PUBLISHED ON : அக் 05, 2011 12:00 AM

வெடியை கொளுத்தியது யார்?
ஆர்.எஸ்.முத்தையா, வேடசந்தூரிலிருந்து எழுதுகிறார்: அயோத்தி மன்னன் தசரதன், ராமருக்கு பட்டாபிஷேகம் செய்ய முடிவெடுத்தார். பட்டாபிஷேகத்துக்கான நாளை, வசிஷ்டர் தேர்வு செய்ய, நகரமே விழாக்கோலம் பூண்டது. விடிந்தால் பட்டாபிஷேகம் என்ற நிலையில், மன்னனின் மனைவிகளில் ஒருவரான கைகேயி, தன் மகன் பரதனுக்குத் தான் பட்டாபிஷேகம் என்ற வெடியை கொளுத்திப்போட்டாள். அதன் விளைவு, தசரதன் மாண்டான். மனைவிமார் மூவரும் அமங்கலியாயினர். சீதை பின் தொடர, ஆரண்யவாசம் சென்றார் ராமர். கடைசியில் ராவணவதம் ஏற்பட்டு, இலங்கை சின்னாபின்னமாகியதும் யாவரும் அறிந்ததே. இவை அனைத்தும், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்குப் பொருந்தும். பல ஆயிரம் கோடி மதிப்பீட்டில், இருபது ஆண்டுகளுக்கு முன், கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைத்தால், நாட்டின் மின் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம் என முடிவானது. இயற்கைச் சீற்றங்கள் எது நடந்தாலும், அணுமின் நிலையம் பாதுகாப்பாக இருக்கும் என்றும், அணுமின் நிலையத்தால் மக்களுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாதென்றும், பல வல்லுனர்கள் முடிவெடுத்து, அதனடிப்படையில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டது.
ஓரிரு மாதங்களில் அது மின் உற்பத்தி செய்யும் என்றும், மின் தட்டுப்பாடு இல்லை என்ற நிலை, தமிழகத்தில் உருவாகும் என எண்ணிய போது, யாரோ ஒருவரோ, ஒரு சிலரோ ஆபத்து என்ற வெடியைக் கொளுத்திப் போட, அது சரவெடியாக மாறி, கூடங்குளம் பகுதியே பதட்டம் நிறைந்த பகுதியாகிவிட்டது. மேலே சொல்லப்பட்ட பீதியை ஏற்படுத்திய நபரை கண்காணித்து, அந்த நபரை நாட்டு மக்களுக்கு அரசு அடையாளம் காட்ட வேண்டும். இச்செயலில் மத்திய, மாநில அரசுகள் துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திரா போன்று இவர்கள் செயல்பட வேண்டியது அவசியம்.
ஜெயிலில் தள்ளியும் கொட்டம் அடங்கவில்லை!
என்.கந்தசாமி, மதுரையிலிருந்து எழுதுகிறார்: 'அ.தி.மு.க., ஆட்சியில், தி.மு.க.,வைச் சார்ந்த கைதிகளுக்கு சிறைச்சாலைகளில் சாதாரண அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. இதை, மனித உரிமைகள் ஆணையத்திற்கு நிச்சயம் கொண்டு செல்வோம்' என, ஸ்டாலின் மிரட்டியிருக்கிறார். இந்திரா ஆட்சியில் எமர்ஜென்சி கொடுமைகளை அனுபவித்தோர் தி.மு.க., உடன்பிறப்புக்கள். அப்போதெல்லாம் வாயிருந்தும் ஊமைகளாக அத்தனை அடிகளையும், மிதிகளையும் பொறுத்துக் கொண்டவர்கள் இவர்கள். தன் பெயருக்கு முன்னால், 'மிசா' என்ற சொல்லைப் போட்டு தம்பட்டம் அடித்தோர் கழக உடன்பிறப்புக்கள். வ.உ.சி., போல், இவர்கள் சிறைகளில் செக்கு இழுத்துக் கஷ்டப்படவில்லை. சுப்ரமணிய சிவா போல், கொடிய தொழுநோய்க்கு ஆளாகவில்லை. உப்புச் சப்பில்லாத கஞ்சி குடிக்கவில்லை. 'மாங்குயில் பாடும் பூஞ்சோலையில் தான் சிறைச்சாலைகள்' என, வீர வசனம் பேசிய புண்ணியவான்கள் இவர்கள். நாட்டின் வளர்ச்சிக்காக தியாகம் செய்து, சிறைக்குச் செல்லவில்லை. கோடிக்கணக்கில் மோசடி செய்து, மற்றவர்களின் வயித்தெரிச்சலை பெற்று, பெரும்பாவம் செய்தவர்கள். சிறைச்சாலைகளில் மட்டன் பிரியாணி, கோழிக்குருமா, 'ஏசி' வசதி செய்து கொடுக்க வேண்டுமென விரும்புகின்றனர். தி.மு.க., ஆட்சியில், கைதிகள் சொர்க்கத்தையே கண்டது போலவும், அ.தி.மு.க., ஆட்சியில், நரக வேதனை மட்டுமே அனுபவிப்பது போலவும் சொல்கிறார் ஸ்டாலின். இதைக் கேட்டு, தமிழக மக்கள் நிச்சயம் அனுதாபப்பட மாட்டார்கள். 'சிறைக்கு அனுப்பியும், இவர்களது ஆட்டம் அடங்கவில்லையே' என்று தான் மனம் குமுறுவர். இதை, ஸ்டாலின் புரிந்து கொள்வாரா?
