Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தொடரும் திருட்டுகளால் பொதுமக்கள் அச்சம் தியாகதுருகத்தில் மர்ம கும்பல் கைவரிசை

தொடரும் திருட்டுகளால் பொதுமக்கள் அச்சம் தியாகதுருகத்தில் மர்ம கும்பல் கைவரிசை

தொடரும் திருட்டுகளால் பொதுமக்கள் அச்சம் தியாகதுருகத்தில் மர்ம கும்பல் கைவரிசை

தொடரும் திருட்டுகளால் பொதுமக்கள் அச்சம் தியாகதுருகத்தில் மர்ம கும்பல் கைவரிசை

ADDED : ஜூலை 25, 2011 11:24 PM


Google News

தியாகதுருகம் : தியாகதுருகம் பகுதியில் முகாமிட்டு கடந்த மூன்று மாதங்களாக தனியாக இருக்கும் பெண்களிடம் இரவில் செயின் பறிப்பு கும்பலின் தொடர் கைவரிசையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அதேபோல் இரவில் வீடு புகுந்து திருடும் சம்பவமும் அதிகரித்து வருகிறது.தியாகதுருகம் ராஜலட்சுமி நகரில் வசிக்கும் அக்பர் கான் மனைவி ஜெரினாபீ, 35. கடந்த மார்ச் 31ம் தேதி இரவு வீட்டு வாசலில் அமர்ந்திருந்த அவரிடம் இருந்து 4 சவரன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.



இச்சம்பவத்தில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக செயின் பறிப்பு சம்பவம் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது.கடந்த மே 9ம் தேதி இரவு தியாகதுருகம் வெங்கடேஸ்வரா நகரில் வசிக்கும் ராஜா மனைவி சங்கீதா, 30 வீட்டின் அருகே இருந்து கழிவறைக்கு சென்று திரும்பினர். அப்போது மர்ம நபர்கள் சிலர் அவரை பிடித்துக் கொண்டு கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்து சென்றனர்.மறுநாள் (10ம் தேதி) இரவு உதயமாம்பட்டு கிராமத்தை சேர்ந்த சரவணண் மனைவி மோகனா, 27 வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் அவரின் கழுத்தில் இருந்த 4 சவரன் தங்க செயினை பறித்து சென்றனர்.



கடந்த மே 21 ம் தேதி தியாகதுருகம் மலையின் பின்புறம் 30 வயது மதிக்கதக்க இளம் பெண் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுவரை இவர் யார், கொலை செய்தது யார் என்று போலீசார் கண்டுபிடிக்கவில்லை.கடந்த ஜூன் 11 ம் தேதி இரவு தியாகதுருகம் நகரில் சேலம் - சென்னை பிரதான சாலையில் உள்ள விக்னேஷ், 21 என்பவரது நகை கடையில் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் 34 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை திருடி சென்றனர். அதேபோல் புக்குளம் பஸ்நிறுத்தம் அருகில் உள்ள ஒரு மருந்து கடையில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருத ஏ.டி.ஏம்., கார்டை எடுத்து சென்று திருவண்ணாமலையில் உள்ள ஏ.டி.எம்., சென்டரில் 25 ஆயிரம் பணம் எடுத்துள்ளனர்.



பணம் எடுத்த மர்ம நபரின் முகம் அங்கிருந்த காமிராவில் பதிவானது. அதன் அடிப்படையில் விசாரணையை துவக்கியும் இது வரை குற்றவாளியை பிடிக்க முடியவில்லை.கடந்த 6ம் தேதி வாழவந்தான் குப்பம் நடுநிலைப் பள்ளியில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த டி.வி.டி., பிளேயர், சேர், உள்ளிட்ட 5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றனர். தொடர்ந்து கடந்த 7ம் தேதி இரு இடங்களில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். வடதொரசலூர் டி.எல்.எம்., மருத்துவமனையில் நர்சாக பணிபுரியும் பத்மா, 25. தனது கணவருடன் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அவரது கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்க செயினை மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு சென்றனர்.



அன்று இரவு தியாகதுருகம் செல்வம் நகரில் வசிக்கும் சின்னதம்பி என்பவர் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே சென்றிருந்தார். அவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் தங்கம், வெள்ளி நகைகள், பட்டு புடவைகளை திருடி சென்றனர்.கடந்த 20ம் தேதி இரவு புக்குளம் பஸ்நிறுத்தம் அருகில் டைல்ஸ் கடை ஒன்றில் ஓட்டை பிரித்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கட்டிங் மிஷின், பட்டு புடவைகளை திருடி சென்றனர். அடுத்த நாள் (21ம் தேதி) இரவு வடதொரசலூர் முன்னாள் ஊராட்சி தலைவர் கார்கோடன் தாய் கண்ணம்மாள் தனது வீட்டின் பின்பக்க வாசல் வழியே கழிவறைக்கு சென்றபோது மர்ம நபர்கள் சிலர் அவர் அணிந் திருந்த 3 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.கடந்த 3 மாதத்தில் தியாகதுருகம் பகுதியில் பல பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவமும், வீட்டிற்குள் புகுந்து திருடிசெல்வதும் அதிகளவில் நடந்துள்ளது.



இது தொடர்பாக போலீசார் யாரையும் இதுவரை கைது செய்யவில்லை. இதனால் குற்றவாளிகள் தியாகதுருகம் நகரில் முகாமிட்டு சுதந்திரமாக கைவரிசையை காட்டி வருகின்றனர்.செயின் பறிப்பு சம்பவத்தில் நகையை பறிகொடுத்த பெண்கள் தந்த தகவல் படி இதில் மூன்று நபர்கள் தொடர்புடையதாக தெரிகிறது. இருவர் சேர்ந்து பெண்களின் கைகளை பிடித்துக் கொண்டு ஒருவன் நகையை பறித்துக்கொண்டு ஓடி மறைகின்றனர். எதிர்ப்பு தெரிவிக்கும் பெண்களை தாக்கி காயமடைய செய்கின்றனர். இவை அனைத்தும் ஊரின் புறநகர் பகுதியில் உள்ள வீடுகளை குறிவைத்து நடத்தியுள்ளனர்.தப்பி ஓடுவதற்கு வசதியாக வீட்டின் அருகில் வயல் வெளிகளும், கரும்பு தோட்டங்களும் இருக்கும் பகுதியில் இச்சம்பவத்தை மர்ம நபர்கள் அரங்கேற்றுகின்றனர்.



வீடு புகுந்து திருட்டு சம்பவங்கள் பெரும்பாலும் நகரின் பிரதான பகுதியில் உள்ள வீடு, கடைகளில் நடந்துள்ளது.முறையாக திட்டமிட்டு போலீசார் விழிப்புடன் செயல்பட்டால் விரைவில் குற்றவாளிகளை கைது செய்ய வாய்ப்பு இருந்தும் இதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.தியாகதுருகம் பகுதியில் அதிகரித்து வரும் செயின் பறிப்பு சம்பவமும், வீடு புகுந்து திருடுவதும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய எஸ்.பி., சேவியர் தன்ராஜ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us