Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/"தேர்தல் 2011':தயாரிப்பாளர் சங்கத்தின் புத்தம் புதிய தயாரிப்பு

"தேர்தல் 2011':தயாரிப்பாளர் சங்கத்தின் புத்தம் புதிய தயாரிப்பு

"தேர்தல் 2011':தயாரிப்பாளர் சங்கத்தின் புத்தம் புதிய தயாரிப்பு

"தேர்தல் 2011':தயாரிப்பாளர் சங்கத்தின் புத்தம் புதிய தயாரிப்பு

ADDED : அக் 01, 2011 11:32 PM


Google News
Latest Tamil News

ரெடி...

டேக்...

ஸ்டார்ட் கேமரா...

ரோலிங்...

ஆக்ஷன்...!

ஓபனிங் சீனிலேயே சண்டைக் காட்சி.

சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்தபடி, கேமராவை அப்படியே, 'ஜூம்' செய்கிறோம். தமிழ்த் தயாரிப்பாளர் சங்கக் கட்டடம். 'அக்டோபர் 9ம் தேதி காலை' என, 'சப் டைட்டில்' போடுகிறோம். சிலர் அங்கேயும், இங்கேயும் நடந்து கொண்டிருக்கின்றனர். நிறைய பேர் வரிசையில் நிற்கின்றனர். பெரும்பாலானோர்வெள்ளையும், சொள்ளையுமாக! மேலும், 'ஜூம்' செய்து, கேமரா சுழல்கிறது. தாடி வைத்து பல பேர்... திரையிலும், பத்திரிகைகளிலும் பார்த்த முகங்கள். எல்லார் முகத்திலும் ஒருவித பதட்டம்.

தடுப்புச் சுவருக்கு வெளியே கேமராவை திருப்பினால், கையில் லத்தியோடு ஏராளமான காக்கிச் சட்டைகள். சினிமா போலீஸ் அல்ல; நிஜம். பின்னணி இசையில்லாமல், காட்சிகள் அமைதியாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.

திடீரென, கட்டடத்துக்கு உள்ளேயிருந்து, 'ஏய்...' என்றொரு பெருங்கூச்சல். 'ஜூம் அவுட்' செய்து, 'டாப் ஆங்கிளில்' கேமராவை வைக்கிறோம். கூட்டம் கலகலக்கிறது; அங்கேயும் இங்கேயும் அலை பாய்கிறது. பலர் சட்டையை சிலர் பிடிக்கின்றனர். பரபரப்பு, பதட்டம். லத்தியைத் தூக்கியபடி போலீஸ்காரர்கள், 'என்ட்ரி!'

'கட்.'



பழைய, 'வாசன் ஹவுசை' நினைவுபடுத்தும் பெரிய பங்களா. முன்பக்கம், பச்சைப் பசேலென புல்வெளி. பின்னணியில், இரண்டு வெளிநாட்டு இறக்குமதி கார்கள். நடுவே, டீபாயுடன் நாற்காலிகள். அதில் இரண்டு பேர், எதிரெதிரே அமர்ந்திருக்கின்றனர். ஒருவர் மஞ்சள் அரைக்கை சட்டையும், அரக்கு நிற பேன்ட்டும் அணிந்திருக்கிறார். நடுத்தர வயது. இன்னொருவர், நரைத்த தலை, சிவப்பு நிறம், தடித்த உடல் என இருக்கிறார். எழுபதுகளை எட்டிவிட்ட வயது.



அவரை, 'கவர்' செய்யும் இடத்தில் கேமரா. 'மிட் ஷாட்!' இனி, அவர் பேசும், டயலாக்:

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்கிறது, தம்பி! சம்பந்தமே இல்லாமல், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்கின்றனர். இந்த ராஜினாமா தான், தயாரிப்பாளர் சங்கத்துக்கும், ஆட்சியாளர்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதையும், சங்கத்தில் எந்த அளவுக்கு அரசியல் ஊடுருவிவிட்டது என்பதையும், உலகுக்கு அம்பலப்படுத்தியது.



