Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

PUBLISHED ON : ஆக 12, 2011 12:00 AM


Google News
Latest Tamil News

அன்பழகன் மீது புகார் உண்டா?



எச்.அன்வர்பாஷா, சென்னையிலிருந்து எழுதுகிறார்: அரசியலமைப்பு சட்டப் பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக, அரசியல் பழிவாங்கும் நோக்கோடு செயல்படும் அ.தி.மு.க., அரசு மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம், தி.மு.க., புகார் அளித்துள்ளது.



தலைவலியும், திருகுவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பர்.

தி.மு.க.,வினருக்கு இப்போது தான் வந்திருக்கிறது. இவர்கள் ஆட்சியில் இருந்தபோது, எத்தனை பேரின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டிருந்திருப்பர்? அவர்களும் மனிதர்கள் தானே! அவர்களுக்கும் இந்த சட்டப் பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமை போன்றவை உண்டு அல்லவா? அதை அவர்களுக்கு வழங்கினரா?



நில மோசடி மற்றும் நில அபகரிப்பு புகார்களில் சிக்கியுள்ளவர்களைத் தானே, காவல்துறை கைது செய்து, சிறையில் அடைக்கிறது.தி.மு.க., ஆட்சியில் இருந்தபோதெல்லாம், பதவி வகித்தவர், அக்கட்சியின் மூத்த தலைவர் அன்பழகன்! அவர் மீது இதுவரை, மோசடிப் புகாரையோ, நில அபகரிப்புப் புகாரையோ யாராவது கொடுத்திருக்கின்றனரா?அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என்றால், பதவியில் இருந்த அத்தனை பேரையும் அல்லவா கைது செய்து, சிறையில் அடைத்திருக்க வேண்டும். புகார் கொடுக்கும் அளவுக்கு புகுந்து விளையாடிவிட்டு, இப்போது, 'குய்யோ... முறையோ' என புலம்பி என்ன பயன்?



ஏன் காத்திருக்கவேண்டும்?ஆர்.சம்பத்குமார், சென்னையிலிருந்து எழுதுகிறார்: இன்னும், தேர்தல் தோல்வி தந்த அதிர்ச்சியிலிருந்து, ராமதாஸ் மீளவில்லை. கழகங்களுடன் இனி கூட்டணி இல்லை என்பதை நிரூபிக்க தீக்குளிக்கட்டுமா என்கிறார். கூட்டணி வைத்ததற்காக, மக்களிடம் மன்னிப்புக் கேட்கிறார்.'வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும், மற்ற தேர்தல்களிலும் தனித்தே போட்டியிடுவோம் அல்லது ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைப்போம்' என, முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார். ஒத்த கருத்துடைய அக்கட்சிகள் எவை என, அவர் விளக்கிக் கூற வேண்டும்!



உள்ளாட்சித் தேர்தல் வரை ஏன் காத்திருக்க வேண்டும்? தி.மு.க., கூட்டணியில் இருந்த போது, வெற்றி பெற்ற தம் கட்சியின் மூன்று சட்டசபை உறுப்பினர்களையும் ராஜினாமா செய்ய வைத்து, அதனால் வரும் இடைத்தேர்தல்களில், தனித்துப் போட்டியிட்டு, தம் கட்சியின் பலத்தை அவர் நிரூபிக்கட்டும்.



'பென்னாகரம் பார்முலா' என, அடிக்கடி சொல்கிறார். அது என்ன என்பது அவருக்கும், அவரது கட்சியினருக்கும் தான் வெளிச்சம். திருமங்கலம் பார்முலா தான், எல்லாருக்கும் தெரிந்தது!

போயஸ் தோட்டத்தின் கதவுகள், மூடப்பட்டு விட்ட நிலையில், ஸ்டாலின் பலத்த எதிர்ப்பையும் மீறி, கருணாநிதியின் அருட்பார்வையால் தான், தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம் பெற்றது என்பதை, மக்கள் அறிவர்; எனவே, அவர் இப்போது இரண்டு கழகங்களையுமே தூற்றுவதை, ரசிக்க மாட்டார்கள்.



தம் கட்சியின் மீது, படிந்து விட்ட, ஜாதிக்கட்சி, கூட்டணி தாவும் கட்சி, வன்முறையில் நாட்டம் கொண்ட கட்சி, இத்யாதி போன்ற எதிர்மறையான அபிப்ராயங்களை அகற்ற முயல்வதே, ராமதாசின் தலையாய பணியாக இருக்கவேண்டும்.



