உள்ளாட்சி தேர்தல் : வேட்பாளர் இறுதிபட்டியல் ; ஒரு லட்சம் பதவிக்கு 4 லட்சத்திற்கு மேல் போட்டி
உள்ளாட்சி தேர்தல் : வேட்பாளர் இறுதிபட்டியல் ; ஒரு லட்சம் பதவிக்கு 4 லட்சத்திற்கு மேல் போட்டி
உள்ளாட்சி தேர்தல் : வேட்பாளர் இறுதிபட்டியல் ; ஒரு லட்சம் பதவிக்கு 4 லட்சத்திற்கு மேல் போட்டி

சென்னை: வரும் 17 மற்றும் 19 தேதிகளில் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்தல் களத்தில் இருக்கின்றனர். தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி நெருங்கி வருகிறது. தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு அ.தி.மு.க., , தி.மு.க., தே.மு.தி.க., மற்றும் தேசிய கட்சிகளான காங்., பா.ஜ., தனித்து போட்டியிடுகின்றன. தங்களுடைய தனிப்பட்ட செல்வாக்கை நிரூபிக்கும் நோக்கில் அரசியல்கட்சியினர் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
மொத்தம் தமிழகத்தில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 697 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு கடந்த 22 ம் தேதி துவங்கியது. செப்., 29 வேட்பு மனு கடைசி நாள், தாக்கலான மனுக்கள் அக்., 3 ல் திரும்பபெற கடைசிநாள் என்றும், இறுதிப்பட்டியல் இன்று ( 4ம் தேதி ) என்றும் தமிழக தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இதன்படி தேர்தல் இறுதிக்களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் விவரத்தை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. மொத்தம் 5 லட்சத்து 27 ஆயிரத்து 875 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். 86 ஆயிரத்து 983 பேர் வாபஸ் பெற்றனர். உரிய முறையில் விண்ணப்பிக்காத 10 ஆயிரத்து 76 பேர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 19 ஆயிரத்து 646 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தற்போது 4 லட்சத்து 11 ஆயிரத்து 177 பேர் களத்தில் வேட்பாளர்களாக உள்ளனர். மொத்தம் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 697 பதவிக்கு போட்டியாளர்கள் நான்கு மடங்கு அதிகரித்து தங்கள் வெற்றிகளை நோக்கி களத்தில் நிற்கின்றனர்.
தேர்தல் கமிஷன் ஆலோசனை: தேர்தல் கமிஷனர் சோ.அய்யர் தலைமையில் இன்று சென்னையில் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சென்னை காஞ்சிபுரம் , திருவள்ளூர், மாவட்ட தேர்தல் அலுவலர்கள், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து வரும்7 , 8 , 10 தேதிகளில் தென்மாவட்டங்களில் அய்யர் ஆலோசனை நடத்தவிருக்கிறார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 23 ஆயிரம் பேர் களத்தில்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 5,726 பதவிகளுக்கு 23 ஆயிரத்து 20 பேர் இறுதி களத்தில் உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 27 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 252 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 633 ஊராட்சி தலைவர்கள், 4,617 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 8 நகராட்சி தலைவர்கள், 249 நகராட்சி உறுப்பினர்கள், 18 பேரூராட்சி தலைவர்கள், 297 பேரூராட்சி உறுப்பினர்கள், ஆகியோரை தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் 17 மற்றும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இவற்றுக்கான மனு தாக்கல் கடந்த மாதம் 22ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை நடந்தது. 30ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடந்தது. கடந்த 3ம் தேதி வாபஸ் நாளில் பலர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 198 பேர் மனுதாக்கல் செய்தனர். இதில் 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 40 பேர் வாபஸ் பெற்றனர். தற்போது 155 பேர் களத்தில் உள்ளனர். ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 1,776 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில் 38 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 392 பேர் வாபஸ் பெற்றனர். இறுதியாக 1,346 பேர் களத்தில் உள்ளனர். ஊராட்சி தலைவர் பதவிக்கு 3,726 பேர் மனுதாக்கல் செய்தனர். இதில் 28 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 1,007 பேர் வாபஸ் பெற்றனர். தற்போது 2,678 பேர் களத்தில் உள்ளனர். ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, 17 ஆயிரத்து 564 பேர் மனுதாக்கல் செய்தனர். இதில் 182 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 1,541 பேர் வாபஸ் பெற்றனர். தற்போது 15 ஆயிரத்து 480 பேர் களத்தில் உள்ளனர். நகராட்சி தலைவர் பதவிக்கு 111 பேர் மனுதாக்கல் செய்தனர். இதில் 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 29 பேர் வாபஸ் பெற்றனர். தற்போது 80 பேர் களத்தில் உள்ளனர். நகராட்சி உறுப்பினர் பதவிக்கு 2,054 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். இதில் 32 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 379 பேர் வாபஸ் பெற்றனர். தற்போது 1,642 பேர் களத்தில் உள்ளனர். பேரூராட்சி தலைவர் பதவிக்கு 183 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். இதில் 5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 53 பேர் வாபஸ் பெற்றனர். இறுதியில் 125 பேர் களத்தில் உள்ளனர். பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு 1,830 பேர் மனுதாக்கல் செய்தனர். இதில் 62 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 255 பேர் வாபஸ் பெற்றனர். தற்போது 1,513 பேர் களத்தில் உள்ளனர். மொத்தம் உள்ள 6,101 பதவிகளில், 13 ஊராட்சி தலைவர்கள், 361 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஒரு நகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மீதமுள்ள 5,726 பதவிகளுக்கு, 23 ஆயிரத்து 20 பேர் போட்டியிடுகின்றனர்.
திருமங்கலம் நகராட்சியில் 27 வார்டுகளில் 134 பேர் போட்டி : திருமங்கலம் நகராட்சியில் 27 வார்டுகளுக்கு 47 பெண்கள் உட்பட 134 பேர் போட்டியிடுகின்றனர். 1வது வார்டிற்கு 6 பேர், 2க்கு 7 பேர், 3க்கு 6 பேர், 4க்கு 4 பேர், 5க்கு 8 பேர், 6க்கு 5 பேர், 7க்கு 7 பேர், 8க்கு 7 பேர், 9க்கு 4 பேர், 10க்கு 8 பேர், 11க்கு 6 பேர், 12க்கு 4 பேர், 13க்கு 4 பேர், 14க்கு 6 பேர், 15க்கு 4 பேர், 16க்கு 4 பேர், 17க்கு 4 பேர், 18க்கு 4 பேர், 19க்கு 4 பேர், 20க்கு 4 பேர், 21க்கு 3 பேர், 22க்கு 3 பேர், 23க்கு 4 பேர், 24க்கு 5 பேர், 25க்கு 2 பேர், 26க்கு 6 பேர், 27க்கு 5 பேர் என 47 பெண்கள் உட்பட 134 பேர் போட்டியிடுகின்றனர். 25வது வார்டில் அ.தி.மு.க., தி.மு.க., மட்டும் மோதுகின்றன.


