/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தேசிய நெடுஞ்சாலையில் மருத்துவ கழிவுகள்: மக்கள் அச்சம்தேசிய நெடுஞ்சாலையில் மருத்துவ கழிவுகள்: மக்கள் அச்சம்
தேசிய நெடுஞ்சாலையில் மருத்துவ கழிவுகள்: மக்கள் அச்சம்
தேசிய நெடுஞ்சாலையில் மருத்துவ கழிவுகள்: மக்கள் அச்சம்
தேசிய நெடுஞ்சாலையில் மருத்துவ கழிவுகள்: மக்கள் அச்சம்
ADDED : ஜூலை 13, 2011 09:57 PM
உடுமலை : கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், அபாயகரமான மருத்துவ
கழிவுகள் கொட்டப்படுவது மீண்டும் அதிகரித்துள்ளதால், கிராம மக்களிடையே பீதி
ஏற்பட்டுள்ளது. உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களான துங்காவி,
தும்பலப்பட்டி உட்பட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இயற்கை உரம்
என்ற பெயரில் கேரளாவிலிருந்து மருத்துவ கழிவுகள் கொண்டு வந்து
விளைநிலங்களில் கொட்டப்பட்டன. அறுவை சிகிச்சையின் போது நீக்கப்படும் மனித
உறுப்புகள், பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்த கூடிய காலாவதியான மருந்துகள்
போன்றவை உரம் என்ற பெயரில் டன் கணக்கில் கேரளாவிலிருந்து லாரியில் கொண்டு
வரப்பட்டது. இதற்கு உடுமலை பகுதி விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு
கிளம்பியதையடுத்து தும்பலப்பட்டி கிராமத்தில் இருந்து மருத்துவ கழிவுகள்
மீண்டும் அப்போதைய கலெக்டர் உத்தரவின் அடிப்படையில் மீண்டும் கேரளாவிற்கே
திரும்பி அனுப்பப்பட்டன. இப்பிரச்னை ஒய்ந்த பின் கோவை-திண்டுக்கல் தேசிய
நெடுஞ்சாலை, பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலைகளின் பல இடங்களில்
மருத்துவ கழிவுகள், தோல் கழிவுகள் கொட்டுவது தொடர்கதையானது.
கேரளாவிற்கு பல்வேறு சரக்குகளை எடுத்து செல்லும் லாரிகள் திரும்பி வரும்
போது இவ்வகை கழிவுகளை கொண்டு வந்து இரவு நேரங்களில் ரோட்டோரத்தில்
கொட்டுவது தெரியவந்தது. இதனையடுத்து, கிராம மக்கள் மற்றும் வருவாய்துறை
அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு ரோட்டோரத்தில் கழிவுகள்
கொட்டப்படுவது தடுக்கப்பட்டது. தற்போது கோவை-திண்டுக்கல் தேசிய
நெடுஞ்சாலையில் கேரள மாநில மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது அதிகரித்து
வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் அந்தியூர் கிராமத்திலிருந்து கோமங்கலம்
வரையுள்ள இரண்டு கி.மீ., தூரத்தில் விளைநிலங்கள் பயன்படுத்தப்படாமல்
முட்காடாக உள்ளது. இப்பகுதியில், கடந்த சில நாட்களாக மருத்துவ கழிவுகள்
உட்பட பல்வேறு கழிவுகள் மீண்டும் கொட்டப்பட்டு வருகின்றன. சில இடங்களில்
சிறிய குழிகள் தோண்டப்பட்டு கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இந்த கழிவு
குவியலில் பிணவறைகளில் பயன்படுத்தப்படும் மூங்கில் பாய் மற்றும் அழுகிய
நிலையில் சில மருத்துவ கழிவுகள் கிடக்கிறது. இதனால், இப்பகுதியில் கடும்
துர்நாற்றம் வீசி வருகிறது. அருகிலுள்ள அந்தியூர் கிராமம் வரை துர்நாற்றம்
வீசுகிறது. மண்ணுக்குள் அதிகளவு கழிவுகள் கொட்டி வைக்கப்படும் அபாயம்
இருப்பதால் மண் வளமும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
மருத்துவ கழிவுகள் அபாயகரமான முறையில் தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும்
கொட்டப்பட்டு வரும் சம்பவம் இப்பகுதி கிராம மக்களிடையே பீதியை
ஏற்படுத்தியுள்ளது.


