
முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேட்டி : தமிழக காங்கிரசில், போலி உறுப்பினர்கள் இல்லாமல், அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை, தேர்தல் நடத்தி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேட்டி : எண்ணற்ற இன்னல்களைக் கடந்து, ம.தி.மு.க., தலை நிமிர்ந்து நிற்கிறது. இளம் தலைமுறையினரின் பார்வை எங்கள் பக்கம் திரும்பியிருக்கிறது. ஊழலற்ற ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர். ஒளிமிக்க எதிர்காலத்தைத் தருவோம் என்று நம்புகின்றனர். நேர்மையான, ஜாதி, மத பேதமற்ற அரசியல் பாதையை இளைஞர்களுக்கு காட்டுவோம்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு : நம் கோரிக்கை, சமச்சீர் கல்விக்கு வழி விடுங்கள் என்பது தான். என் மக்கள் இனியும் ஆடு, மாடு மேய்க்கக் கூடாது. ஏழை, பணக்காரன் வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் ஒரே கல்வி தேவை. எங்களுக்கு இலவசங்கள் தேவையில்லை; அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி வழங்க வேண்டும் என்பது தான் பா.ம.க.,வின் கோரிக்கை.
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேட்டி: தமிழக அரசு திட்டமிட்டு தி.மு.க., வினர் மீது பொய் வழக்குகள் போடுகிறது. இப்படிச் செய்து தி.மு.க.,வை ஒடுக்க நினைத்தால், அது பலிக்காது.
இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பச்சமுத்து பேச்சு: இந்தியாவில் உயர்கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு, 15 லட்சமாகவும், தமிழகத்தில் அது இரண்டு லட்சம் எனவும் உள்ளது. கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகிய மூன்று பிரிவினரும் ஒருங்கிணைந்து செயல்படும் போது, கல்வியில் முன்னேற்றம் காண முடியும்.
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் பேச்சு: உலக வெப்பமயமாதல் சிக்கலை கட்டுப்படுத்த, தன் பங்கை நிறைவேற்ற இந்தியா உறுதி பூண்டுள்ளது. மாசு இல்லாத எரி ஆற்றலையும், மின்னாற்றலையும் பயன்படுத்த, இந்தியா உறுதிப்பூண்டுள்ள அதே நேரத்தில், ஏழைகளை நெருக்கி இந்த தேவையை நிறைவேற்ற முடியாது.
முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேட்டி : விஜயகாந்த் மேல் எனக்கு எந்தக் கோபமும் இல்லை. ஒரு தலைவர் என்றால், தனிநபர் ஒழுக்கம் வேண்டும்; இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். ஆனால், விஜயகாந்த் அதற்கு நேர் எதிராக இருக்கிறார். அவரின் ஒரே தகுதி சினிமா மட்டும் தான். தமிழகத்தில், இன்று மக்கள் மீது அக்கறையும், கொள்கை பிடிப்பும் உள்ள ஒரே கட்சி பா.ம.க., மட்டும் தான். அதை நீங்கள் யாரும் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள்.
தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை : இலவச பசு மாடு மற்றும் ஆடுகள் வழங்குவது, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப வருமானத்தையும், கிராமப்புற பொருளாதாரத்தையும் மேம்படுத்தும். ஆனால், பசுக்களை வழங்கும் போது, கலப்பின பசுக்களை வழங்காமல் நாட்டு பசுக்களை வழங்க வேண்டும். அதே சமயம், நாட்டு பசுக்களின் பால் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில், தொழில் நுட்பங்களையும் வளர்க்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் தா.பாண்டியன் பேட்டி : விலைவாசி உயர்வில், மத்திய அரசே முதல் குற்றவாளி. விலைவாசியை ஏற்றியதே மத்திய அரசு தான்.
தமிழக விவசாயிகள் சங்க பொதுச் செயலர் சண்முகம் அறிக்கை: விவசாயிகளுக்கு நேரடியாக பலன் அளிக்கும் வகையில், பட்ஜெட்டில் எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. வேளாண் உற்பத்தியை பெருக்க விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில், வேளாண் விளைபொருட்களுக்கான கட்டுப்படியான விலையை, முன்கூட்டியே அறிவிப்பது அவசியம்.
ம.தி.மு.க., கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத் பேச்சு: முல்லை பெரியாறு அணை பகுதியில், கேரள அரசு புதிய அணை கட்ட, ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகும் சட்டத்தை மீறிய, அரசின் இந்த செயல், கடந்த அச்சுதானந்தன் அரசை போலவே செயல்படுவதை காட்டுகிறது. இதற்கு, ஜெயலலிதா என்ன செய்ய போகிறார்?
பா.ம.க., தலைவர் மணி பேச்சு: தமிழகத்தில் பா.ம.க., எந்த கட்சியுடன் கூட்டணி சேருகிறதோ, அது தான் வெற்றி கூட்டணியாக, பல ஆண்டுகளாக இருந்து வந்தது. கடந்த லோக்சபா, சட்டசபை தேர்தலில் மட்டும் சற்று வித்தியாசம் ஏற்பட்டது. பா.ம.க., தலைமையில் மாற்று அணி அமைக்கப்பட்டுள்ளது. இதை, படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவரும் வரவேற்று, ராமதாஸ் எடுத்துள்ளது நல்ல முடிவு என கூறுகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேச்சு : இலவசத் திட்டங்கள் மக்களைச் சோம்பேறியாக்கும். மக்கள் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்துமாறு உழைத்து சம்பாதிக்க வேண்டும். அந்த உழைப்பின் சம்பாத்தியத்தில் சாப்பிட்டால் தான், உடம்பில் ஒட்டும்.


