எட்டாவது ஆண்டில் அடியெடுக்கும் மதுரை ஐகோர்ட் கிளை : ஏழு ஆண்டுகளில் 3.86 லட்சம் வழக்குகள் பைசல்
எட்டாவது ஆண்டில் அடியெடுக்கும் மதுரை ஐகோர்ட் கிளை : ஏழு ஆண்டுகளில் 3.86 லட்சம் வழக்குகள் பைசல்
எட்டாவது ஆண்டில் அடியெடுக்கும் மதுரை ஐகோர்ட் கிளை : ஏழு ஆண்டுகளில் 3.86 லட்சம் வழக்குகள் பைசல்

தென் மாவட்ட மக்கள், மாவட்ட கோர்ட்டுகளின் தீர்ப்புகளை எதிர்த்து சென்னை ஐகோர்ட் செல்ல வேண்டியிருந்தது.
இக்கிளையில் திருச்சி, தஞ்சை, கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. தற்போது ஐகோர்ட் கிளையில் 16 கோர்ட் ஹால்கள் உள்ளன. 12 நீதிபதிகள் சுழற்சி முறையில் வழக்குகளை விசாரிக்கின்றனர்.
வழக்குகள் பைசல்: ஒவ்வொரு ஆண்டும் தாக்கலாகும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் தேவையில்லாத பொருட்செலவு, கால விரயம் தவிர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் வரை 4 லட்சத்து 68 ஆயிரத்து 391 வழக்குகள் தாக்கலாகின. இதில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 60 வழக்குகள் பைசலாகின. ஜூன் நிலவரப்படி ஒரு லட்சத்து 2 669 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பைசல் நிலவரம்: 2004ல் 24 ஆயிரத்து 350 வழக்குகள் தாக்கலாகின. இதில் 15 ஆயிரத்து 177 வழக்குகள் பைசலாகின. 2005ல் 61 ஆயிரத்து 33 வழக்குகள் தாக்கலானது. 42 ஆயிரத்து 144 வழக்குள் பைசலாகின. பெருமையளிக்கும் விஷயமாக 2007ல் 64 ஆயிரத்து 291 வழக்குகள் தாக்கலாகின. இதில் 64 ஆயிரத்து 891 வழக்குகள் பைசலாகின. இந்தாண்டு ஜூன் வரை 34 ஆயிரத்து 035 வழக்குகள் தாக்கலாகின. 26 ஆயிரத்து 112 வழக்குகள் பைசலாகின.
அதிகரிக்கும் ரிட் மனுக்கள்: ரிட் மனுக்கள் அதிகளவில் தாக்கலாகின்றன. 2004ல் ரிட் மனுக்கள் மட்டும் 4, 902 தாக்கலாகின. 2, 310 மனுக்கள் பைசல் செய்யப்பட்டன. 2007ல் 11 ஆயிரத்து 28 வழக்குகள் தாக்கலானதில் 12 ஆயிரத்து 234 மனுக்கள் பைசல் செய்யப்பட்டன. இந்தாண்டு ஜூன் வரை 6 461 மனுக்கள் தாக்கலாகின. 4,378 மனுக்கள் பைசலாகின. இந்தாண்டு நீதிபதி கே.சந்துரு 1000 ரிட் மனுக்களை பைசல் செய்தார். குற்ற வழக்குளில் மேல்முறையீடு மனுக்களும் விரைந்து விசாரிக்கப்படுகின்றன.
முக்கிய வழக்குகள்: 2004ல் நீதிபதி எப்.எம்.இப்ராகிம் கலிபுல்லாவுக்கு வந்த தந்தியை ஹேபியஸ் கார்பஸ் மனுவாக கருதி ஐகோர்ட் கிளை விசாரணைக்கு ஏற்றது. சிவகாசி ஜெயலட்சுமியை போலீஸ் அதிகாரிகள் கடத்தியதாக அவரது தந்தை அழகிரிசாமி அனுப்பிய தந்தி, விசாரிக்கப்பட்டு, பரபரப்பை ஏற்படுத்தியது.
கரூர் மாவட்டம் குளித்தலை ஆசிரியை மீனாட்சி கடத்தப்பட்ட வழக்கு, ஜல்லிகட்டு தடை கோரிய வழக்கு, ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்குகள் இங்கு விசாரிக்கப்பட்டன.
உசிலம்பட்டி நல்லதேவன்பட்டி பின்னியக்காளை பெண் பூசாரியாக நியமித்து ஒரு வழக்கில் நீதிபதி கே.சந்துரு உத்தரவிட்டார். ஐகோர்ட் கிளை அமைந்ததன் முழு பயனை தென் மாவட்டத்தினர் அனுபவிக்கின்றனர்.
ஐகோர்ட் கிளை ஊழியர்களுக்கு குடியிருப்புகள் : ஐகோர்ட் கிளையில் தற்போது 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பலர் சென்னை மற்றும் வடமாவட்டத்தினர். ஊழியர்களுக்காக மாட்டுத்தாவணியில் ரூ.25 கோடியில் குடியிருப்புகள் கட்டப்படுகிறது. ஏ, பி, சி, டி பிரிவுகளில் 272 பிளாட்டுகள் கட்டப்படவுள்ளன. இப்பணிகளை நவம்பருக்குள் முடிக்க ஐகோர்ட் தலைமை நீதிபதி எம்.யூசுப் இக்பால் உத்தரவிட்டுள்ளார். மாற்று முறை தீர்வு மையங்கள் மூலம் நிலுவை வழக்குகளை விரைந்து தீர்வு காணவும் தலைமை நீதிபதி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
-நமது சிறப்பு நிருபர்-