சொன்னால் பொல்லாப்பு...
மூர்த்தி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: உள்ளாட்சித் தேர்தல் வந்து விட்டதால் எங்கு பார்த்தாலும், பரபரப்பான அரசியல் சூழ்நிலை காணப்படுகிறது. சட்டசபை தேர்தலை விட, இத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. இப்போட்டியில் வெற்றி பெறுவதற்காக, கடுமையாக உழைக்க வேண்டியது ஒரு புறம் இருந்தாலும், வாக்காளர்களை தன் பக்கம் இழுப்பதற்காக, வேட்பாளர்கள், பல வியூகங்களை வகுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எப்படியாகினும், வெற்றி பெறுவதையே தன்மானத்தின் அடையாளமாய் கருதுகின்றனர்.
வெற்றி பெற்ற பின், என்ன செய்யப்போகின்றனர், எதை சாதிக்கப்போகின்றனர் என்பதை சிந்திக்கும் முன், இப்போது எத்தகைய சூழ்நிலை நிலவுகிறது என்பதை சுட்டிக்காட்ட எண்ணுகிறேன்.
குறிப்பிட்ட பகுதிக்குள் இருக்கும் வாக்காளர்களை, தம் பக்கம் இழுப்பதற்காக, காசை தண்ணீராய் செலவழிக்கின்றனர். தினசரி ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு தொகையை வெட்ட வேண்டியுள்ளது. 'குடிமகன்'களுக்கு சரக்கும், பிரியாணியும் கொடுக்க வேண்டியுள்ளது. அதனால், 'குடிமகன்'களின் பாடு, மிகக் கொண்டாட்டமாகிறது.
இதை, ஒரு நாள் வழங்க மறந்தாலும், வாக்காளர் எதிரணிக்குப் போக வாய்ப்புள்ளது. இதனால், ஏற்கனவே குடிப்பழக்கம் உள்ளவர்கள், இலவசமாகக் கிடைக்கிறதே என மறுக்காமல் வாங்கி, இருப்பு வைத்து, குடித்து, தொடர் போதையில் மிதக்க ஆரம்பிக்கின்றனர். தேர்தல் முடியும் வரை, இப்படியாக கட்சித் தொண்டாற்றுகின்றனர். அவர்களால், தம் குடும்பத்தை கவனிக்கவும் முடிவதில்லை. இந்த அப்பாவிகளுக்கு, இதெல்லாம் நல்லதல்ல என, நம்மைப் போன்றவர்கள் சொன்னால், நாம் பொல்லாப்புக்கு ஆளாகி விடுகிறோம்.
சிறையில் தள்ளுங்கள்!
நா.மு.நாச்சியப்பன், காரைக்குடியிலிருந்து எழுதுகிறார்: உ.பி.,யில், லஞ்சம் தர மறுத்த லாரி டிரைவரை, ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் வெறித்தனமாக அடித்துக் கொலை செய்துள்ளார். ஊழல் தடுப்பு உண்ணாவிரதத்தை அன்னா ஹசாரே முடித்து, அதிக நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள், கொலையே நடந்து விட்டது. கொலை செய்தவனை தூக்கில் தொங்க விட வேண்டாமா? முதலில் அந்த ஆர்.டி.ஓ.,வை பதவி நீக்கி, சான்றிதழ்களை கிழித்தெறிந்து, எவ்வித மன்னிப்பும், இடைநீக்கமும் இல்லாமல், பணி நீக்கி, சிறையிட வேண்டும். அலுவலக நிர்வாக அலுவலரைப் பிடித்து நீக்கினால், கீழ்மட்டம் செம்மைப்படும். ஊராட்சிகளில், வி.ஏ.ஓ.,க்கள் லஞ்சம் பெற்றால், தாசில்தார்களை பணி நீக்கம் செய்தல் வேண்டும். அலுவலகங்களில் எழுத்தர்கள் லஞ்சம் பெற்றால், மேனேஜர், கண்காணிப்பாளர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். தண்டனைகளை சாதாரணமாக எண்ணுவதால், கடமையை செய்ய லஞ்சம் கேட்பது சகஜமாகிவிட்டது. அன்னா ஹசாரேவின் உண்மைச் சொல்லை உணராதவரை, உ.பி.,யில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் வெறி தொடரும்.


