தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேச்சு: தேர்தலில், தனி தொகுதி, பொது தொகுதி என்பதெல்லாம் தேவையில்லாதது.
மா.கம்யூ., மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் பேட்டி : மார்க்சிஸ்ட் - தே.மு.தி.க.,வின் நோக்கம் ஒன்றாக இருப்பதால் இணைந்துள்ளோம்.
தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் உதயகுமார் பேச்சு: தமிழகத்தில் இனி, 'கருணாநிதி பார்முலா, அழகிரி பார்முலா' எல்லாம் கிடையாது. இனிமேல், 'அம்மா பார்முலா' மட்டும் தான்.
தொ.மு.ச., பேரவை தலைவர் குப்புசாமி அறிக்கை: பொது மக்கள் விரும்பும் சரக்குகளை அனுப்பாமல், இருப்பு அடிப்படையில் தேவையற்ற, விற்பனையாகாத சரக்குகள் வற்புறுத்தப்பட்டு விற்பனை செய்வது தான், 'டாஸ்மாக்' கடைகளில் விற்பனை குறைவுக்கு அடிப்படை காரணம். இதற்கு விற்பனையாளர்களோ, மேற்பார்வையாளர்களோ காரணம் அல்ல. அரசும், உயர்மட்ட அதிகாரிகளுமே காரணம்.
காங்கிரஸ் எம்.பி., விஸ்வநாதன் பேட்டி: சிதம்பரம் ஒரு அப்பழுக்கற்ற அரசியல்வாதி. தற்போது, அரசியல் காழ்ப்புணர்ச்சியில், அவர் மீது சுப்பிரமணியசாமி குற்றம் சுமத்தியுள்ளார். '2ஜி' முறைகேடு பற்றி, பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் அருண்÷ஷாரி, ஜஸ்வந்த் சிங் ஆகியோரிடமும், சி.பி.ஐ., விசாரணை நடத்தியுள்ளது. விசாரணை நடப்பதன் மூலம், ஒருவரை குற்றவாளிப் பட்டியலில் சேர்த்துவிட முடியாது.
பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் பேச்சு: பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இந்த மசோதா விவகாரம் குறித்து, பார்லிமென்ட் நிலைக் குழு ஆய்வு செய்து வருகிறது. நிலைக் குழுவின் அறிக்கை தகுந்த நேரத்தில் கிடைத்தால், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில், லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதில் எந்த பிரச்னையும் இருக்காது. இருந்தாலும், ஒருவரின் கழுத்தில் துப்பாக்கியை வைத்து, ஒரு காரியத்தை செய்யும்படி மிரட்டுவது சரியல்ல.
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பேச்சு: தசரா என்பது, கெட்டவை அழிந்து நல்லவை கோலோச்சும் நாளைக் குறிப்பது. இந்த வகையில் ஊழல் எனும் ராவணனை எரித்து சாம்பலாக்குவதன் மூலம், நல்லன நிலவச் செய்ய இயலும்; நாம் ஒவ்வொருவரும் நமக்குள் இருக்கும் ஊழல் ராவணனை எரிக்க வேண்டும். அப்போது தான், ஊழலுக்கு எதிரான நம் போராட்டம் அர்த்தமுள்ளதாக இருக்கும்.


