Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தாலுகாவை பிரிக்க கோரிக்கை

தாலுகாவை பிரிக்க கோரிக்கை

தாலுகாவை பிரிக்க கோரிக்கை

தாலுகாவை பிரிக்க கோரிக்கை

ADDED : ஜூலை 19, 2011 09:33 PM


Google News

பொள்ளாச்சி : 'பொள்ளாச்சி தாலுகாவை மூன்றாக பிரித்தால் நிர்வாகம் எளிமையாவதுடன், மக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும்' என, கொ.மு.க., கோரிக்கை விடுத்துள்ளது.பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் அழகிரிசாமியிடம், கொ.மு.க., மாவட்ட செயலாளர் நித்தியானந்தன், மாநில இளைஞரணி செயலாளர் இளம்பரிதி ஆகியோர் தலைமையில் கட்சியினர் கொடுத்த மனு: பொள்ளாச்சி தாலுகாவை பிரித்து கூடுதல் தாலுகா உருவாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளதை வரவேற்கிறோம்.

இரண்டாக பிரித்து பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தாலுகாக்களை ஏற்படுத்தி பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தின் அனைத்து பகுதிகளையும் கிணத்துக்கடவு தாலுகாவில் சேர்க்கப்படுவதாக தெரியவந்துள்ளது. வடக்கு ஒன்றியத்தின் பெரும் பகுதிகள் பொள்ளாச்சி நகரத்தை ஒட்டி அமைந்துள்ளது. தமிழக கேரளா எல்லையில் உள்ள கோபாலபுரம் பகுதிகள் வடக்கு ஒன்றியத்தில் உள்ளது. கிணத்துக்கடவு தாலுகாவுடன் சேர்க்கும் போது அங்குள்ள பொதுமக்கள் இரண்டு பஸ்கள் மாறி 35 கிலோமீட்டர் கடந்து தாலுகா அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். அதனால், வடக்கு ஒன்றிய பகுதிகளை பொள்ளாச்சி தாலுகாவில் சேர்க்க வேண்டும். கிணத்துக்கடவு, வடசித்தூர், கோவில்பாளையம் ஆகிய உள்வட்டங்களை இணைத்து கிணத்துக்கடவு தாலுகாவை உருவாக்க வேண்டும். ஆனைமலை, மார்ச்சநாயக்கன்பாளையம், கோட்டூர் உள்வட்டங்களை இணைத்து ஆனைமலை தாலுகாவும், பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கோலார்பட்டி, ராமபட்டிணம், பெரியநெகமம் ஆகிய உள்வட்டங்களை கொண்டு பொள்ளாச்சி தாலுகாவும் அமைக்க வேண்டும். பொள்ளாச்சியை மூன்று தாலுகாவாக பிரிக்கும் போது நிர்வாக வசதிக்கு எளிமையாக இருக்கும். மக்களின் பிரச்னைகள் உடனுக்குடன் தீர்க்க முடியும். மேலும் பொள்ளாச்சியை தலைமையாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us