அதற்கு காரணம், ஐந்து ஆண்டு,களாக மாநிலத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த கட்சி தான், சங்கத்தையும் ஆண்டு கொண்டிருந்தது. தயாரிப்பாளர் நலனுக்காக இயங்க வேண்டிய சங்கம், சில தனி நபர் நலனுக்காக இயங்கத் துவங்கியது. பின்னணியில், இரண்டு தனியார், 'டிவி' சேனல்கள் இருந்தன. பொது நல அமைப்பில் சுயநலம் புகுந்தால் என்னவெல்லாம் நடக்குமோ, அத்தனையும் அங்கு நடக்கத் துவங்கியது.

'கேபிள் டிவி' உரிமம் என்று ஒன்று உண்டு. ஒரு படத்தின் காட்சிகளை, உள்ளூர் சேனல்களில் ஒளிபரப்புவதற்கான உரிமம். அதை, ஒட்டு மொத்தமாக ஒருவரிடம் கொடுத்து விடுவோம். இந்த உரிமம் பெற, ஒரு படத்துக்கு, 1லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. இந்த விலையை நிர்ணயித்தது சங்கம். இந்தப் பரிமாற்றமும், சங்கம் மூலம் தான் நடந்தாக வேண்டும்.



இதற்கு எந்த, 'டெண்டரும்' கோரப்படவில்லை. குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களுக்குத் தான் உரிமங்கள் வழங்கப்பட்டன. ஆண்டுக்கு, சராசரியாக, 150 படங்கள் வெளியாகும் நிலையில், இதற்கான பணப் பரிவர்த்தனை எவ்வளவு என யூகித்துக் கொள்ளுங்கள். திடீரென, அந்த உரிமத்தை வாங்குபவர்கள், 'எங்களுக்கு இது கட்டுப்படியாகவில்லை; கட்டணத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்' என கடிதம் எழுதுகின்றனர்.

அதை எழுதச் சொன்ன நிர்வாகிகள் தான், அதைப் பரிசீலிக்கவும் செய்கின்றனர். 'எத்தனை படம் வெளியானாலும் சரி; மாதம் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தால் போதும்' என, 'தாராளமயமாக' உத்தரவு பிறப்பிக்கின்றனர்.



மாத சராசரி 12 படங்களுக்கு, 15 லட்சம் ரூபாய், வர வேண்டிய இடத்தில், ஐந்து லட்சம் ரூபாயோடு முடங்குகிறது.அடுத்த சில மாதங்களிலேயே, அந்தத் தொகையும், 'கட்டாது' என, அவர்கள் எழுதிக் கொடுக்க, 'மாதம் மூன்றரை லட்சம் ரூபாய் தந்தால் போதும்' என, இவர்கள் பெருந்தன்மை காட்ட, முதல்கட்ட முறைகேடு அரங்கேறுகிறது. இப்படியாக மட்டுமே தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, சற்றேறக்குறைய இரண்டு கோடி ரூபாய் ஆண்டு வருமானம் வர வேண்டிய இடத்தில், 40 லட்சம் ரூபாய் மட்டுமே வருகிறது. மொத்தமாக எட்டு கோடி ரூபாய் வரை சங்கத்துக்கு, முறைகேடாக இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.



சங்கத்தில் உறுப்பினராகச் சேர்வதற்கான கட்டணம், ஒரு காலத்தில் வெறும், 500 ரூபாய் தான். அதை ஒரு லட்சம் ரூபாயாகவும், பின், ஐந்து லட்சம் ரூபாயாகவும் உயர்த்தினர். உறுப்பினர் பதிவை ரத்து செய்வதாக இருந்தால், நான்கு லட்சம் ரூபாயைத் திருப்பித் தர வேண்டும். உறுப்பினராகச் சேர்ந்த பல பேருக்கு ரசீதே தரவில்லை. பதிவை ரத்து செய்தவர்களுக்கு, பணத்தைத் திருப்பித் தந்ததாகவும் கணக்கில்லை. இப்படி பல கோடி, நிர்வாகிகளின் பாக்கெட்டை, நிரப்பியது. 'இவர்கள் சகவாசமே வேண்டாம்' என', ஒதுங்கவும் முடியாது. தயாரிப்பாளர் சங்க கடிதம் இல்லாமல், 'சென்சார் அனுமதி கொடுக்கக் கூடாது' என, எழுதப்படாத ஒப்பந்தம் தான் காரணம்.



