/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பப்பாளியில் கூடுதல் மகசூல்: சொட்டு நீர் பாசனம் மூலம் சாகுபடி அதிகரிப்புபப்பாளியில் கூடுதல் மகசூல்: சொட்டு நீர் பாசனம் மூலம் சாகுபடி அதிகரிப்பு
பப்பாளியில் கூடுதல் மகசூல்: சொட்டு நீர் பாசனம் மூலம் சாகுபடி அதிகரிப்பு
பப்பாளியில் கூடுதல் மகசூல்: சொட்டு நீர் பாசனம் மூலம் சாகுபடி அதிகரிப்பு
பப்பாளியில் கூடுதல் மகசூல்: சொட்டு நீர் பாசனம் மூலம் சாகுபடி அதிகரிப்பு
ADDED : செப் 07, 2011 02:40 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜகடை சுற்றுவட்டார பகுதியில், சொட்டு நீர் பாசனம் மூலம் பப்பாளி சாகுபடி செய்வது அதிகரித்துள்ளது.
சர்க்கரை நோய் மற்றும் வயிறு சம்மந்தமான நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் உள்ள பப்பாளி பழத்துக்கு, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும். நாளுக்கு நாள் பப்பாளி பழத்தின் தேவை அதிகம் உள்ள நிலையில், வீரிய ஒட்டுரக பப்பாளி செடிகளை விவசாயிகள் நிலங்களில் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டிவருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மகாராஜகடை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகள், நிலங்களில் சொட்டு நீர் பாசனம் மூலம் வீரிய ஒட்டுரக பப்பாளி செடிகளை சாகுபடி செய்துள்ளனர். ஒரு விதை எட்டு ரூபாய்க்கு வாங்கும் விவசாயிகள் ஒரு ஏக்கரில் ஆயிரம் செடிகளை நட்டு வைத்து வளர்க்கின்றனர். 6 மாதத்திற்கு பின், அறுவடைக்கு வரும் பப்பாளி காய்களை மொத்த வியாபாரிகள் மூலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஜூஸ் பாக்டரி மற்றும் சென்னை, கர்நாடகா மாநிலம் பெங்களூரு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். பப்பாளி சாகுபடியில் கூலி ஆட்கள் தேவை குறைவாக உள்ளது. மேலும் மற்ற பயிர்களை போலவே பப்பாளியும் சொட்டுநீர் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்படுவதால் தண்ணீர் பிரச்சனை இல்லாமல் போகிறது. நெல், கரும்பு,வாழை, மஞ்சள் பயிர்களுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும் நிலையில், பப்பாளி சாகுபடிக்கு குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படுவதால், விவசாயிகளுக்கு சாதகமாக உள்ளது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பல விவசாயிகள் பப்பாளி சாகுபடிக்கு மாறியுள்ளனர். இது குறித்து மகாராஜகடையை சேர்ந்த பப்பாளி சாகுபடி செய்துள்ள விவசாயி சோமசுந்தரம் கூறியது: கடந்த காலங்களில் கிணற்று பாசனம் மூலம் கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துவந்தோம். காட்டு விலங்குகள் அட்டகாசம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, ஆண்டுக்கு ஆண்டு நஷ்டமே மிஞ்சியது. இதனால், கடந்த ஆண்டில் இருந்து நான்கு ஏக்கரில் சொட்டு நீர் பாசனம் மூலம், பப்பாளி செடிகளை வளர்த்து வருகிறோம்.ஆறு மாதத்தில், ஒரு ஏக்கரில் வாரத்துக்கு ஒரு முறை இரண்டு டன் பப்பாளி உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு கிலோ, 4 ரூபாய் என்ற அளவில் மொத்த விற்பனையாளகர்கள் தோட்டத்திலே வந்து காய்களை எடுத்து செல்கின்றனர். இதன் மூலம் வாரத்துக்கு ஏக்கருக்கு, 8,000 ரூபாய் கிடைக்கிறது. செடிகளை பராமரிக்கும் முறையை பொறுத்து விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. கடந்த ஆண்டு மகாராஜகடை பகுதியில், 25 ஏக்கரில் மட்டும் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டது. விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்து வருவதால், பல விவசாயிகளும் பப்பாளி சாகுபடிக்கு மாறியுள்ளனர். தற்போது மகாராஜகடை சுற்றுவட்டார பகுதியில் மட்டும், 200 ஏக்கருக்கு மேல் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


