/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஆழியாறு அணை தண்ணீர் திறப்பு : 22,332 ஏக்கருக்கு பாசனம்ஆழியாறு அணை தண்ணீர் திறப்பு : 22,332 ஏக்கருக்கு பாசனம்
ஆழியாறு அணை தண்ணீர் திறப்பு : 22,332 ஏக்கருக்கு பாசனம்
ஆழியாறு அணை தண்ணீர் திறப்பு : 22,332 ஏக்கருக்கு பாசனம்
ஆழியாறு அணை தண்ணீர் திறப்பு : 22,332 ஏக்கருக்கு பாசனம்
ADDED : செப் 08, 2011 01:52 AM
பொள்ளாச்சி : ஆழியாறு அணையில் இருந்து பொள்ளாச்சி, வேட்டைக்காரன்புதூர் கால்வாயில் பாசனத்திற்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.ஆழியாறு அணையின் மூலம் பொள்ளாச்சி கால்வாயில் 23 ஆயிரத்து 488 ஏக்கரும், வேட்டைக்காரன்புதூர் கால்வாயில் 11 ஆயிரத்து 181 ஏக்கரும், சேத்துமடை கால்வாயில் 5,044 ஏக்கரும், ஆழியாறு ஊட்டுக்கால்வாயில் 4,665 ஏக்கரும் பாசனம் பெறுகிறது.
இதில், பொள்ளாச்சி கால்வாயில் 'பி' மண்டல பாசனத்திற்கும், மற்ற கால்வாயில் 'ஏ' மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டி, ஆழியாறு படுகை திட்டக்குழு சார்பில் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை ஏற்று ஆழியாறு அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்க நேற்று முன்தினம் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி, ஆழியாறு அணையில் இருந்து நேற்று பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. பொள் ளாச்சி கால்வாயில் ஷட்டரை, கலெக்டர் கருணாகரன் இயக்கி வைத்தார். அதையடுத்து, வேட்டைக்காரன்புதூர் கால்வாயிலும் ஷட்டர் இயக்கப்பட்டு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆழியாறு அணையில் இருந்து நேற்று பொள்ளாச்சி கால்வாயில் வினாடிக்கு 193 கனஅடியும், வேட்டைக் காரன்புதூர் கால்வாயில் 75 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. கலெக்டர் கருணாகரன் கூறுகையில், ''பாசன காலத்தில் வடகிழக்கு பருவமழை சீசனும் துவங்கும் என்பதால், தற்போது வழங்கும் தண்ணீர் விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். ஆழியாறு ஊட்டுக்கால்வாயில் 'ஏ' மண்டல பாசனம், சேத்துமடை கால்வாய் 'ஏ' மண்டல பாசனத்திற்கு வரும் 30ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்த இரண்டு கால்வாயில் மொத்தம் 4,832 ஏக்கர் பாசனம் பெறும். ஆழியாறு அணையில் இருந்து வழங்கப்படும் தண்ணீர் மூலம் 22 ஆயிரத்து 332 ஏக்கர் பாசனம் பெறுகிறது,'' என்றார். பொள்ளாச்சி எம்.பி., சுகுமார், பி.ஏ.பி., தலைமை பொறியாளர் சிவசங்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆழியாறு திட்டக்குழு தலைவர் சின்னசாமி, பகிர்மானக்குழு தலைவர் துரைசாமி ஆகியோர், 'ஆழியாறு படுகைக்கு வழக்கமாக 90 நாட்கள் தண்ணீர் வழங்கப்படுகிறது. தற்போது 75 நாட்கள் தண்ணீர் வழங்க அரசாணை வந்துள்ளது. ஆழியாறு படுகையில் நெல், மக்காச்சோளம் போன்ற பயிர்களை சாகுபடி செய்ய குறைந்தபட்சம் 90 நாட்கள் தண்ணீர் தேவை. அதனால், ஆழியாறு பாசனத்திற்கு விவசாயிகள் கேட்டுக்கொண்டபடி 90 நாட்கள் தண்ணீர் வழங்க வேண்டும்' என, கலெக்டரிடம் வலியுறுத்தினர். 'கூடுதலாக தண்ணீர் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்' என, கலெக்டர் உறுதியளித்தார்.


