Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/சாலை பணிகளுக்கான டெண்டர் ரத்து : மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் அதிர்ச்சி

சாலை பணிகளுக்கான டெண்டர் ரத்து : மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் அதிர்ச்சி

சாலை பணிகளுக்கான டெண்டர் ரத்து : மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் அதிர்ச்சி

சாலை பணிகளுக்கான டெண்டர் ரத்து : மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் அதிர்ச்சி

ADDED : ஜூலை 13, 2011 10:59 PM


Google News

சென்னை மாநகரில் உள்ள சாலைகளை சீரமைக்க கோரப்பட்ட, பல கோடி ரூபாய் டெண்டரை மாநகராட்சி ரத்து செய்துள்ளது.

குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்களுக்காக, டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. வடகிழக்கு பருவமழை செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் எதிர்பார்ப்பதால், அதற்கு முன் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக, 10 மண்டலங்களில், 500க்கும் மேற்பட்ட சாலைகளை 60 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்க மாநகராட்சியின் டெண்டர் கோரப்பட்டது.இந்த டெண்டர்கள் முடிவு செய்வதற்குள், ரத்து செய்யப்பட்டுள்ளன.



இதனால், ஒப்பந்ததாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டெண்டர் ரத்து செய்தது பற்றி, ஒப்பந்ததாரர்கள் மாநகராட்சியை அணுகியதற்கு, ஒப்பந்த விலை குறைவாக குறிப்பிட்டதால், அதை திருத்தி வெளியிடுவதற்காக டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய ஒப்பந்த விலையில் விரைவில் டெண்டர் விடப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், மாநகராட்சியின் பல இடங்களில், கட்டடங்களின் கீழ் தளத்தைக் காட்டிலும், சாலையின் உயரம் அதிகமாக இருக்கிறது. இதனால், மழை காலங்களில் தண்ணீர் கட்டடங்களுக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது.எனவே, சாலைகளின் உயரத்தை குறைக்க, தற்போதுள்ள சாலைகளைத் தோண்டி மீண்டும் சாலை அமைக்க வேலை யையும் (மில்லிங்) செய்ய வேண்டி உள்ளதால், அந்த பணிகளையும் சேர்த்து புதிய டெண்டர் விடப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.



டெண்டர் ரத்து குறித்து ஒப்பந்ததாரர்கள் தரப்பில் கூறுகை யில், ''மாநகராட்சி டெண்டரில் குறிப்பிட் டுள்ள சாலை பணிகளில், 'மில்லிங்' செய்ய வேண்டிய பணிகள் எதுவும் இல்லை. 'மில்லிங்' செய்ய வேண்டிய பணிகள் இருந்தால், அதை தனி டெண்டராக விடலாம்'' என்றனர்.'மில்லிங்' செய்ய வேண்டிய சாலைகளையும் சேர்த்து டெண்டர் விடும் போது, 'மில்லிங்' மிஷன் வைத்துள்ள ஒப்பந்ததார்களே, ஒப்பந்தத்தில் பங்கேற்க முடியும். மாநகராட்சியில் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரர்களில் 500 பேரில், 20க்கும் குறைவானவர்களே, 'மில்லிங்' மிஷன் வைத்துள்ளனர். மாநகராட்சி சாலைகளில் 30 சதவீதத்துக்கும் குறைவான சாலைகளே, 'மில்லிங்' செய்ய வேண்டியவை.



இந்நிலையில், சாதாரணமாக மறுசீரமைப்பு செய்ய வேண்டிய சாலைகளுக்கு விடப்பட்ட டெண்டரை ரத்து செய்துள்ளனர் என்றும் ஒப்பந்ததாரர்கள் கூறுகின்றனர். ஒப்பந்ததாரர்களின் புகார் தொடர்பாக கேட்டபோது, கமிஷனர் கார்த்திகேயன், ''மில்லிங் செய்யும் சாலைகள், மில்லிங் செய்யப்படா சாலைகள் என்று பிரித்து தான், டெண்டர் விட உள்ளோம். குறிப்பிட்ட சில ஒப்பந்ததார்களுக்காக, டெண்டர் ரத்து செய்யப்படவில்லை'' என்கிறார்.தரமற்ற 'மில்லிங்' பணிசாலையை ஒரு அடி தோண்டி, அப்புறப்படுத்தி விட்டு, மீண்டும் சாலை அமைப்பது தான், 'மில்லிங்' பணி என்று அழைக்கப்படுகிறது. ஆனால், மூன்று அங்குலம் தோண்டிவிட்டு, சாலை அமைத்து விடுகின்றனர். இதனால், எதற்காக, 'மில்லிங்' செய்யப்படுகிறதோ அந்த நோக்கம் நிறைவேறுவதில்லை என்ற புகார் உள்ளது. எனவே, 'மில்லிங்' செய்வதை முறைப்படுத்த வேண்டும். இல்லையேல், மாநகராட்சி பணம் தான் விரையமாகும்.



- எஸ். திருநாவுக்கரசு -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us