Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரயில்வே பாலத்துக்காக போராட்டம் முடிவல்ல...ஆரம்பம் : பிள்ளையார் சுழி போடும் பீளமேடு மக்கள்

ரயில்வே பாலத்துக்காக போராட்டம் முடிவல்ல...ஆரம்பம் : பிள்ளையார் சுழி போடும் பீளமேடு மக்கள்

ரயில்வே பாலத்துக்காக போராட்டம் முடிவல்ல...ஆரம்பம் : பிள்ளையார் சுழி போடும் பீளமேடு மக்கள்

ரயில்வே பாலத்துக்காக போராட்டம் முடிவல்ல...ஆரம்பம் : பிள்ளையார் சுழி போடும் பீளமேடு மக்கள்

ADDED : ஆக 28, 2011 11:48 PM


Google News
கோவை : ரயில்வே மேம்பாலங்களைக் கட்டுவதற்கு தாமதமாகி வருவது, மக்களிடம் கடும் கொதிப்பை ஏற்படுத்தி வருகிறது; முதற்கட்டமாக, பீளமேடு மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கோவை நகரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் ரயில்வே 'கேட்' இருப்பதால், தினமும் பல ஆயிரம் வாகனங்கள், பல மணி நேரம் சிக்கிக் கொள்கின்றன; இதனால், நேர விரயம், எரிபொருள் விரயம் ஏற்படுவதுடன், கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. புதிய ரயில்வே மேம்பாலங்களைக் கட்டுவதற்கான முயற்சிகளோ, அறிகுறிகளோ எதுவுமே தெரியவில்லை. இருகூர், மதுக்கரை மார்க்கெட் ரோடு, நஞ்சுண்டாபுரம், ஈச்சனாரி ஆகிய இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் கட்டும் பணி துவங்கி, பல ஆண்டுகளாக இழுத்து வருகிறது. பணிகளை வேகப்படுத்தவும், விரைவாக முடிக்கவும் உரிய துறைகள் நடவடிக்கை எடுப்பதே இல்லை. இதற்காக எந்த அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்கவும் முன் வருவதில்லை. இதன் விளைவு, பொது மக்களே போராட்ட களத்தில் நேரடியாகக் குதிக்கத் தயாராகி விட்டனர். பீளமேடு பகுதி பொது மக்கள்தான், இதற்கு முதல் முதலாக 'பிள்ளையார் சுழி' போட்டுள்ளனர். 'பீளமேடு-விளாங்குறிச்சி ரோட்டில் உடனடியாக ரயில்வே மேம்பாலப் பணியைத் துவக்க வேண்டும்' என்று வலியுறுத்தி, வரும் 4ம் தேதியிலிருந்து போராட்டத்தை இவர்கள் முன்னெடுக்கவுள்ளனர். எடுத்த எடுப்பில் இவர்கள் போராட்டத்தில் இறங்கி விடவில்லை. கடந்த பல ஆண்டுகளாக இதற்காக மனுப்போர் நடத்தி விட்டு, அவை எதற்குமே எந்த பலனும் ஏற்படாத நிலையில் தான், நேரடிப் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளனர். போராட்டங்களை வழி நடத்த 'ரயில்வே மேம்பால நடவடிக்கை குழு' என்ற அமைப்பையும் இவர்கள் துவக்கியுள்ளனர்.பீளமேடு மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்காகப் போராடி வரும் பூளைமேடு கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு, இந்த பாலம் தொடர்பான பல்வேறு தகவல்களையும் தகவல் உரிமைச் சட்டத்தில் வாங்கி வைத்துள்ளது. ஒவ்வொரு துறையும் வெவ்வேறு தகவல்களைக்கொடுத்து இஷ்டத்துக்கு குழப்பியடித்திருப்பது, இந்த போராட்டத்துக்கு மற்றொரு முக்கியக் காரணம். ரயில்வே கொடுத்துள்ள பதிலில், 'ரயில்வே பகுதி பாலம் கட்டும் பணிக்கு, 'ராமநாதன் இன்பிராஸ்ட்ரக்சர்' என்ற கட்டமைப்பு நிறுவனத்திடம் பிப்.,17லேயே பணி ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும், மாற்று வழி இல்லாததால் இன்னும் பணி துவங்கவில்லை' என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு நேருக்கு மாறாக பதில் அளித்துள்ளது, நெடுஞ்சாலைத்துறை. இத்துறையின் நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் பிரிவின் கோட்டப்பொறியாளர் கவுதமராஜா அனுப்பியுள்ள பதிலில், 'பாலத்துக்கான மதிப்பீடு, நில ஆர்ஜித பிரேரணைகளே இன்னும் தயாராகவில்லை' என்ற புதிய தகவலும் கிடைத்துள்ளது. மாற்றுப்பாதை தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துடன் எந்த கூட்டமும் நடைபெறவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இந்த பதில்களின் மூலமாக, ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாததும் தெரியவந்துள்ளது. இதே நிலை நீடித்தால், பாலம் கட்டும் பணியைத் துவங்கவே மேலும் பல ஆண்டுகளாகி விடும். எனவே, பணியை துவங்கவும், துரிதப்படுத்தவும் வலியுறுத்தி, வரும் 4ம் தேதியன்று வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றும் போராட்டத்தை நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது. அடுத்த கட்டமாக, செப்.,25ல் மனித சங்கிலி போராட்டமும், அக்.,9ல் ரயில் மறியல் போராட்டமும் நடத்த, 'ரயில்வே மேம்பால நடவடிக்கை குழு' முடிவெடுத்துள்ளது. இந்த போராட்டம் தொடர்பாக, பொது மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்படுவதாக பூளைமேடு கன்ஸ்யூமர் வாய்ஸ் தலைவர் கோபால் தெரிவித்தார். பீளமேட்டிலுள்ள 20 குடியிருப்புகளைச் சேர்ந்த மக்களிடமும் இதற்காக ஆதரவு திரட்டப்படுகிறது. இந்த போராட்டம் துவங்குவதற்கு முன்போ, முடிவதற்கு முன்போ, அரசுத்துறைகள் இணைந்து மேம்பாலப் பணியைத் துவக்குவதற்கான நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் வலுப்பெறுவதோடு, மற்ற பகுதி மக்களையும் தூண்டி விடுமென்பது நிச்சயம். பொதுமக்களின் போராட்டங்களுக்காக இல்லாவிட்டாலும், கோவை நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல்களுக்குத் தீர்வு காணும் பொருட்டாவது ரயில்வே மேம்பாலங்களைக் கட்ட முயற்சி எடுக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை; பாலம் கட்ட காலம் கடத்தினால், அடுத்த தேர்தலின்போது, பொது மக்களின் அதிருப்திப் பட்டியலிலும் இதுவே முதலிடம் பிடிக்கும். பணமிருக்கு; மனமில்லை : பீளமேடு ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிக்காக மாற்றுப்பாதை அமைப்பதற்கான வழிமுறையையும், 'ராக்' மற்றும் பூளைமேடு கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்புகள் தெளிவுபடுத்தியுள்ளன. இந்த ரோட்டை அமைக்க நிதி தரவும் தயாராக இருப்பதாக உள்ளூர் திட்டக் குழுமமும் தெரிவித்துள்ளது. இதற்காக முயற்சி எடுக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகளுக்கோ, இதைப்பற்றிய எந்த அக்கறையும் இல்லை என்பது தான் வேதனை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us