
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேச்சு : தி.மு.க.,வின் உள்ளாட்சித் தேர்தல் பணிகளை எந்த வகையிலும், முடக்கி விட முடியாது.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: உலகில், 95 நாடுகளில் தூக்கு தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. காந்தி பிறந்த நாடு என்றும், நாகரிகத்தின் தொட்டில் என்றும் பெருமைபட்டுக் கொள்ளும் இந்தியாவில் மட்டும் தூக்கு தண்டனை தொடர்வது சரியானதாக இருக்காது.
இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் பேட்டி: பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துவற்கான திட்டங்களை, முதல்வர் அறிவித்துள்ளார். இது, கல்விப் புரட்சியின் மூலம் தான் ஏழைகளை கைதூக்கிவிட முடியும் என்ற, அம்பேத்கரின் கருத்தை வலுப்படுத்துவதாக உள்ளது. எனவே, முதல்வர் ஜெயலலிதாவிற்கு, 'கல்விப் புரட்சி தந்த சமத்துவப் பேரொளி' என்ற பட்டம் தரலாம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய செயலர் பிரகாஷ் கராத் அறிக்கை : ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அணுகுமுறையும், ஊழலைத் தடுக்கத் தவறியதும், சேர்ந்து நாடெங்கும் பரவலான கோபம் கிளறி விடப்பட்டுள்ளது. முதலாவதாக, இந்த அரசை ஊழலில் ஊறிப்போன அரசாக மக்கள் பார்க்கின்றனர். சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே மிகப் பெரும் ஊழல் மலிந்த அரசு இது தான்.
இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி: இலங்கையில் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத் தீவு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தமிழ்ப் பெண்கள், மர்ம நபர்களால் தாக்கப்படுவதுடன், பல சித்ரவதைக்கு உள்ளாகின்றனர். இலங்கை அரசு, இதைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது. எனவே, இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க, இலங்கை அரசை, இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
இ.கம்யூ., சிவகங்கை எம்.எல்.ஏ., குணசேகரன் பேச்சு: தமிழக அரசின் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளைப் பெற, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்திக் கேட்டு வருகிறோம். ஆனால், மத்திய அரசு கொடுக்கவில்லை. ஆனால், கண்டிப்பாக முதல்வர் ஜெயலலிதா தலைமையில், ஒரு மாற்றத்தை மத்தியில் கொண்டு வந்து, கேட்டதைக் கொடுக்கக் கூடிய ஒரு மத்திய அரசை வெகு விரைவில், உருவாக்குவோம்.
மா.கம்யூ., எம்.பி., நடராஜன் பேச்சு: இலங்கை நாடு ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்றால், அங்கு வாழும் அனைத்து மக்களுக்கும், குறிப்பாக தமிழ் மக்களுக்கு சம வாய்ப்பும் சம உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். தமிழர்கள் அதிகமாக வசிக்கக் கூடிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு, கூடுதல் அதிகாரங்கள் வழங்க வேண்டும்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி: வன்முறையால் எந்த பிரச்னைக்கும், தீர்வு காண முடியாது. மனித உயிர்களைக் கொல்வது கிரிமினல் குற்றம். இடதுசாரிகளால், 34 ஆண்டுகள் ஆட்சியில் பின்தங்கி விட்ட மேற்கு வங்கத்தை முன்னேற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். பிரச்னைக்கு சுமுகமாக தீர்வு காண வேண்டும் என்று விரும்புகிறோம். மாவோயிஸ்டுகள், நக்சலைட்கள் வன்முறையை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்ப வேண்டும்.
இந்திய ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் பேட்டி: ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு கிடைத்துள்ள ஆதரவு, ஜனநாயகத்தின் வலிமையையும், மக்களின் பலத்தையும் காட்டுகிறது. இந்த பிரச்னைகளை நம் நாட்டின் தலைமை எப்படி கையாள்கிறது என்பதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஊழல் என்பது வெட்ட, வெட்ட வளரும் பூதம் போன்றது. சிறிது பின்னோக்கி பார்த்தால், அதன் வளர்ச்சிக்கு நாம் ஒவ்வொருவரும் காரணமாக இருந்திருப்போம்.
முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண் பேடி பேச்சு: பிரதமர் தன்னை நீதிபதி போல், நினைத்து பேசுகிறார். மக்களின் கருத்துக்களைப் புரிந்து கொள்ளாத உணர்ச்சியற்ற மனிதராக இருக்கிறார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேட்டி: தமிழகத்தில் உள்ளவர்களைத் தூக்கில் போடலாமா என்ற கேள்வியே தவறு. விடுதலைப்புலிகளின் கோர்ட், மாதையாவிற்கும், அமிர்தலிங்கத்திற்கும் எப்படி மரண தண்டனை விதித்தது? இது பற்றி யாராவது பேசுகின்றனரா? என்னைப் பொறுத்தவரையில் தூக்குத் தண்டனை சரியானது தான்.
முன்னாள் அமைச்சர் துரைமுருகன், 'தமாஷ்' பேட்டி: அரசியலுக்காக ஈழத்தமிழர் பிரச்னையை, கையிலெடுப்பதைத் தவிர வேறு என்ன உணர்வு உள்ளது ஜெயலலிதாவிற்கு. ஆனால், கருணாநிதிக்கு ஈழ உணர்வு என்பது அவரின் உள்ளத்திலும், உயிரிலும் இரண்டறக் கலந்துவிட்ட விஷயம். ஈழத் தமிழர்களுக்காக அவர் போராடியதைக் காட்டிலும் வேறு எவர் போராடியிருக்கிறார்?