இனி எப்படிஎதிர்க்கும் பா.ஜ.,நா.மு.நாச்சியப்பன், காரைக்குடியிலிருந்து எழுதுகிறார்: கர்நாடக பா.ஜ., அரசை நினைக்கும் போது, வருத்தமாகவும், எடியூரப்பாவை நினைக்கும் போது, அசிங்கமாகவும் உள்ளது. லாலு, முலாயமை விட, கீழ் நிலைக்கு இறங்கி விட்டார். குமாரசாமியை விட, கேவல நிலையில் உள்ளார்.



இப்படிப்பட்ட முதல்வரின் ஊழல்களை பார்த்து, கவர்னர் பரத்வாஜ் என்ன தான் செய்வார்? 'ஜனநாயகம்' என்று கூறி, பரத்வாஜை குற்றம் சொல்வதில் நியாயமே இல்லை.எடியூரப்பா ஒரு கோமாளி. ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவித் தகுதிக்குக் கூட அருகதை அற்றவர்; மானம் பெரிதென நினைத்தால், எப்போதோ பதவி விலகியிருப்பார். பதவி வெறி, அவரையும், பா.ஜ.,வையும் தேசிய அளவில் அவமானப்படுத்தி இருக்கிறது. இனி, எப்படி ஐ.மு., கூட்டணியை, பா.ஜ., எதிர்க்கும்?



'எவன் டி உன்னைபெத்தான்...'ரா.மனோகரன், பெங்களூரிலிருந்து எழுதுகிறார்: எந்த ஒரு மங்கள நிகழ்ச்சியானலும், அந்நாளில் ஒன்று சேரும் இருபது, இருபத்தைந்து வயது இளைஞர் கூட்டம் போடும் ஆட்டம், கொஞ்ச நஞ்சமல்ல.



அதுவும், திருமண மண்டபத்தில், திருமண நாளுக்கு முந்தின இரவு, இந்த இளைஞர் கூட்டம் போதையில் போடும் ஆட்டம், பெண் வீட்டாரையும், மாப்பிள்ளை வீட்டாரையும் கதி கலங்க செய்து விடும். சில இடங்களில், திருமணமே தடைபடும் அளவுக்குப் போய் விடுவதும் உண்டு. இன்றைய சூழலில், இளைஞர்களை நல்வழி படுத்துவது மிகக்கடினம். அதற்குச் சில கட்டுப்பாடுகள் அவசியம்.



வசதியற்ற இளைஞர்களும், வீட்டுக்கு அடங்காத இளைஞர்களும், சில சமூக விரோத கூட்டத்திடமிருந்து, மதுவும், பணமும் கிடைப்பதாலேயே பாதை மாறி, ரவுடிகளாக, கேடிகளாக, கூலிப்படையாக, கைத்தடியாக வாழ்க்கையையே தடம் மாற்றி, மாறி அழிந்து வருகின்றனர். அந்த சமூக விரோத கும்பலின் சொல்லை, செயலாக்கி அழிகின்றனர்.

சினமாக்களிலும், 'டிவி'யிலும், வேண்டாத சீரியல்களும், நிகழ்ச்சிகளும், பாடல்களும் இளைய சமுதாயத்தைக் கெடுத்து வருகின்றன. 'எவண்டி உன்னை பெத்தான் பெத்தான்... என் கண்ல கிடச்சா செத்தான் செத்தான்...' - இன்றைய பாடல்களில் இது ஒரு உதாரணம்.



தினமும் மாலை வேளையில், பள்ளி படிக்கும் பிள்ளைகள் டியூஷன் போகும் நேரத்தில், காதலைப் பற்றி, 'டிவி' சேனலில் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி வேறு. இளைஞர்களை, 'நீ எப்படி காதலித்தாய்? எவ்வளவு நாட்களாய் காதலிக்கிறாய்?' என்றெல்லாம் கேட்ட பின்னர், ஒரு பாடல் ஒளிபரப்பாகும்.



மது குடிப்பதை விவரமாய்க் காட்டும் சினிமாக்களுக்கும், 'டிவி' நிகழ்ச்சிகளுக்கும், பெற்றோரையே எதிர்க்கும் காட்சிகளுக்கும், தடை விதிக்கவேண்டும். சென்சார் இதையெல்லாம் எப்படி அனுமதிக்கிறதோ? அவர்களைச் சுற்றியும் இளைய சமுதாயம் உள்ளதை உணர வேண்டாமா?







      Our Apps Available On




      Dinamalar

      Follow us