Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஹசாரே ஆதரவாளர்களை கலந்து பேசி சமாதானம்

ஹசாரே ஆதரவாளர்களை கலந்து பேசி சமாதானம்

ஹசாரே ஆதரவாளர்களை கலந்து பேசி சமாதானம்

ஹசாரே ஆதரவாளர்களை கலந்து பேசி சமாதானம்

UPDATED : ஆக 22, 2011 12:47 AMADDED : ஆக 21, 2011 11:37 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி:அன்னா ஹசாரேயுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காண, மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர், ஹசாரே குழுவினருடன் நேற்று பேச்சு நடத்தினார். இது, முதல் கட்டமாகக் கருதப்படுகிறது. அரசு அங்கீகாரம் பெற்ற பிரதிநிதி ஒருவர், ஹசாரே குழுவினருடன் லோக்பால் மசோதா உருவாக்குவது குறித்து ஆலோசிக்கும் வாய்ப்பு எழுந்துள்ளது.ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதப் போராட்டம், நேற்று ஆறாவது நாளை எட்டியது. நேற்று விடுமுறை நாள் என்பதால், ஏராளமான மக்கள் ராம்லீலா மைதானத்தில் திரண்டிருந்தனர். இளைஞர்கள் அதிக அளவில் காணப்பட்டனர்; பெண்களும் கணிசமான அளவில் திரண்டிருந்தனர்.

உண்ணாவிரத மேடையில், அன்னா ஹசாரே பேசியதாவது:அரசுடனான பேச்சுவார்த்தைக்கான கதவு, எப்போதும் திறந்தே இருக்கிறது. பேச்சுவார்த்தைக்கான கதவை, நாங்கள் மூடவில்லை. பேச்சுவார்த்தை மூலமே, பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்பது எங்களுக்கு தெரியும். ஜன் லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்ற வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை, ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். கோரிக்கை நிறைவேறும் வரை, போராட்டம் தொடரும். பார்லிமென்டை விட, மக்களின் பார்லிமென்ட் மிகவும் உயர்வானது. அதற்கு சக்தி அதிகம்.இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.



அரசும் தயார்:லோக்பால் மசோதா விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைக்கு தயார் என, பிரதமர் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். இதற்கு பதிலளிப்பது போல், 'பேச்சுவார்த்தைக்கான கதவு திறந்தே இருக்கிறது' என, ஹசாரே நேற்று தெரிவித்துள்ளது, பிரச்னைக்கு தீர்வு காண, இரு தரப்பும் முன்வந்துள்ளதை வெளிப்படையாக உணர்த்தியது.

இதை உறுதி செய்வது போல், மத்திய மின் துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவின் பேச்சும் அமைந்தது. அவர் கூறுகையில், 'அன்னா ஹசாரேயுடன் பேச்சு நடத்துவதற்கான அரசு தரப்பு பிரதிநிதியாக செயல்படும்படி, பிரதமர் என்னை அணுகினால், அந்த பணியை வெற்றிகரமாக செய்து முடிக்கத் தயார்' என்றார்.



மறைமுக நடவடிக்கை:இதற்கிடையே, ஹசாரேயின் போராட்டத்துக்கு, மக்கள் ஆதரவு பெருகி வருவதாலும், பார்லிமென்டில் எதிர்க்கட்சிகளால் ஏற்படும் நெருக்கடியைத் தவிர்க்கவும், மத்திய அரசு, மறைமுக நடவடிக்கைகளை துவங்கியுள்ளது. இரு தரப்புக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்காக, பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சி துவங்கியுள்ளது.இதன் முதற்கட்டமாக, மகாராஷ்டிர மாநில கூடுதல் தலைமைச் செயலர் உமேஷ் சந்திரா, நேற்று டில்லி ராம்லீலா மைதானத்துக்கு வந்து, ஹசாரே மற்றும் அவரது குழுவினருடன் பேச்சு நடத்தினார்.



இது, தனிப்பட்ட முறையிலான சந்திப்பு எனக் கூறப்பட்டாலும், மத்திய அரசின் உத்தரவின் பேரிலேயே இந்த சந்திப்பு நடந்ததாக, நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உமேஷ் சந்திராவும், ஹசாரேயும், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அன்னா ஹசாரேயின் உயர்மட்டக் குழுவில் உள்ள, அரவிந்த் கெஜ்ரிவால், கிரண் பேடி, சாந்தி பூஷன், மனிஷ் சிசோடியா மற்றும் மேதா பட்கர் ஆகியோருடனும், உமேஷ் சந்திரா ஆலோசித்ததாக தகவல் வெளியானது.



இதுகுறித்து, ஹசாரே ஆதரவு வட்டாரங்கள் கூறியதாவது:பிரதமர் மற்றும் நீதித் துறையில் உயர் பொறுப்பு வகிப்பவர்களை லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற, தங்களது நிலையை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என, ஹசாரே தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுவிட்டது. அரசு ஏற்கனவே தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதாவை வாபஸ் பெற்றால், பேச்சுவார்த்தையை துவங்கலாம் என, ஹசாரே குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனாலும், இந்த விவகாரத்தில் சந்தோஷ் ஹெக்டே, வேறு ஒரு ஆலோசனையை முன்வைத்துள்ளார்.



