ADDED : ஜூலை 14, 2011 01:39 AM
தம்மம்பட்டி : தம்மம்பட்டி, சுவேத நதியில் நள்ளிரவு நேரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டரை, வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தம்மம்பட்டி வழியாக பாய்ந்து செல்லும் சுவேத நதியில், அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் மாட்டு வண்டி, டிராக்டரில் மணல் கடத்தி சுற்றுவட்டார பகுதியில் விற்பனை செய்கின்றனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, தம்மம்பட்டி பெரியார் நகர் பகுதி வழியாக செல்லும் ஆற்றில் மணல் அள்ளி டிராக்டரில் கடத்தினர். தகவலறிந்து வந்த கெங்கவல்லி ஆர்.ஐ., ரவிக்குமார், தம்மம்பட்டி கிராம வி.ஏ.ஓ., தேவதுரை உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, சுவேத நதியிலிருந்து மணல் ஏற்றி வந்த டிராக்டரை மடக்கி பிடித்து பறிமுதல் செய்து, டிரைவரிடம் விசாரணை செய்தனர். ஜங்கமசமுத்திரம் சரவணன் என்பவருக்கு சொந்தமான டிராக்டர் எனத் தெரியவந்தது. வருவாய்த்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்த மணல் டிராக்டரை, தம்மம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தியுள்ளனர். மணல் கடத்தி வந்த டிராக்டருக்கு அபராதம் விதிக்க, ஆத்தூர் ஆர்.டி.ஓ., செல்வராஜுக்கு பரிந்துரை செய்தனர்.


