காய்கறி மார்க்கெட்டை குடோனாக மாற்றிய "அட்டாக்' பாண்டி உறவினர் :போலீஸ் பாதுகாப்புடன் "சீல்'
காய்கறி மார்க்கெட்டை குடோனாக மாற்றிய "அட்டாக்' பாண்டி உறவினர் :போலீஸ் பாதுகாப்புடன் "சீல்'
காய்கறி மார்க்கெட்டை குடோனாக மாற்றிய "அட்டாக்' பாண்டி உறவினர் :போலீஸ் பாதுகாப்புடன் "சீல்'
மதுரை : மதுரை கீரைத்துறையில், மாநகராட்சி காய்கறி மார்க்கெட் இடத்தை, 'அட்டாக்' பாண்டி உறவினர் முருகன் என்பவர், குடோனாக மாற்றி, தன் உபயோகத்திற்காகப் பயன்படுத்தியதை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள், நேற்று போலீஸ் பாதுகாப்புடன் 'சீல்' வைத்தனர்.
சில ஆண்டுகளாக, இந்த இடம் பழைய மரச்சாமான்களைப் பாதுகாக்கும் குடோனாக மாறியதால், காய்கறி வியாபாரிகள் வேறு இடத்திற்கு மாறினர். ஆனால், மார்க்கெட் நடத்துவதாகக் கூறி தொடர்ந்து ஏலம் எடுக்கப்பட்டு, சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. இந்தாண்டு மார்ச்சில் ராமுத்தாய் மகன் முருகன் பெயரில் ஏலம் எடுக்கப்பட்டது. இந்த இடத்தை தனி நபர் ஆக்கிரமிப்பாகக் கருதி, 'சீல்' வைக்க நேற்று காலை மாநகராட்சி நகரமைப்பு உதவி கமிஷனர் முத்துக்குமார், மார்க்கெட் கண்காணிப்பாளர் ராஜாராம் ஆகியோர் வந்தனர். உதவி கமிஷனர் துரைசாமி தலைமையில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
மாநகராட்சி அதிகாரிகளைத் தடுத்த முருகன் தரப்பினர், ''எவ்வித நோட்டீசும் கொடுக்காமல், திடீரென்று 'சீல்' வைக்கக்கூடாது,'' என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உதவி கமிஷனர் துரைசாமி தலையிட்டு, ''நாங்கள் பாதுகாப்பு கொடுக்கத் தயார். நீங்கள், உங்கள் பணியைத் தாராளமாக மேற்கொள்ளுங்கள்,'' என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறியதைத் தொடர்ந்து, 'சீல்' வைத்தனர். தற்போது, அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.