மாணவியை அழைத்துச் சென்ற ஆசிரியர் "சஸ்பெண்ட்'
மாணவியை அழைத்துச் சென்ற ஆசிரியர் "சஸ்பெண்ட்'
மாணவியை அழைத்துச் சென்ற ஆசிரியர் "சஸ்பெண்ட்'
ADDED : செப் 07, 2011 11:27 PM
விருத்தாசலம்: மாணவியை வெளியூருக்கு அழைத்துச் சென்ற ஆசிரியரை கைது செய்யக்கோரி, கிராம மக்கள் அரசு பள்ளியை முற்றுகையிட்டனர்.
ஆசிரியரின் மோட்டார் சைக்கிளை, மாணவர்கள் தீ வைத்து எரித்ததால் பரபரப்பு நிலவியது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தன் மகள் ராகவி, 15. (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இவர், அதே கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த, 5ம் தேதி காலை பள்ளிக்குச் சென்ற மாணவி ராகவி, வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர், பள்ளியில் விசாரித்த போது, ராகவி அன்று பள்ளிக்கு வரவில்லை என்பதும், ராகவியை அதே பள்ளியில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர் கொளஞ்சி, 45, அழைத்து சென்றதும் தெரியவந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, ராகவி வீட்டிற்கு வந்தார். தலைமை ஆசிரியர் ராமதாஸ் கொடுத்த தகவலின் பேரில், விருத்தாசலம் டி.இ.ஓ., பத்ரூ விசாரணை நடத்தினார். ஆசிரியர் கொளஞ்சியை 'சஸ்பெண்ட்' செய்து, சி.இ.ஓ., அமுதவல்லி நேற்று உத்தரவிட்டார். ஆசிரியர் கொளஞ்சி, நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்தார். இதை அறிந்த கிராம மக்கள், பள்ளியை முற்றுகையிட்டனர். போலீசார் பள்ளியில் விசாரணை நடத்தினர். அதில், மாணவி ராகவியை, யாருடைய அனுமதியின்றி வெளியூருக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர் கொளஞ்சியை கைது செய்ய கிராம மக்கள் வலியுறுத்தினர். புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாகபோலீசார் கூறினர். அதன்பேரில், மாணவி ராகவியின் தந்தை ரத்தன் நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார். வேப்பூர் போலீசார், ஆசிரியர் கொளஞ்சியை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றனர். போலீசார் சென்றதும், அங்கு நிறுத்தியிருந்த ஆசிரியர் கொளஞ்சியின் மோட்டார் சைக்கிளை, மாணவர்கள் தூக்கி வந்து, ரோட்டில் போட்டு உடைத்து, தீ வைத்து எரித்தனர். மாணவி ராகவியை, வெளியூருக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர் கொளஞ்சிக்கு, இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டார். இரண்டாவது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வேப்பூரில் வசித்து வருகிறார்.


