ADDED : ஜூலை 13, 2011 12:19 AM
மும்பை : மும்பை பத்திரிகையாளர் ஜோதிர்மய் தேவ் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை எதிர்த்து, மகாராஷ்டிர அரசு, மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
மும்பை பத்திரிகையாளர் ஜோதிர்மய் தேவ் கொலை வழக்கில், மாநில போலீசாரால் நேர்மையாகச் செயல்பட முடியாது என்பதால், சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என, வழக்கறிஞர் வி.பி.பட்டீல், பத்திரிகையாளர் எஸ்.பாலகிருஷ்ணன் மற்றும் மும்பை பத்திரிகையாளர் சங்கம் ஆகியோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தனர். இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் சி.பி.ஐ., கோரிக்கைக்கு எதிராக மாநில அரசுத் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அரசுத் தரப்பு வழக்கறிஞர் ரவி காதம் வாதாடுகையில், ''நகர குற்றப் பிரிவு போலீசார், இவ்வழக்கின் முடிவுக்கு வந்து விட்டனர். கைது செய்யப்பட்ட எட்டு பேர் மீது திட்டமிட்ட சதிச் செயலுக்கான மகாராஷ்டிரா கட்டுப்பாட்டுச் சட்டம் இவ்வழக்கில் பிரயோகிக்கப்பட்டுள்ளது. சிறப்பு விசாரணைகள் தேவைப்படக் கூடிய வழக்குகள் மட்டுமே சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்'' எனக் கூறினார். விசாரணை முடிவில், இவ்வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.


