ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சேக்கிழார், அருணகிரிநாதரின் திருவான்மியூர் தலபுராணம், திருப்புகழ், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பாம்பன் குமரகுருதான சுவாமிகள், அருட்கவி சேதுராமன் பாடல்கள் இவ்வூரைப்பற்றிய செய்திகளைத் தருகின்றன.
வான்மீகியுடன் தொடர்புடையது என்ற கர்ணபரம்பரைக் கதை ஒன்று <உலவுகிறது.
திருவான்மியூர் தலபுராணத்தில் சொல்லப்படுபவை நம்பத்தகுந்ததாக இல்லை என்பதே பலரின் கருத்தும். சைவக்குரவர்களின் பாடல்களில் சொல்லப்பட்டுள்ள இறைச்சிறப்பு, கடல்வளம், வாணிபம், மக்கள் மாளிகையில் வசித்தது, மதில்சூழ்ந்த ஊர் போன்ற திருவான்மியூரின் சிறப்புகள் உண்மையாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
நெடுங்கோபுரம், சுற்றுப்பகுதி, உள்ளே கோவில் என தெளிவாக கோவிலின் வடிவமைப்புப் பற்றி பாடியுள்ளனர்.
திருவான்மியூரில் அம்மன் கருவறையின் புறச்சுவர்களில் சோழர்கால கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஆனால், சிவன் கருவறையைச் சுற்றி ஒரு கல்வெட்டு கூட இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
'அஞ்சி நாண்மலர் தூவி அழுதீரேல் வஞ்சம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே', 'நாண்மலர் தூவி வலஞ்செயில் வாட்டம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே' என்ற நாவுக்கரசரின் பாடல் வரிகளில் திருவான்மியூர் சிவனின் பெருமைகள் சுட்டப்பட்டுள்ளன.
தேவாரத்தில் சுட்டப்படுவதற்கு முன்னரே, இவ்வூர் பெருமையும், பழமையும் வாய்ந்ததாக இருந்திருக்கிறது. வான்மியூர் என்பதே இவ்வூர்ப்பெயராக இருந்திருக்க வேண்டும். 'திரு' என்ற அடைமொழி பக்தி இயக்க காலத்தில் சேர்ந்திருக்க வேண்டும். மரங்கள் அடர்ந்த பகுதி என்ற பொருளும் கொள்ளலாம். சோலைகள் சூழ்ந்த, கடற்கரைத் தலம் என்ற குறிப்புகள் உள்ளன. வான்மிகம் என்றால் புற்று என்று ஒரு பொருள் உண்டு. புற்றுகள் நிறைந்த பகுதியாக இது அறியப்படுகிறது. அருகில் உள்ள ஒற்றியூர், கோடகன்பாக்கமாகிய கோடம்பாக்கம் போன்ற ஊர்ப்பெயர்கள் புற்றோடு தொடர்புடையன. அதேபோல், புற்றுடன் தொடர்புடையதாக வான்மியூர் எனப் பெயர் பெற்றிருக்கலாம் என, ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