இன்னொரு நிர்வாகி இருந்தார். சங்கக் கட்டடத்துக்கான சிமென்ட், இரும்பு, பெயின்ட் என அத்தனையையும், தனக்குச் சொந்தமான நிறுவனத்தில் இருந்து தான் வாங்க வேண்டும் என உத்தரவிட்டு, மூன்று கோடி ரூபாய்க்கு, 'பில்' போட்டுவிட்டார். சங்கக் கணக்கில் இருந்த நிதி, 'காந்தி கணக்குக்கு' போய்விட்டது.முன்பெல்லாம், சங்கத்தில் இருந்து, 'செய்தி மலர்' என்றொரு மாத இதழ் வரும். சங்கத்தின் செய்திகள், வரவு, செலவு கணக்கு உள்ளிட்டவை அதில் இடம்பெறும். நான்கு ஆண்டுகளாக அந்த மலரே போடவில்லை. ஆனால், கணக்கில் மட்டும் அதற்கான செலவு ஏறிக்கொண்டே இருந்தது. இது ஒரு கோல்மால்.



அடுத்தது, பெரியளவிலானது. 'கார்பரேட் நிறுவனங்கள் திரைப்படம் தயாரிக்கக் கூடாது' என ஒரு தீர்மானம் போட்டனர். அடித்துப் பிடித்து அத்தனை நிறுவனங்களும் ஓடி வர, 100 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்திருந்த நிறுவனங்களிடம், மூன்று கோடி ரூபாய்க்கு மேல் கறந்துவிட்டு, தீர்மானத்தை காற்றில் பறக்க விட்டனர். இவர்களது வசூல் வேட்டைக்கு யாரும் தப்பவில்லை. எந்த வம்பு தும்புக்கும் போகாமல், ஓரமாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு தனியார் 'டிவி' சேனலிடம் கூட, 50 லட்சம் ரூபாய் சுட்டுவிட்டனர்.

எல்லாவற்றையும் விட பிரதான வசூல், கட்டப்பஞ்சாயத்தில் தான். இயக்குனர்கள், நடிகர்கள், வினியோகஸ்தர்கள் என, யாருடன் மோதல் வந்தாலும், உடனே அரசமரத்தடி பஞ்சாயத்தை ஆரம்பித்துவிடுவர். யார் கூடுதலாக, 'கட்டிங்' கொடுக்கின்றனரோ, அவர்களுக்குச் சாதகமாகத் தான் தீர்ப்பு.



வசூல் தவிர, மொத்தமுள்ள ஏழு மார்க்கெட்டில் மிகப் பெரியதான வடஆற்காடு மற்றும் சென்னை மார்க்கெட்டை இவர்களே எடுத்துக் கொள்வர். தங்களுக்கு அந்த உரிமத்தைக் கொடுத்துவிட வேண்டும் என எழுதி வாங்கிக் கொண்டு, அதற்கான முன்பணம் கூட கொடுக்காமல், அதை அடுத்தவருக்கு விற்று, கோடிகளைக் குவித்த வண்டவாளமெல்லாம் உண்டு.பருத்தி வீரன் பஞ்சாயத்து, தயாரிப்பாளர்கள் மத்தியில் ரொம்பப் பிரபலம். இதில் பாதிக்கப்பட்ட அமீருக்கு, 50 லட்சமும், ஞானவேல் ராஜாவுக்கு, 30 லட்சமும் இன்னமும் போய்ச் சேரவில்லை. வேறொரு படப் பஞ்சாயத்தில், தனுஷுக்குத் தர வேண்டிய பணம், 15 லட்சம் ரூபாய், 'செக்'காக மட்டுமே இருக்கிறது.



