ADDED : அக் 06, 2011 02:12 AM
சேலம்: சேலம், சேர்வராயன் மலைப்பகுதியில், சுற்றித்திரிந்து காஃபி எஸ்டேட்டுக்குள் நுழையும் காட்டு எருமைகளை கட்டுப்படுத்த, வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சேலம், சேர்வராயன் மலைப்பகுதியில், ஏற்காடு மற்றும் பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன. சேர்வராயன் மலைப்பகுதியில் வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் தனியார் நிலங்கள் காணப்படுகின்றன. மலைப்பகுதியில், பெரும்பாலான நிலங்கள் தனியார் வசமே உள்ளது.
இப்பகுதியில், தனியார் நிறுவனத்தாரின் காஃபி எஸ்டேட்கள் அதிகம் உள்ளன. ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே மரங்கள் வெட்டப்பட்டு வந்ததால், அடர்த்தியாக இருந்த சேர்வராயன் மலைப்பகுதி, தற்போது அடர்த்தியின்றி காணப்படுகிறது. மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வந்ததால், அடர்ந்த வனப்பகுதியில் கூட்டம் கூட்டமாக வசித்து வந்த காட்டு எருமைகள், வனப்பகுதியில் இருந்து விலகி, வெளியே வர ஆரம்பித்தன.
தண்ணீருக்காகவும், தீவனங்களுக்காகவும் இரைதேடி வரும் காட்டு எருமைகள், தனியாருக்கு சொந்தமான காஃபி எஸ்டேட்டுக்குள் புகுந்து விடுகின்றன. அங்குள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீரை குடித்து விட்டு சேதப்படுத்தி வருகின்றன. மேலும், காஃபி எஸ்டேட்டுக்குள் புகும் எருமைகள், ஊடு பயிர்களையும் சேதப்படுத்துகின்றன. இதற்கு தீர்வு காண முடியாமல், வனத்துறையினரும், காஃபி எஸ்டேட் முதலாளிகளும் திணறி வருகின்றனர்.
சேலம் மாவட்ட வன அலுவலர் சுகிர்தராஜ் கோயில்பிள்ளை கூறியதாவது:
சேர்வராயன் மலைப்பகுதியில், 12 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் காஃபி தோட்டங்கள் உள்ளன. 2,000 காட்டு எருமைகள் இருக்கலாம் என தெரிகிறது. வனப்பகுதியில் தண்ணீர் கிடைக்காததால், காட்டு எருமைகள் எஸ்டேட்டுக்குள் புகுந்து விடுகின்றன.
காஃபி எஸ்டேட் பகுதியில் புல்வெளிகள் அதிகம் இருப்பதால், சில காட்டு எருமைகள் புல்களை சாப்பிட்டு விட்டு, அங்கேயே தங்கி விடுகின்றன. அங்கு தங்கும் எருமைகள், காஃபி செடிகளின் பட்டைகளை சேதப்படுத்துகின்றன. இதனால், காஃபி எஸ்டேட் முதலாளிகள், பல இழப்புகளை சந்திக்க வேண்டியுள்ளது.
காட்டு எருமைகளை எஸ்டேட்டுக்குள் வரவிடாமல் தடுக்க, வனத்துறையின் சார்பில், மூன்று வகையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் காலத்தில் அழகுக்காக வளர்க்கப்பட்ட லங்டானா என்ற களைச்செடிகள், அளவுக்கு அதிகமாக வளர்ந்து, காடு முழுவதும் பரவியுள்ளது.
முதலில், 50 ஹெக்டரில் உள்ள களைச்செடிகளை வெட்டி, அந்த இடத்தில் காட்டு எருமைகள் சாப்பிடக்கூடிய புல் ரகங்களை வளர்க்க முடிவு செய்துள்ளோம். இரண்டாவதாக, காட்டு பகுதியில் தடுப்பணை, கசிவுநீர் குட்டை கட்டப்படும். இதனால், கோடை காலத்தில் தண்ணீர் கிடைக்காததால், காட்டு எருமைகள் எஸ்டேட்டுகள் நுழைவது தடுக்கப்படும்.
மூன்றாவதாக, இந்த பணி தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நீடிப்பு செய்யப்படும். இவ்வாறு செய்யும் பட்சத்தில், ஓரளவு காட்டு எருமைகளை எஸ்டேட்டுக்குள் செல்வதை கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.


