Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/சிரியாவிலிருந்து 26 ஊழியர்களை திரும்பப் பெறுகிறது ஐ.நா.,

சிரியாவிலிருந்து 26 ஊழியர்களை திரும்பப் பெறுகிறது ஐ.நா.,

சிரியாவிலிருந்து 26 ஊழியர்களை திரும்பப் பெறுகிறது ஐ.நா.,

சிரியாவிலிருந்து 26 ஊழியர்களை திரும்பப் பெறுகிறது ஐ.நா.,

ADDED : ஆக 18, 2011 09:02 PM


Google News

வாஷிங்டன் : சிரியாவில் பொதுமக்கள் மீது ராணுவம் நடத்திவரும் தாக்குதல் காரணமாக, மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்நாட்டிலுள்ள ஊழியர்கள் 26 பேரை தற்காலிகமாக, திரும்பப் பெறுவதாக ஐ.நா., அறிவித்துள்ளது. இதற்கிடையே, அப்பாவி மக்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக, சிரியா அதிபர் அசாத் கூறியுள்ளார்.

சிரியாவில் அதிபர் அசாத்தின் அடக்குமுறையை எதிர்த்து, பலதரப்பு மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசின் எதிர்ப்பாளர்களை அடக்கும் பொருட்டு, நாட்டின் பல்வேறு இடங்களில், அந்நாட்டு அரசு ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் இதுவரை, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரியா அரசின் அடக்குமுறைக்கு பல்வேறு உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்தாலும், அதிபர் அசாத் ராணுவ தாக்குதலை நிறுத்த தயாராக, இல்லை. இதையடுத்து, அந்நாட்டில் தங்கி, அமைதி மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ள தங்கள் அமைப்பின் ஊழியர்கள், 26 பேர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை திரும்பப் பெறுவதாக ஐ.நா., அறிவித்துள்ளது. இவர்களை லெபனான் நாட்டில் மறுகுடியமர்த்தும் பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சிரியா அதிபர் அசாத்தை ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, சிரியாவின் நிலவரம் கவலை தருகிறது என்றும், உடனடியாக ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என, பான் கி மூன் வலியுறுத்தினார். அவரின் குற்றச்சாட்டை மறுத்த அசாத், சிரியாவில் ராணுவம் மற்றும் போலீஸ் நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கிடையே, சிரியா நிலவரம் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக, ஐ.நா., பாதுகாப்பு சபை இன்று கூடுகிறது. இந்தக் கூட்டத்தில், சிரியா மக்களின் நிலை, அசாத் அரசின் அடக்குமுறைகள் தொடர்பாக, ஐ.நா., மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை விவாதிக்கிறார். அப்போது, போராட்டக்காரர்கள் மீது சிரியா ராணுவம் மேற்கொண்ட தாக்குதல்கள் குறித்து சர்வதேச குற்றவியல் கோர்ட் விசாரணைக்கு அவர் பரிந்துரைப்பார் என்று கூறப்படுகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us