தமிழகத்தில் பலரிடம் ரூ.1 கோடி மோசடி:அமைச்சரின் உறவினராக நடித்த ஆசாமி கைது
தமிழகத்தில் பலரிடம் ரூ.1 கோடி மோசடி:அமைச்சரின் உறவினராக நடித்த ஆசாமி கைது
தமிழகத்தில் பலரிடம் ரூ.1 கோடி மோசடி:அமைச்சரின் உறவினராக நடித்த ஆசாமி கைது
ADDED : ஆக 27, 2011 11:53 PM
கோவை:கோவையில், வெளிநாட்டு கார்களை விற்பனை செய்வதாகக் கூறி, தனியார் நிறுவன மேலாளரிடம் 15.5 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆசாமி கைது செய்யப்பட்டார். விசாரணையில் இவர், பலரிடம் 1 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் அண்ணாதுரை, 42. கடந்த 2009ல், கோவை ராம் நகரில், 'டீரா பில்டர்ஸ் அண்ட் புரமோட்டர்ஸ்' என்ற நிறுவனத்தை துவக்கி, வீடு, அடுக்கு மாடி குடியிருப்பு, வணிக வளாகம் கட்டித் தருவதாக விளம்பரம் செய்திருந்தார்.இதை நம்பிய பலரும், கட்டட கட்டுமானப் பணியை ஒப்படைத்தனர். கோவை நகரிலுள்ள தனியார் நிறுவன மேலாளர் சுந்தரம் என்பவருடன், பழக்கம் ஏற்பட்டது.அவரிடம் அண்ணாதுரை, 'என் சொந்த உபயோகத்துக்காக வெளிநாட்டிலிருந்து, இரு விலை உயர்ந்த கார்களை, 'புக்கிங்' செய்திருக்கிறேன். அதில் ஒன்றை உங்களுக்கு வழங்க முடிவு செய்திருக்கிறேன்' எனக் கூறி, அதற்கான முன்பணமாக, 15.5 லட்ச ரூபாயை பெற்று, திடீரென தலைமறைவானார்.
அதிர்ச்சியடைந்த சுந்தரம், கோவை மாநகர போலீஸ் மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்தார். தனிப்படை அமைத்து தேடியதில், சென்னை கோடம்பாக்கம் பகுதியில் வசிக்கும், தனது மூன்றாவது மனைவியின் வீட்டில் அண்ணாமலை பதுக்கியிருப்பது தெரிந்து, நேற்று கைது செய்யப்பட்டார்.
இவரிடமிருந்து 12 மொபைல் போன்கள், 67 ஆயிரம் ரூபாய் ரொக்கம், கார் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில் கோவை, சிங்காநல்லூர், நீலிக்கோனாம்பாளையத்தில் வசிக்கும் ஜெகதீசனிடம், 23 லட்ச ரூபாய், கோவை - சத்தி சாலையிலுள்ள அலமு நகரில் வசிக்கும் மஞ்சுளாவிடம், 3.5 லட்ச ரூபாய் மோசடி செய்திருப்பது தெரிந்தது. கைது செய்யப்பட்ட அண்ணாதுரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் கூறியதாவது:
எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள அண்ணாதுரை, தகுதிக்கு மீறிய ஆசையால், அந்தஸ்து மிக்கவராகவும், அமைச்சர்களின் உறவினராகவும் கூறி நடித்து, பண மோசடி செய்துள்ளார். இதற்கு ஏதுவாக பல பெயர்களை கூறி வந்ததுடன், கடந்த ஆட்சியின் போது, காரில் தி.மு.க., கொடி மற்றும் வி.ஐ.பி., என்ற ஸ்டிக்கரையும் பயன்படுத்தி வந்தார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் காரில், அ.தி.மு.க., கொடியை கட்டியதுடன், தன்னை வழக்கறிஞர் எனக் கூறி, அதற்கான ஸ்டிக்கரையும் பயன்படுத்தியுள்ளார். கட்டட கட்டுமானம் குறித்து எந்த அனுபவமும் இல்லாமல், பலரிடமும் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். மோசடிகளுக்கு வசதியாக, 12 விதமான, 'சிம் கார்டு'டன் கூடிய மொபைல் போன்களை பயன்படுத்தி வந்தார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த இவரது முதல் மனைவிக்கு, இரு குழந்தைகள்; அவரை விவாகரத்து செய்து, மேலும் இரு பெண்களை அடுத்தடுத்து மணமுடித்துள்ளார். அண்ணாதுரைக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது மனைவியை பெசன்ட் நகர் வாடகை வீட்டிலும், மூன்றாவது மனைவியை கோடம்பாக்கம் வாடகை வீட்டிலும் வைத்து குடித்தனம் நடத்தியுள்ளார்.
கோவையில் மோசடி வேலையை அரங்கேற்றிய இந்நபர், போலீசின் தேடலுக்கு பயந்து, சென்னைக்கு தப்பிச் சென்று, அங்கு, 'கோயல் புரமோட்டர்ஸ்' என்ற பெயரில், புதிதாக வேறு ஒரு நிறுவனத்தை துவக்கினார்.
இவரது மனைவியர் வசிக்கும் வீடுகள் மற்றும் நிறுவன அலுவலக கட்டடத்துக்கு மட்டும், மாதம் 1 லட்சம் ரூபாய் வரை, வாடகை கொடுத்து வந்துள்ளார். கோவைக்கு வரும் முன், புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் மோசடி நிறுவனங்களை நடத்திய இவர், வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் 1 கோடி ரூபாய் வரை, மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இவ்வாறு சந்திரசேகரன் தெரிவித்தார்.


