/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/வாலாஜாபாத் பேரூராட்சி தலைவர் பதவி தக்கவைக்க தி.மு.க., கடும் முயற்சிவாலாஜாபாத் பேரூராட்சி தலைவர் பதவி தக்கவைக்க தி.மு.க., கடும் முயற்சி
வாலாஜாபாத் பேரூராட்சி தலைவர் பதவி தக்கவைக்க தி.மு.க., கடும் முயற்சி
வாலாஜாபாத் பேரூராட்சி தலைவர் பதவி தக்கவைக்க தி.மு.க., கடும் முயற்சி
வாலாஜாபாத் பேரூராட்சி தலைவர் பதவி தக்கவைக்க தி.மு.க., கடும் முயற்சி
ADDED : அக் 09, 2011 12:24 AM
வாலாஜாபாத் : வாலாஜாபாத் பேரூராட்சித் தலைவர் பதவியை தக்க வைத்துக் கொள்ள, தி.மு.க.,வினர், தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இவற்றில், 9,119 வாக்காளர்கள் உள்ளனர். பேரூராட்சித் தலைவர் பதவிக்கு, அ.தி.மு.க., சார்பில், நாகராஜன், தி.மு.க., சார்பில், ரவி, ம.தி.மு.க., சார்பில், அரிகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில், சுகுமார், தே.மு.தி.க., சார்பில், பழனி ராஜ், பா.ஜ., சார்பில், ராதாகிருஷ்ணன் போட்டியிடுகின்றனர். தி.மு.க., - அ.தி.மு.க., சார்பில், 15 வார்டுகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இவற்றில், 1, 3, 4, 5, 8, 9, 10, 15 ஆகிய வார்டுகளில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., இடையே நேரடி போட்டி உள்ளது. இரண்டு மற்றும் 14வது வார்டில், தே.மு.தி.க., வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால், ஓட்டுகள் பிரிய வாய்ப்புள்ளது. அதே போல், 7 மற்றும் 13வது வார்டில், காங்கிரஸ் வேட்பாளர்கள் நெருக்கடி கொடுப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவை தவிர, 6, 11, 12, 14, ஆகிய வார்டுகளில், சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால், யாருக்கு வெற்றி என்பதை கணிக்க முடியாத நிலை உள்ளது.
பேரூராட்சி துவக்கப்பட்டதிலிருந்து, தலைவர் பதவி தி.மு.க., வசம் உள்ளது. அதை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், தி.மு.க.,வினர் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆளுங்கட்சியாக இருப்பதால், இம்முறை எப்படியும் தலைவர் பதவியை பிடிக்க வேண்டும் என்ற வெறியுடன், அ.தி.மு.க.,வினர் வேகம் காட்டுகின்றனர். உத்திரமேரூர் எம்.எல்.ஏ., கணேசன், வாலாஜாபாத்தைச் சேர்ந்தவர் என்பதால், தலைவர் பதவியை பிடிப்பதில் முனைப்பு காட்டுகிறார். இதனால், வாலாஜாபாத் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. கடந்த சட்டசபை தேர்தலின்போது, பேரூராட்சிப் பகுதியில் தி.மு.க.,விற்கு அதிக ஓட்டுகள் விழுந்ததால், தி.மு.க.,வினர் தெம்பாக உள்ளனர்.


