/உள்ளூர் செய்திகள்/சென்னை/கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 3 பேர் பலிகீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 3 பேர் பலி
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 3 பேர் பலி
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 3 பேர் பலி
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 3 பேர் பலி
ADDED : ஜூலை 24, 2011 03:29 AM
சென்னை:கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், தீவிர மருத்துவ சிகிச்சைப்
பிரிவில், நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், மூன்று நோயாளிகள்
பலியாகினர். மேலும் ஐந்து பேருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது.சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் கீழ் தளத்தில், தீவிர
மருத்துவ சிகிச்சை பிரிவு (ஐ.எம்.சி.யு.,) உள்ளது. இங்கு, ஆஸ்துமா
அலர்ஜி, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி உள்ளிட்ட வியாதிகளால்
பாதிப்படைந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இங்கு, அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை கண்காணிக்கும் பணியில், மூன்று
டாக்டர்கள், இரண்டு வார்டு பாய் மற்றும் ஒரு ஆயா உள்ளனர்.இப்பிரிவில்,
அயனாவரத்தைச் சேர்ந்த வினோத்குமார், 31, சூளைமேட்டைச் சேர்ந்த மணி, 48,
மருத்துவ கல்லூரி நான்காமாண்டு மாணவி மாலதி, 21, அயப்பாக்கம் நாகபூஷணம்,
53, அம்பத்தூரைச் சேர்ந்த நந்தகோபால், 55, விருதாசலத்தைச் சேர்ந்த சத்யா,
28, கொடுங்கையூரைச் சேர்ந்த கிருஷ்ணாபாய், 72, மற்றும் கரையான்சாவடியைச்
சேர்ந்த தமிழரசி, 45, ஆகிய எட்டு பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.இங்கு
நேற்று முன்தினம் இரவு, டாக்டர்கள் பரத்வாஜ், கணேஷ் அரவிந்தன் உட்பட மூன்று
டாக்டர்கள், இரண்டு வார்டு பாய்கள் பணியில் இருந்தனர். நேற்று அதிகாலை
4.40 மணிக்கு, ஐ.எம்.சி.யு.,வின் மருத்துவர் அறையில் இருந்த, 'விண்டோ
ஏசி'யில் திடீரென புகை வந்தது.
சிறிய சத்தமும் கேட்டதால், டாக்டர் பரத்வாஜ் உடனே எழுந்து பார்த்தார்.
சிறிது நேரத்தில், மின்சார ஒயர்கள் தீப்பிடிக்கத் தொடங்கின. இதில், அந்த
அறை முழுக்க புகை மண்டலமானது.டாக்டர் பரத்வாஜ் வெளியில் வந்து அறையின்
மின் இணைப்பை துண்டித்தார். வெளியில் இருந்த நோயாளிகளின் உறவினர்களுக்கு
தகவல் கொடுத்து, நோயாளிகளை வெளியேற்றினார். எழுந்து வர முடியாத சில
நோயாளிகளை, அவரே, 'ஸ்ட்ரெச்சரில்' படுக்க வைத்து வெளியில் கொண்டு வந்தார்.
தீயணைப்பு வண்டிக்கும், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கும் தகவல் கொடுத்தார்.
தீயணைப்பு நிலையம், மருத்துவமனையின் எதிரிலேயே இருந்ததால், தீயணைப்பு
வீரர்களும் உடனே தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.நோயாளிகளின் உடன்
இருந்தவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு, தீ விபத்து நடந்த அறையில்
இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். தீ விபத்தில், ஆஸ்துமா அலர்ஜியால்
சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணாபாய், 72, என்ற பெண், மூச்சுத் திணறல்
ஏற்பட்டு, மீட்கப்பட்ட சிறிது நேரத்தில் இறந்தார்.
மேலும், நேற்று முன்தினம் இரவு உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில்
சேர்க்கப்பட்ட கரையான்சாவடியைச் சேர்ந்த தமிழரசி, 42, அம்பத்தூரைச்
சேர்ந்த நந்தகோபால், 51, ஆகியோரும் இறந்தனர்.மீட்கப்பட்ட, மற்ற ஐந்து
பேரும், மற்றொரு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, தொடர் சிகிச்சை
பெற்று வருகின்றனர்.
இறந்து போன கிருஷ்ணாபாயின் மருமகள் ஆனந்தலட்சுமி கூறியதாவது:தீவிர
சிகிச்சைப் பிரிவு என்பதால் நோயாளிகளின் உறவினர்களுக்கு உள்ளே இருக்க
அனுமதி இல்லை. நாங்கள் வெளியே இருந்தோம். அதிகாலை திடீரென, 'தீப்பிடித்து
விட்டது... ஓடுங்கள்... ஓடுங்கள்...' என்ற டாக்டர் பரத்வாஜின் கூச்சல்
கேட்டு, எழுந்து சென்று பார்த்தோம். அறை முழுவதும் புகை மண்டலமாக இருந்தது.
