Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/வங்கி பெண் அதிகாரி படுகொலை: கட்டட வேலை செய்த ஆசாமி கைது

வங்கி பெண் அதிகாரி படுகொலை: கட்டட வேலை செய்த ஆசாமி கைது

வங்கி பெண் அதிகாரி படுகொலை: கட்டட வேலை செய்த ஆசாமி கைது

வங்கி பெண் அதிகாரி படுகொலை: கட்டட வேலை செய்த ஆசாமி கைது

ADDED : ஜூலை 19, 2011 10:33 PM


Google News
Latest Tamil News
சென்னை:மந்தைவெளி வங்கி பெண் அதிகாரியை கழுத்தை நெரித்து கொலை செய்த, கட்டட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கட்டட தொழிலாளியிடம் இருந்து நகை, பணம், மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.சென்னை, மந்தைவெளி மார்க்கெட் அருகில் உள்ள வேதாச்சலம் கார்டன் தெருவைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம், 30; ஆடிட்டர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நாச்சாள், 26; பேங்க் ஆப் அமெரிக்கா வங்கியில் அதிகாரி. இவர்களுக்கு, மதுரவள்ளியம்மை, 3, என்ற பெண்குழந்தை உள்ளது.

தினசரி, கணவர் பணிக்குச் சென்ற பின், குழந்தையை பள்ளிக்கு அனுப்ப, மந்தைவெளி 6 வது குறுக்குத் தெருவில் உள்ள தன் பெற்றோர் வைரவன் - உமையாள் வீட்டில் விட்டுவிட்டு, தன் வீட்டிற்கு வந்து 11 மணிக்கு, தரமணியில் உள்ள வங்கிக்கு செல்வது இவரது வழக்கம்.கடந்த 15ம் தேதி, வழக்கம் போல், நாச்சாள் குழந்தையை, தன் பெற்றோர் வீட்டில் விட்டு வந்தார். வீட்டில் பணியாற்றுபவர்களும் 10:15 மணிக்கு பணியை முடித்து சென்று விட்டனர்.நாச்சாள் வழக்கமான நேரத்தை தாண்டியும் பணிக்கு வராததாலும், மொபைல் போனில் தொடர்பு கொண்டும் கிடைக்காததாலும், நாச்சாளின் சகோதரி பரணியை வங்கியில் இருந்து தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்தனர்.

உடனடியாக, நாச்சாளின் வீட்டிற்கு பரணி சென்ற போது, அங்கு படுக்கையறையில் கட்டிலின் கீழ், கைகள் கட்டப் பட்டு, முகத்தில் பிளாஸ்டிக் கவர் மூடப்பட்ட நிலையில் கிடந்தார்.அருகில் இருந்தவர்கள் உதவியுடன், நாச்சாளை மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நாச்சாள் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக, பட்டினப்பாக்கம் போலீசில் நாச்சாளின் தங்கை பரணி புகார் அளித்தார். இதுகுறித்து, ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்தது.

சம்பவத்தில், நாச்சாளின் கழுத்தில் கிடந்த ஐந்து சவரன் எடையுள்ள தாலி, மூன்று சவரன் எடையுள்ள தங்க வளையல்கள் மற்றும் மொபைல் போன் ஆகியவை காணாமல் போன நிலையில், மற்ற நகைகள் பீரோவில் இருந்தன.எனவே, நாச்சாளுக்கு தெரிந்தவர்கள் தான் இதில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற முடிவிற்கு போலீசார் வந்தனர். இதன் அடிப்படையில், நாச்சாள் தம்பதியினர் அருகில் உள்ள தேவநாதன் தெருவில் வீடு கட்டி வருவதால், அங்கு வேலை செய்யும் நபர்கள், கான்ட்ராக்டர்கள், நாச்சாளின் வீட்டில் வேலை செய்பவர்கள் என 50க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.இதில், நாச்சாள் வீட்டிற்கு அருகில் உள்ள புகழேந்தி என்பவர் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டவர்களில் , திருவான்மியூர் ரங்கநாதபுரம், கால்வாய்க்கரைச் சாலையைச் சேர்ந்த மாரிமுத்து மீது போலீசாரின் சந்தேகம் திரும்பியது.தனிப்படை போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, நேற்று முன்தினம் 18ம் தேதி மாலை, பெசன்ட் நகர் கடற்கரையில் மாரிமுத்து இருப்பதை அறிந்து அவரை பிடித்தனர்.விசாரணையில், 15ம் தேதி நாச்சாளின் வீட்டை பல நாட்கள் நோட்டமிட்டு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள்ளே சென்று அவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.இதையடுத்து, அவரை கைது செய்த தனிப்படை போலீசார், தாலி செயின், இரண்டு வளையல்கள், மொபைல் போன், 3,100 ரூபாய் பணம் மற்றும் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி கூறியதாவது:மந்தைவெளி வங்கி அதிகாரி கொலை சம்பவத்தில், கைரேகை, மோப்ப நாய் உதவியுடன் சம்பவத்தன்று சோதனைகள் நடத்தப்பட்டன. சம்பவ இடத்தை, கூடுதல் கமிஷனர், இணை கமிஷனர் பார்வையிட்டு, தனிப்படைகள் அமைத்து விசாரணை முடுக்கி விடப்பட்டது.இதில், நாச்சாளின் வீட்டருகில் உள்ள வீட்டில் வேலை செய்த மாரிமுத்து என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது, நகை மற்றும் பணத்திற்காக நடந்த கொலை. மிரட்டிய போது, நாச்சாள் சத்தம் போட்டதால் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பிழைக்கக் கூடாது என்பதற்காக, தலையில் பிளாஸ்டிக் கவரை போட்டு மூடியுள்ளார். சம்பவ இடத்தில் கிடைத்த கைரேகைகள் ஒத்துப் போகின்றன.இவ்வாறு திரிபாதிகூறினார்.

