மாண்டலின் சீனிவாஸ் - ஸ்ரீ சேர்ந்து வாழ வாய்ப்பில்லை : ஐகோர்ட் உத்தரவு
மாண்டலின் சீனிவாஸ் - ஸ்ரீ சேர்ந்து வாழ வாய்ப்பில்லை : ஐகோர்ட் உத்தரவு
மாண்டலின் சீனிவாஸ் - ஸ்ரீ சேர்ந்து வாழ வாய்ப்பில்லை : ஐகோர்ட் உத்தரவு
ADDED : செப் 27, 2011 11:28 PM
சென்னை: பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் சீனிவாசுக்கு, விவாகரத்து வழங்கியது செல்லும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மாண்டலின் சீனிவாசுக்கும், ஆந்திராவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மகள் ஸ்ரீ என்பவருக்கும், 1994ம் ஆண்டு, திருப்பதியில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, ஒரு மகன் உள்ளார்.
மனைவியின் நடவடிக்கையால் மன உளைச்சல் ஏற்பட்டதாகக் கூறி, விவாகரத்துக் கோரி, சென்னை குடும்ப நல கோர்ட்டில் சீனிவாஸ் மனுத் தாக்கல் செய்தார். இவர்களுக்கு இடையே நடந்த திருமணத்தை ரத்து செய்து, குடும்ப நல கோர்ட் உத்தரவிட்டது. 2009ம் ஆண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், ஸ்ரீ மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: பழைய விஷயங்களை மறப்பதும், கணவன்-மனைவியாக புதிய உறவைத் துவங்குவதும், இருவருக்குமே கடினமானது. கடந்த 15 ஆண்டுகளாக, இருவருமே பிரிந்து தான் வாழ்கின்றனர். இந்தக் காலகட்டத்தில், அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு நடந்த திருமணம், உணர்வுப்பூர்வமாக தற்போது இல்லை. இதைச் சரி செய்ய முடியாது. இருவருமே ஒன்று சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பில்லை. விவாகரத்து தான் ஒரே நிவாரணம். தலா ஐந்து லட்ச ரூபாயை ஸ்ரீக்கும், மகனுக்கும் வழங்க வேண்டும் என, குடும்ப நல கோர்ட் உத்தரவிட்டது. ஒரு மாதத்தில், மேலும் தலா ஐந்து லட்ச ரூபாயை, இருவருக்கும் சீனிவாஸ் வழங்க வேண்டும். இது, இறுதி செட்டில்மென்ட் ஆகும். இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.