இவற்றைப் பற்றி, செயற்குழுவில் யாரும் வாய் திறக்க முடியாது. மீறி தட்டிக் கேட்கக் கூடிய மூத்த தயாரிப்பாளர்கள், பல பேர் முன்னிலையில் அவமதிக்கப்படுவர். கோவைத்தம்பி, எடிட்டர் மோகன் போன்றவர்கள் அவமதிக்கப்பட் டது, பலருக்கு அதிர்ச்சியைத் தந்தது.அதை விடக் கொடுமையாக, தயாரிப்பாளர்களின் அடி மடியிலேயே கைவைக்கும் காரியமும் நடந்தது.



ஒரு சேனல்காரர்கள், ஏராளமான தியேட்டரை முடக்கியிருந்தனர் என்றால், சங்கத் தலைவர், தன் பங்குக்கு, மொழிமாற்றுத் திரைப்படங்களை அதிகளவில் வெளியிட்டு, சின்னத் தயாரிப்பாளர்களுக்கு தியேட்டரே கிடைக்காத நிலையை ஏற்படுத்தினார்.

சென்னையை அடுத்த பையனூரில் தயாரிப்பாளர்களுக்காக, 60 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கியது, அப்போதைய அரசு. இதன் பதிவுக் கட்டணத்துக்காக தலா, 2,068 ரூபாயை எல்லாரிடமிருந்தும் வசூலித்தனர்.



அந்தத் தொகை, 4 லட்சத்து, 68 ஆயிரம் ரூபாயை புழக்கத்தில் விட்டவர்கள், சட்டசபைத் தேர்தல் முடிவு வெளியான பிறகு தான், அவசர அவசரமாக வங்கிக் கணக்கில் சேர்த்தனர்.

'கேட்க யாரிருக்கா' என நினைத்த ஒரு நிர்வாகி, சங்கப் பணம், 1 கோடியே, 30 லட்சம் ரூபாயை கையாடல் செய்துவிட்டார். தகவல் அறிந்து, 200க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள்

அவரது வீட்டை முற்றுகையிட்ட பிறகு தான் அந்தப் பணம் மீட்கப்பட்டது.இப்படி செயல்பட்டவர்கள் தான் இப்போது மீண்டும் ஓட்டு கேட்டு வந்திருக்கின்றனர்.

இவர்களின் பின்னணியில், அதே இரண்டு சேனல்கள் இருக்கின்றன; ஆட்சியை இழந்த கட்சி இருக்கிறது. இவர்களை எதிர்த்து தான், ஊழலால் அதிர்ந்துபோன மூத்த தலைமுறையும், ஊழலை எதிர்க்கும் இளைய தலைமுறையும் கிளம்பியிருக்கிறது.

இவ்வாறு அந்தத் தயாரிப்பாளர் பேசிக் கொண்டிருக்கும்போது, 'கட்!'

திரும்பவும் சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்தபடி, கேமராவை அப்படியே, 'ஜூம்' செய்கிறோம். தமிழ்த் தயாரிப்பாளர் சங்கக் கட்டடம். 'அதே அக்டோபர் 9 மாலை' என, 'சப் டைட்டில்' போடுகிறோம்.



கட்டடத்தின் வெளியில் பெரும் கூட்டம், கை நகத்தைக் கடித்தபடி காத்திருக்கிறது. இரண்டு நிமிடம் அமைதி. கேமரா ஓடிக் கொண்டிருக்கிறது. திடீரென, 'நாயகன்'

பட கிளைமாக்ஸ் காட்சி மாதிரி, உள்ளேயிருந்து ஒருவர் ஓடி வருகிறார். 'நீதி ஜெயிச்சிடுச்சே... நியாயம் வென்றிடுச்சே... ஊழல் ஒழிஞ்சிடுச்சே...' என கூச்சலிடுகிறார்.

காத்திருந்த கூட்டத்தில் பெரும் பகுதியும் அந்த உற்சாகத்தில் சேர்ந்து கொள்ள, 'தளபதி' படப் பாடல் காட்சி மாதிரி, வெடிச் சத் தமும், வண்ணப் பூச்சுகளும் பறக் கின்றன.

இப்போது டைட்டில் கார்டு போடுகிறோம்.'சுபம்!'-நமது சிறப்பு நிருபர்-







      Our Apps Available On




      Dinamalar

      Follow us