Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ.,வின் கூட்டாளி கைது

தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ.,வின் கூட்டாளி கைது

தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ.,வின் கூட்டாளி கைது

தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ.,வின் கூட்டாளி கைது

ADDED : ஆக 03, 2011 01:26 AM


Google News

சேலம் : சேலம், ஜாகீர்அம்மாபாளையத்தில் உள்ள நிலத்தை ஆக்கிரமித்ததாக, வீரபாண்டி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., ராஜாவின் கூட்டாளி சூரியா தங்கவேல், நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

சேலம், கன்னங்குறிச்சி பெரிய கொல்லப்பட்டியைச் சேர்ந்த ஜெயகுமார், இவரின் மகன் முத்துக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு சொந்தமாக, ஜாகீர் அம்மாபாளையத்தில், 10 ஏக்கர் நிலம், பல்வேறு உட்பிரிவு சர்வே எண்களில் உள்ளது. 37 ஆண்டுகளாக இந்த இடத்தை, இவர்கள் அனுபவித்து வந்தனர். இந்த இடத்தில், மூன்று ஏக்கர் நிலத்துக்கு, அழகாபுரத்தைச் சேர்ந்த சீதா வகையறாக்கள் ஆறு பேரும், பெருமாள் வகையறாக்கள் ஆறுபேரும் சேர்ந்து, அழகாபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சரவணனுக்கு, பவர் ஆப் அட்டர்னி வழங்கினர். பெருமாள் வகையறாக்கள், தங்களின் நிலத்துக்கான, பவர் ஆப் அட்டர்னியை ரத்து செய்து விட்டனர்.



சரவணன் போலியாக பட்டா தயார் செய்து, சேலம் சங்கர் நகரைச் சேர்ந்த சூரியா தங்கவேலுக்கு விற்பனை செய்தார். நிலத்துக்கு உரிமை கொண்டாடி சூரியா தங்கவேல், ஜெயகுமார் மகன் முத்துக்குமாரிடம், போலி ஆவணங்களை காட்டி ஆக்கிரமித்தார். நிலம் தனக்கே சொந்தம் எனக் கூறி, 2007 மே 13ல், சேலம் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். வழக்கு நடைபெற்று வந்த நிலையில், நிலத்தை, தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜாவுக்கு தங்கவேல் விற்பனை செய்தார். சூரமங்கலம் பத்திரப் பதிவு அலுவலகத்தில், விற்பனை பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்கவேலுவிடமிருந்து நிலத்தை வாங்கிய முன்னாள் எம்.எல்.ஏ., ராஜா, ஆட்கள் மூலம், நிலத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு, நிலத்தைச் சுற்றி வேலியும் அமைத்தார்.



இதுகுறித்து, ஜெயகுமாரின் மகன் முத்துக்குமார், 2008 அக்டோபர் 29 மற்றும் 2010 ஜனவரி 20 ஆகிய தேதிகளில், சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தும், வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. இந்நிலையில், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலத்தை மீட்டுத் தரும்படி, கலெக்டர் மகரபூஷணம், போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு, புகார் மனுக்களை அனுப்பினார். நில அபகரிப்பு மீட்பு தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., ஆகியோர் விசாரணை நடத்தி, சூரியா தங்கவேல், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜா ஆகியோர் மீது, மோசடியில் ஈடுபடுதல், மிரட்டுதல், அத்துமீறி நுழைதல் ஆகிய பிரிவுகளில், வழக்கு பதிவு செய்தனர். சூரியா தங்கவேலை போலீசார், நேற்று கைது செய்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., ராஜா எந்நேரமும் கைது செய்யப்படலாம் என, தகவல் பரவியதால், சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமின் கேட்டு, மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட், 'அவரை போலீசார் கைது செய்யக் கூடாது' என, உத்தரவிட்டதால், போலீசார் கைது செய்ய இயலவில்லை.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us