மேலும், ''சம்பவ இடத்தை ஆய்வு செய்யும் போது, கிடைத்த கைரேகைகளில் கொலையாளியின் கைரேகைகள் தவிர, மற்றவை நாச்சாளின் குடும்பத்தினர் கைரேகைகளுடன் ஒத்துப் போனதா? வேறு ஏதேனும் கைரேகைகள் உள்ளனவா?'' என்று பத்திரிகையாளர்கள் கேட்ட போது, பதிலளித்த கமிஷனர் திரிபாதி,''அதை இப்போது கூற முடியாது. விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது,'' என்று பதிலளித்தார்.மாரிமுத்துவை நாச்சாளின் வீட்டிற்கு அழைத்துச் சென்ற கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், தென்சென்னை இணை கமிஷனர் தலைமையிலான போலீசார், சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர்.அப்போது, மாரிமுத்து நடந்த சம்பவத்தைஅப்படியே நடித்து காட்ட, அதை முழுவதுமாக பதிவு செய்துள்ளனர்.

இரண்டு நாட்கள் நோட்டம் விட்டு சதி:வங்கி பெண் அதிகாரி நாச்சாள் கொலையில், 3:30 மணிக்கு போலீசுக்கு தகவல் வெளியானதும், முதலில் பட்டினப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டதும், மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.சட்டம் - ஒழுங்கு கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், தென்சென்னை இணை கமிஷனர் சண்முகராஜேஷ்வரன் பார்வையிட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டதும், உடனடியாக விசாரணை ஆரம்பமானது. கைரேகை நிபுணர்கள் ஒருபுறம் பதிவான ரேகைகளை நகல் எடுக்க, மறு புறம் மோப்பநாய் சகிதம் வந்த போலீசார், தங்கள் பணியை தொடர்ந்தனர்.மோப்பநாய், நாச்சாளின் வீட்டில் இருந்து ஓடி, தேவநாதன் தெருவில் நாச்சாள் கட்டி வரும் வீட்டின் அருகில் சென்று, பின், செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நின்றது.

இது,போலீசாருக்கு பலத்த குழப்பத்தை ஏற்படுத்தியது. நாச்சாளுக்கு அறிமுகமானவர்கள் தான் இதை செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த போலீசார், வீட்டிற்கு அடிக்கடி வருபவர்கள், வேலைக்காரர்கள், புதிய வீடு தொடர்பாக வந்த கான்ட்ராக்டர்கள் என அனைவரையும் துருவி, துருவி விசாரித்தனர்.அப்போது தான், கைது செய்யப்பட்ட மாரிமுத்து சம்பவம் நடந்த இரண்டு தினங்களுக்கு முன்பே, அப்பகுதியில் சுற்றித் திரிந்தது போலீசாருக்கு தெரியவந்தது.தொடர்ந்து, மற்றவர்களை விசாரித்து வந்தாலும், மாரிமுத்து தொடர்பான விவரங்களை போலீசார் சேகரித்தனர். தன்னை போலீசார் நெருங்குவதை அறிந்த மாரிமுத்து, தலைமறைவானார். ஆனால், போலீசார் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு மாரிமுத்துவை பிடித்துவிசாரித்து, கைது செய்தனர்.

