PUBLISHED ON : ஜூலை 28, 2011 12:00 AM

ஜோதிடம் பார்த்த தேஷ்முக்!
சமீபத்திய மத்திய அமைச்சரவை மாற்றத்தின்போது, கிராமப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த தேஷ்முக், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
பெரும்பாலான அமைச்சர்கள், தங்கள் அலுவலகத்துக்கு வந்து, பொறுப்பை ஏற்றுக் கொண்ட போதிலும், இவர் மட்டும், தன் அமைச்சக அலுவலகத்துக்கு வரவில்லை.'அமைச்சர் ஏன், இன்னும் வந்து பொறுப்பேற்கவில்லை. ஒருவேளை, இந்த துறை ஒதுக்கப்பட்டதில், அதிருப்தி அடைந்திருக்கிறாரோ'என, அமைச்சக அதிகாரிகள் கிசுகிசுத்தனர். அவருக்கு நெருக்கமான சிலர்,'மும்பை கிரிக்கெட் சங்க தேர்தல் பணிகளில், 'பிசி'யாக இருக்கிறார். அதனால், தான் தாமதமாகிறது'என, தங்களுக்கு தெரிந்த தகவலை கூறினர்.ஆனால், உண்மையில் நடந்ததே வேறு. 'ஒவ்வொரு முறையும், பதவி மாறிக் கொண்டே இருப்பதால், இந்த முறை ஒதுக்கப்பட்டுள்ள பதவியாவது நீடிக்குமா'என்ற சந்தேகம், அமைச்சருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதனால், தனக்கு மிகவும் வேண்டப்பட்ட ஜோதிடர் ஒருவரை சந்தித்த தேஷ்முக், 'பொறுப்பேற்பதற்கு நல்ல நேரமாக பார்த்துச் சொல்லுங்கள்'என, கேட்டுள்ளார். அதற்கு அவர்,'தற்போது நேரம் நன்றாக இல்லை. ஒரு சில நாட்கள் கழித்து, புதிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்'என, கூறியுள்ளார். அவர் குறித்த கொடுத்த நேரத்தில் தான் பொறுப்பேற்றுள்ளார்.'எல்லாம் சரிதான். ஆனால், அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறைக்கும், ஜோதிடத்துக்கு என்ன சம்பந்தம் என்று தான், எங்களுக்கு புரியவில்லை'என, கிண்டலடிக்கின்றனர் எதிர்க்கட்சியினர்.