ADDED : செப் 08, 2011 02:17 AM
அவிநாசி : அவிநாசி அருகே தேவராயன்பாளையத்தில் குடிநீர் கேட்டு, பஸ் சிறைபிடிக்கப்பட்டு, சாலை மறியல் செய்யப்பட்டது.
திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 1, 2வது வார்டு தேவராயன்பாளையம். அங்கு 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. குடிநீர் சப்ளையாகி 23 நாட்கள் ஆனதால், பொறுமையிழந்த பெண்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை 10.15 மணிக்கு, அவிநாசி - தேவராயன்பாளையம் ரோட்டில், காமாட்சியம்மன் கோவில் முன் மறியல் செய்தனர். அவ்வழியே அவிநாசிக்கு சென்ற டவுன் பஸ்சையும் (தடம் எண்: 29) பெண்கள் சிறைபிடித்தனர். நேரம் சென்றதே தவிர, பேரூராட்சி தரப்பில் யாரும் வரவில்லை. மறியல் நீடித்ததால், அனுப்பர்பாளையம் போலீசார், தேவராயன்பாளையம் சென்று பெண்களிடம் பேசினர்.'பேரூராட்சி தரப்பில் அதிகாரிகள் வந்து உறுதியளித்தால் மறியலை கை விட்டு, பஸ்சை விடுவிப்போம்,' என்றனர். போலீசாரின் முயற்சியால், பேரூராட்சி அலுவலக அலுவலர் ஒருவர் வந்து, மாலைக்குள் குடிநீர் சப்ளை செய்யப்படும் என உறுதியளித்தார். அதனடிப்படையில், பெண்கள் கலைந்து சென்றனர்.பொதுமக்கள் கூறுகையில், 'தேவராயன்பாளையத்துக்கு குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு வசதி செய்வது குறித்து பலமுறை சொன்னாலும், கவுன்சிலர்களும், அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. 'ஒவ்வொரு முறையும் போராட்டம் நடத்தியே வசதிகளை பெற வேண்டியுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு கேட்க வரட்டும்; கோபத்தை அப்போது காட்ட தயாராக இருக்கிறோம்,' என்றனர்.