பிரதமர் மற்றும் நீதித் துறையைச் சேர்ந்தவர்களை, லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற, கோரிக்கையை விட்டுக் கொடுப்பது குறித்து ஆலோசிக்கலாம் என, அவர் தெரிவித்தார். இது தொடர்பாக, ஹசாரே குழுவில் உள்ள மற்றவர்களுடன், சந்தோஷ் ஹெக்டே மீண்டும் ஒருமுறை ஆலோசனை நடத்தினார்.இவ்வாறு ஹசாரே ஆதரவு வட்டாரங்கள் தெரிவித்தன.மகாராஷ்டிர மாநில அதிகாரி, ஹசாரே தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியது, பல்வேறு கருத்துக்களை எழுப்பியுள்ளது. அரசின் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதியுடன் ஹசாரே குழு பேசுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.

இதற்கு சுவாமி அக்னிவேஷும் ஆதரவு தெரிவித்திருக்கிறார். லோக்பால் மசோதா

விவகாரம் குறித்த சர்ச்சைகளை முடிவுக்கு கொண்டு வர, அரசு ஆவலாக இருப்பதாகத்

தெரிகிறது.



காந்தி தொப்பி விற்பனை அமோகம்:அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதப் போராட்டம், நேற்று ஆறாவது நாளாகத் தொடர்ந்தது.நேற்று காலை 10 மணிக்கு, உண்ணாவிரத மேடைக்கு, ஹசாரே வந்தார்.மேடைக்கு வந்ததும், அங்கு கூடியிருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.இளைஞர்கள் பெருமளவில் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதற்கு, ஹசாரே குழுவினர் சார்பில், மேடையில் நன்றி தெரிவிக்கப்பட்டது.போராட்டம் குறித்து, பெரிய அளவில் செய்தி வெளியிட்டு வரும் மீடியாக்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.ரம்ஜான் நோன்பு இருக்கும் ஏராளமான முஸ்லிம்கள், ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ராம்லீலா மைதானத்தில் குவிந்தனர்.



தியோபந்த் பல்கலை துணைவேந்தர் முப்தி அப்துல் காசிம் நொமனியும், ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.டில்லி மேயர் ரஜ்னி அப்பி, நேற்று மைதானத்துக்கு வந்து, சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.தினமும் இரண்டு முறை மைதானத்தை சுத்தப்படுத்தியும், தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக, மைதானத்தில் தண்ணீர் தேங்குவதாக, அவர் வருத்தம் தெரிவித்தார்.அர்ஜுனா விருது பெற்ற பலர், ராம்லீலா மைதானத்துக்கு வந்து, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.மைதானத்துக்கு வெளியில் காந்தி தொப்பி, தேசியக்கொடி, கைப்பட்டை ஆகியவற்றின் விற்பனை, மிகவும் விறு

விறுப்பாக நடக்கிறது.தொப்பி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் சிறுவர்கள், 'ஹசாரேயின் போராட்டம் குறித்து, எங்களுக்கு ஓரளவு தெரியும். இருந்தாலும், தொப்பி உள்ளிட்ட பொருட்கள் நன்றாக விற்பனையாவதால், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்' என்றனர்.



மக்கள் பிரதிநிதிகளா நீங்க?

''மக்களுக்காக போராட்டம் நடத்தப்படுவது என்பது, நம் நாட்டில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், தற்போது அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்தவர்களின் நடவடிக்கைகள், சட்டத்தை உருவாக்கும் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் நடவடிக்கைகளைப் போல் உள்ளது. அவர்களுக்கு நான் ஒன்றை கூற விரும்புகிறேன். இந்திய ஜனநாயகம் என்பது, பன்முகத் தன்மை உடையது. பல்வேறு தரப்பட்ட மக்கள் மற்றும் அமைப்புகள் தெரிவிக்கும் கருத்துக்களையும், பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.''

- பிரணாப் முகர்ஜிமத்திய நிதி அமைச்சர்கவலைப்படாத அரசு''அன்னா ஹசாரே, கடந்த ஆறு நாட்களாக சாப்பிடவில்லை. ஆனால், அவரது உடல் நலம் குறித்து, அரசு கவலைப்படவில்லை.



குறிப்பிட்ட கால வரையறைக்குள், ஜன்லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்ற, அரசும், எம்.பி.,க்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.''- கிரண் பேடிஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரிபிரதமர் பதவிக்கா ஆசைப்படுகிறார்?''பிரதமர் பதவியில் அமர்வதற்கோ, ஜனாதிபதி பதவிக்கோ, அன்னா ஹசாரே ஆசைப்படவில்லை. ஊழலை ஒழிப்பதற்காகவே போராடுகிறார். அவரின் போராட்டத்துக்கு, கடைசி வரை, மக்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மக்கள் தான், சக்திமிக்கவர்கள் என, நம் தலைவர்கள் கூறுகின்றனர். உண்மை நிலை வேறு மாதிரியாக உள்ளது. நம் நாட்டுக்கு இன்னும், உண்மையான சுதந்திரம் கிடைக்கவில்லை.''- சந்தோஷ் ஹெக்டே கர்நாடகா லோக் ஆயுக்தா முன்னாள் நீதிபதி .







      Our Apps Available On




      Dinamalar

      Follow us