தொடர்ந்து, நடந்த விசாரணையின் போது, மாரிமுத்து போலீசாரிடம் சம்பவம் குறித்து தெளிவாக விளக்கியுள்ளார். அதன் விவரம், திருவான்மியூரில் மனைவி கிருஷ்ணவேணியுடன் வசித்து வரும் மாரிமுத்து, கடந்த மூன்றாண்டுகளாக, வீட்டருகே உள்ள கான்ட்ராக்டர் ரவியிடம் முக்கிய வேலை செய்யும் கட்டடத் தொழிலாளராக பணியாற்றி வந்துள்ளார்.கடந்தாண்டு, அக்டோபர் மாதம், நாச்சாள் குடியிருக்கும் வீட்டிற்கு அருகிலுள்ள புகழேந்தி என்பவரின், வீட்டு கட்டட பணியை கான்ட்ராக்டர் ரவி என்பவர் எடுத்துள்ளார். அவரிடம், மாரிமுத்து வேலை செய்துள்ளார். அப்போது, புகழேந்தி வீட்டின் சுவரில் வெளிபூச்சு பூசுவதற்காக, நாச்சாளின் வீட்டுமாடிக்கு மாரிமுத்து சென்றுள்ளார்.அப்போது நாச்சாளின் வீட்டிற்கு வரும் ஆட்கள், அவர்களிடம் நாச்சாள் பழகுவது மற்றும் வீட்டு பழக்கவழக்கங்கள் பற்றி தெரிந்துள்ளார். தொடர்ந்து, புகழேந்தி வீட்டில் நடந்த புகுமனைவிழாவில் மாரிமுத்துவும் கலந்துகொண்டுள்ளார். அந்த விழாவிற்கு குடும்பத்துடன் வந்த நாச்சாள், அதிகளவில் நகைகளை அணிந்து வந்துள்ளார். நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டார்.இதன்படி, கடந்த 13ம் தேதி, வேதாசலம் கார்டன் தெருவில் உள்ள டீ கடையில் அமர்ந்து, நாச்சாளின் வீட்டை நோட்டமிட்டுள்ளார். தொடர்ந்து, 15ம் தேதி, தன்னுடைய டூவீலரில் வந்து, மந்தைவெளிப்பாக்கம் மீன் மார்க்கெட் அருகில் நிறுத்திவிட்டு, வேதாச்சலம் கார்டன் டீ கடையில் நின்று, வேலையாட்கள் புறப்பட்டு செல்வதை உறுதி செய்துகொண்டு, யாரும் இல்லாத நேரத்தில் நாச்சாள் வீட்டிற்கு சென்றுள்ளார்.வீட்டின் சுவரில் ஒழுகுவதாக கான்ட்ராக்டர் மோகன் கூறியதாக சொல்லி, வீட்டிற்குள் நுழைந்து சுவர்களை சோதிப்பது போல் நாடகமாடியுள்ளார்.பின் படுக்கையறையில் நுழைந்து, படுக்கையை தள்ளி, சுவரில் ஒழுகல் இருப்பதை பார்ப்பது போல் பாசாங்கு செய்துள்ளார். அப்போது, அங்கு வந்த நாச்சாளை மடக்கி, நகை மற்றும் பணத்தை கொடுக்க சொல்லி மிரட்டியுள்ளார்.கோபப்பட்ட நாச்சாள் சத்தம் போடவே, அவருடைய வாயை பொத்தி அமுக்கிய போது, திமிறி சப்தம் போட முயல, நாச்சாளின் கழுத்தை நெரித்துள்ளார்.

இதில், நாச்சாள் கீழே சாய்ந்துவிட, அவர் இறந்ததை அறிந்து, அவர் அணிந்திருந்த தாலிசெயின், வளையல்கள் மற்றும் 5,000 ரூபாயையும் எடுத்துக் கொண்டு, செல்போனை எடுத்து, 'சுவிட்ச் ஆப்' செய்து வைத்துக் கொண்டார்.நாச்சாள் பிழைத்து விடுவாரோ என்று பயந்து, சமையலறையில் இருந்து பிளாஸ்டிக் பையை எடுத்து வந்து, நாச்சாளின் முகத்தில் சொருகி, படுக்கையறையிலிருந்த துண்டை எடுத்து அவரது கழுத்தை சுற்றி இறுக்கி கட்டியுள்ளார்.பின், அவருடய கைகளையும் கட்டி விட்டு, வெளிப்புறமாக கதவை சாத்திவிட்டு, மீன் மார்க்கெட் அருகில் நிறுத்தப்பட்டிருந்த தன் டூவீலரில் வீட்டிற்கு சென்றுள்ளார். நகைகளை வீட்டில் பதுக்கிய மாரிமுத்து, பின் தப்பிக்க கருதி, வெளியிடத்தில் சுற்றியதாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us