Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/மரங்கள் வளர்ப்பில் விவசாயிகள் சாதனை : வனத்துறை வழங்கும் மரக்கன்றுகள்

மரங்கள் வளர்ப்பில் விவசாயிகள் சாதனை : வனத்துறை வழங்கும் மரக்கன்றுகள்

மரங்கள் வளர்ப்பில் விவசாயிகள் சாதனை : வனத்துறை வழங்கும் மரக்கன்றுகள்

மரங்கள் வளர்ப்பில் விவசாயிகள் சாதனை : வனத்துறை வழங்கும் மரக்கன்றுகள்

ADDED : ஜூலை 24, 2011 11:49 PM


Google News

மதுரை : வனப்பரப்பை அதிகரிக்க, வனத்துறையின் வன விரிவாக்க பிரிவு தனியார் நிலங்களில் விவசாயம் சார்ந்த மரங்கள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளது.

இலவச மரக்கன்றுகளை வழங்குவதுடன், மானியமும் வழங்குகிறது. மதுரை மாவட்டம் மேலக்கால், விக்கிரமங்கலம் விவசாயிகள் இத்திட்டத்தில் சாதனை புரிந்து வருகின்றனர். மதுரை பசுமலை வனவிரிவாக்க மையத்தின் தோட்டம் டி.கல்லுப்பட்டி அருகே காரைக்கேணியில் உள்ளது. தேக்கு, இலவம் பஞ்சு, மகாகனி, பெருமரம், வாகை, குமிழ், வேம்பு, சவுக்கு மரக்கன்றுகள் இங்கு வளர்க்கப்படுகின்றன. சிறு, குறு விவசாயிகளுக்கு ஐந்து ஏக்கரில் நட 2000 மரக்கன்றுகள், ஏக்கருக்கு 4000 சவுக்கு கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. குழி அமைத்து நட ஒரு கன்றுக்கு ரூ.,5.20, முதல் ஆண்டிற்கு மட்டும் பராமரிப்புக்கு ரூ.5 மானியம் வழங்கப்படுகிறது.



மேலக்கால், விக்கிரமங்கலம், தாராபட்டி, நரியம்பட்டி, பன்னியான், மம்பட்டிபட்டி, கோவில்பட்டி, உசிலம்பட்டி, டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதிகளில் தனியார் நிலங்களில் இத்திட்டத்தில் விவசாயிகள் மரங்கள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சிலர் கூறியதாவது: பிரபாகரன், தாராபட்டி: பல ஆண்டுகளாக விவசாயம் செய்கிறேன். தென்னை விவசாயம் பயனளிக்கவில்லை. வனத்துறை 2008 ல் 500 தேக்குமரக்கன்றுகள் வழங்கியதுடன், நட ரூ.3500, பராமரிப்புக்கு ரூ.2500 மானியம் வழங்கியது. சொந்த செலவில் 1500 தேக்கு, 3000 சவுக்கு கன்றுகளை வாங்கினேன். மொத்தம் 4 ஏக்கர் 26 சென்ட் நிலத்தில் தலா 12 அடி இடைவெளியில் நட்டுள்ளேன். இதில், 95 சதவீதம் நல்ல வளர்ச்சியடைந்துள்ளன. இவை 15 ஆண்டுகளுக்கு பின் அதிக வருவாய் கொடுக்கும். கிணற்று நீர் உள்ளதால் ஊடு பயிராக வாழை, கம்பு, சம்பங்கி பயிரிட்டுள்ளேன். ஆண்டு முழுவதும் விவசாயத்தில் வருவாய் கிடைக்கிறது.

விஜயகுமார், மேலக்கால்: வனத்துறை 2008 ல் வழங்கிய 350 தேக்கு, குமிழ் மரக்கன்றுகளை 2.5 ஏக்கரில் நட்டுள்ளேன். மானியம் ரூ.4250 வழங்கினர். மரங்களக்கு ஊடாக சீமைப்புல், செவ்வந்தி, வெண்டை, வாழை பயிரிடுகிறேன். நிரந்தர வருவாய் கிடைக்கிறது.



பாண்டி, நரியம்பட்டி: வனத்துறை வழங்கிய 450 தேக்கு, குமிழ் மரக்கன்றுகளை 2 ஏக்கரில் நட்டுள்ளேன். மானியம் ரூ.2400 வழங்கினர். இதற்கு ஊடாக வாழை, தக்காளி பயிரிட்டுள்ளேன். கிணற்று நீரை பயிர்களுக்கு பாய்ச்சும் போதும், உரமிடும்போதும் தேக்குகன்றுகளும் பயனடைகின்றன. மரங்கள் பராமரிப்பிற்கு கூலியாட்கள் தேவையில்லை. எதிர்காலத்தில் வருவாய் ஈட்ட முடியும். நரியம்பட்டியில் ஒரு விவசாயி ரூ.பல லட்சத்துக்கு தேக்குமரங்களை விற்பனை செய்தார். அது, எங்களுக்கு உந்துசக்தியாக இருந்தது. வனவிரிவாக்க அலுவலர் ராஜசேகரன்: தற்போது 75 ஆயிரம் செடிகள் தயார் நிலையில் உள்ளன. தண்ணீர் வசதியுள்ள விவசாயிகள் சிட்டா அடங்கல் நகலுடன் பசுமலை வன விரிவாக்க மையத்தில் ஆக., 31 க்குள் விண்ணப்பிக்கலாம். பருவமழையை பயன்படுத்தி நட ஏதுவாக அக்டோபரில் கன்றுகள், அடையாள அட்டைகள் வழங்கப்படும். தண்ணீர் வசதியுள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை உண்டு. விபரங்களுக்கு 0452-209 0914, வனச்சரகர் பாலசுப்பிரமணியன் 98427 56239 ல் தொடர்பு கொள்ளலாம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us