ADDED : அக் 07, 2011 10:23 PM

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் 14வது வார்டை கடந்த மூன்று உள்ளாட்சித் தேர்தல்களிலும் தொடர்ந்து பா.ஜ., வெற்றி பெற்று தனது கோட்டையாக தக்க வைத்துள்ளது.
கடந்த 2006ல் பா.ஜ., வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட தே.மு.தி.க., துரை.சரவணன் இரண்டாம் இடம் பெற்றார். இந்த தேர்தலில் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட துரை.சரவணன், தன்னை பா.ஜ.,வில் இணைத்துக் கொண்டு மனுத்தாக்கல் செய்தார். அ.தி.மு.க., சார்பில் 14வது வார்டில் போட்டியிடும் மாலிக், தனது வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என கருதினார். அ.தி.மு.க., முக்கிய பிரமுகர்கள் மூலம் துரை.சரவணனை, வாபஸ் பெற பல வழிகளில் முயற்சி செய்தார்.
சரவணனின் நண்பர்களை தொடர்பு கொண்டார். வாபஸ் பெற வைக்கும் நண்பனுக்கு ஒரு லட்சம் முதல் 3 லட்சம் வரை பேரம் பேசப்பட்டது. தொடர்ந்து வற்புறுத்தலுக்கு ஆளான துரை.சரவணனின் குடும்பம் குழப்பத்திற்கு ஆளானது. இதை அறிந்த பா.ஜ., முக்கியப்புள்ளிகள், அவரை, மனு வாபஸ் பெறும் நாளன்று தலைமறைவாக வைத்திருந்தனர். இதனால் கட்சி தாவியும் பேரத்தில் சிக்காமல் உற்சாகமாக களத்தில் வலம் வர ஆரம்பித்துள்ளார் துரை.சரவணன்.


