குழந்தைகள் திருமணம் குறித்து பள்ளிகளில் கவுன்சிலிங்:தீர்ப்பில் நீதிபதிகள் யோசனை
குழந்தைகள் திருமணம் குறித்து பள்ளிகளில் கவுன்சிலிங்:தீர்ப்பில் நீதிபதிகள் யோசனை
குழந்தைகள் திருமணம் குறித்து பள்ளிகளில் கவுன்சிலிங்:தீர்ப்பில் நீதிபதிகள் யோசனை
ADDED : அக் 04, 2011 12:47 AM
சென்னை:'பதினெட்டு வயது பூர்த்தியடையாத, மைனர் பெண்ணை திருமணம் செய்தால், அந்த திருமணம் ரத்து செய்யப்படக் கூடியது தான்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.மேலும், குழந்தைகள் திருமணம் குறித்து, மாணவ-மாணவியருக்கு கவுன்சிலிங் நடத்தவும், நீதிபதிகள் சிபாரிசு செய்தனர்.திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி, ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவருக்கு வயது 17. வாலிபர் ஒருவரைக் காதலித்தார். இருவரும், திருமணம் செய்து கொண்டனர்.
வாலிபரின் பெற்றோர், இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டனர். ஆனால், பெண்ணின் தந்தை, திருவள்ளூர் போலீசில் புகார் அளித்தார். ஐகோர்ட்டில், 'ஹேபிபியஸ் கார்பஸ்' என்ற ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்தார்.இம்மனு, ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. கணவருடன் சேர்ந்து வாழ, அந்த மைனர் பெண் விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, 18 வயதுக்குக் குறைவான பெண்ணை திருமணம் செய்தால், அந்தத் திருமணம் செல்லுமா? கணவர் வசம் அந்தப் பெண்ணை ஒப்படைக்கலாமா? என்கிற கேள்விகளுக்கு விடை காண, 'முழு பெஞ்ச்' விசாரணைக்கு அனுப்பப்பட்டது.இப்பிரச்னையை, நீதிபதிகள் பாஷா, சுதந்திரம், நாகமுத்து அடங்கிய 'பெஞ்ச்' விசாரித்தது. 'முழு பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:ஒருவர், 18 வயதுக்குக் குறைவான பெண்ணை திருமணம் செய்து கொண்டால், அந்தத் திருமணம் ரத்து செய்யப்படக் கூடியது தான். குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின்படி, சம்பந்தப்பட்ட கோர்ட் அந்தத் திருமணத்தை ரத்து செய்யும் வரை, அந்தத் திருமணம் அமலில் இருக்கும்.இவ்வாறு, 18 வயதுக்குக் குறைவான மைனர் பெண்ணை திருமணம் செய்பவர், வழக்கமான திருமணம் மூலம் பெறும் உரிமைகளை, இங்கு பெற முடியாது. அப்பெண்ணின் பாதுகாவலராக அவர் இருக்க முடியாது.
கணவருடன் செல்ல வேண்டும் என, அந்தப் பெண் விரும்பினாலும் கூட, தன்வசம் அந்தப் பெண்ணை வைத்திருக்க, திருமணம் செய்த வாலிபருக்கு உரிமையில்லை. ஆனால், அந்தப் பெண்ணின் நலன் நாடுபவர்கள், யாராவது சட்டவிரோத காவலில் அப்பெண்ணை வைத்திருந்தால், அவரை விடுவிக்கக் கோரி வழக்கு தொடரலாம்.எனவே, 'ஹேபிபியஸ் கார்பஸ்' வழக்குகளில், 18 வயதுக்குக் குறைவான பெண்ணை, யார் வசம் வைத்திருப்பது என்பதை முடிவெடுக்கும் போது, அப்பெண்ணின் பாதுகாப்பு உள்ளிட்ட அதன் நலன்களை, கோர்ட் பரிசீலிக்க வேண்டும்.பெற்றோருக்கு உள்ள சட்டப்பூர்வ பாதுகாவலன் என்பதில் இருந்து, 'மைனர்' பெண்ணை விலகிச் செல்ல அனுமதிக்க முடியாது. ஆனால், பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை என அப்பெண் தெரிவித்தால், அவ்வாறு முடிவெடுக்க அப்பெண்ணுக்குத் திறன் இருக்கிறது என கோர்ட் கருதினால், அந்தப் பெண்ணை, அதன் பெற்றோர் வசம் இருக்க வேண்டும் என, கோர்ட் நிர்பந்திக்க முடியாது.
அதற்குப் பதில், அந்தப் பெண்ணின் விருப்பப்படி, தகுதியான நபர்களிடம் ஒப்படைக்கலாம். குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில், அந்த மைனர் பெண்ணை ஒப்படைக்கலாம். ஆனால், எந்தக் காரணத்தைக் கொண்டும், சிறார் பாதுகாப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள சிறப்பு இல்லங்களில் வைக்கக் கூடாது.குழந்தைகள் திருமணம், இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டம் குறித்து, அரசு விரிவான விளம்பரங்களை வெளியிட வேண்டும்.மக்களைச் சென்றடையும் விதத்தில், அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் மூலம், விளம்பரப்படுத்த வேண்டும். குழந்தை திருமணத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றி, மாணவ, மாணவியருக்கு கவுன்சிலிங் வகுப்புகள் நடத்த, பள்ளிகளுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு, 'முழு பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.