எங்களால் எளிதில் உள்ளே செல்ல முடியவில்லை. சிறிது நேரத்தில் தீ
விபத்துக்கு காரணமான, 'ஏசி மிஷின்' அருகில் இருந்த படுக்கை தீப்பிடித்து,
மேலும் புகை அதிகமானது. புகையால் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு இருந்த
செயற்கை சுவாசம் கூட, செயலிழந்து போனது.
டாக்டர் பரத்வாஜின் உதவியால், அறையில் இருந்த எட்டு பேரையும் கஷ்டப்பட்டு
மீட்டோம். அவர் தான் தீயணைப்பு வண்டிக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல்
கொடுத்து, உள்ளே இருந்த நோயாளிகளை மீட்க பெரிதும் உதவி செய்தார். அதில்,
மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டிருந்த என் மாமியார் கிருஷ்ணாபாய்,
மீட்கப்பட்ட சிறிது நேரத்தில் இறந்து போனார். மீட்புப் பணியில் ஈடுபட்ட
மருத்துவர் பரத்வாஜ்க்கு, நாங்கள் அனைவரும் நன்றிக் கடன்பட்டு இருக்கிறோம்.
அவர் இல்லை என்றால் அனைவருமே இறந்து போய் இருப்போம்.இவ்வாறு ஆனந்தலட்சுமி
கூறினார்.அமைச்சர் பார்வையிட்டார்:கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், விபத்து
நடந்த பிரிவில், ஐந்து 'ஏசி' இயந்திரங்கள் உள்ளன. இவை, பொதுப்பணித்துறை
பராமரிப்பில் உள்ளன. விபத்து நடந்த சிறிது நேரத்தில், மருத்துவக்கல்வி
இயக்குனர் வம்சதாரா சம்பவ இடத்தைப் பார்வையிட்டார்.அப்போது அவர்
கூறும்போது,'' பாதிக்கப்பட்ட மேலும் ஐந்துபேருக்கு, தனியாக சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு ஏற்கனவே இருந்த நோயின் பாதிப்பு
மட்டுமே தற்போதும் உள்ளது. 'ஏசி' இயந்திரங்களை பொதுப் பணித் துறையினர்
சிறப்பாக பராமரித்து வருகின்றனர்,'' என்றார்.
காலை 7.30 மணிக்கு செய்தித்துறை அமைச்சர் செந்தமிழன், மருத்துவமனைக்கு
வந்து தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு, விபத்தில் தப்பி, சிகிச்சை
பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினார்.தப்பிப் பிழைத்தோம்தாய், சேய்
சிகிச்சை வார்டில் இருந்த பெண்கள் கூறும்போது, ''அதிகாலை 5 மணியளவில்,
திடீரென வெடிப்புச் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் பக்கத்து அறையில்
இருந்து, புகை கிளம்பியது. புகையால், சுவாசிக்கக் கூட முடியவில்லை.
எல்லோரும் குழந்தையை தூக்கிக் கொண்டு தப்பினோம்,'' என்றனர்.இரண்டு லட்சம்
நிதிகீழ்ப்பாக்கம் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின்
குடும்பத்திற்கு, தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்க முதல்வர்
உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு:உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தை
தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும்
தலா இரண்டு லட்சம் ரூபாய், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து
வழங்கப்படும்.மின் கசிவால் இது போன்ற சம்பவம் நடந்தது துரதிருஷ்டவசமாகும்.
இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை,
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் எடுக்க வேண்டும் என்று
உத்தரவிட்டுள்ளேன்.பராமரிப்பு குறைபாடு காரணமா?'ஏசி' இயந்திரம்
வெடிப்பதற்கு, மாறி மாறி வரும் உயர் மற்றும் குறைந்த மின்னழுத்தம், தரமற்ற
மின்சார 'ஒயர்'கள், முறையான பராமரிப்பின்மை தான் காரணம் எனக்
கூறப்படுகிறது. 'ஏசி' பராமரிப்பு குறித்து சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த,
'ஏசி' மெக்கானிக்' ஒருவர் கூறியதாவது:முன்பெல்லாம், 'ஏசி மெஷினில்'
எலக்ட்ரிகல் போர்டு இருந்தது. இப்போது, 'எலக்ட்ரானிக் போர்டாக'
மாறிவிட்டது. இதனால் அசம்பாவித சம்பவங்களில் வெடிக்கும் அபாயம் அதிகம். 15
கிலோ எடை கொண்ட, 'காப்பர் வைண்டிங் கம்ப்ரஸருக்கு' பதில், 3 கிலோ கொண்ட
அலுமினியத்தாலான, 'கம்பரஸர்' வைத்து விடுகின்றனர். இதனால், அதிக
மின்னழுத்தத்தை தாங்க முடியாமல் போகிறது. விலை குறைந்த மின்சார
'ஒயர்'களும் தீ விபத்துக்கு காரணமாகின்றன.