்றனர்.உள்ளாட்சிகளில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள், பணி நிரந்தரமின்றி உள்ளனர். அவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். தற்போது துப்புரவுத் தொழில், பன்னாட்டு நிறுவனங்களிடம் கான்ட்ராக்ட் விடப்படுகிறது. அந்த நிறுவனங்கள், சிங்கப்பூர், அமெரிக்காவில் இருந்து தொழிலாளர்களைக் கொண்டுவருவதில்லை. இங்குள்ள இதே துப்புரவு தொழிலாளிகள் தான் வேலை செய்ய வேண்டும். இதனால், நிறுவனங்களுக்குத் தான் பலன் கிடைக்கிறது. தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை.விஜயதாரணி- காங்கிரஸ்: பல்வேறு மாவட்டங்களில் நெசவுத் தொழில் பாதிக்கப்பட்டதால், பல இளைஞர்கள் டாஸ்மாக் பார்களில் எடுபிடிகளாகவும், ஓட்டல்களில் சப்ளையராகவும், சித்தாள்களாகவும் பணியாற்றி பிழைக்கின்றனர். வங்கியில் கடன் பெற்று, பட்டு நெசவு செய்யும் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட, மத்திய அரசு 3,500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. தமிழகத்துக்கு 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, ஐந்து லட்ச ரூபாய் கடன் வாங்கி கட்ட முடியாமல் உள்ள சிறு நெசவாளர்களது கடனை அசலும், வட்டியும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.அமைச்சர் ரமணா: இந்த தொகையை மத்திய அரசு இதுவரை ஒதுக்கவில்லை. 600 கோடி ரூபாய் கேட்டுள்ளோம். வந்ததும், பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்கு நிச்சயம் ஒதுக்கப்படும்.ராஜா - தே.மு.தி.க., : தமிழகத்தில் 18 லட்சம் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். 12 மணி நேரம் வேலை வாங்கும் தனியார் நிறுவனங்களை கண்டறிந்து, வேலை நேரத்தை குறைக்கச் செய்ய வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us