PUBLISHED ON : அக் 08, 2011 12:00 AM

யார் கணக்கு வெற்றியைத் தரும்?
ச.கீரன், திருச்சியிலிருந்து எழுதுகிறார்: கடந்த முறை உள்ளாட்சித் தேர்தலின்போது, மாநில தேர்தல் கமிஷன், காவல்துறை, தேர்தல் அதிகாரிகள் அனைவரையும் கைக்குள் போட்டுக் கொண்டு, பலவிதமான குறுக்கு வழிகளில் தி.மு.க., வென்றது. பதவிகளை பிடித்தவர்கள், முடிந்தவரை லாபம் பார்த்துக் கொண்டனர். அவர்களையே மீண்டும் கட்சி சார்பாக நிறுத்தி விட்டால், ருசி கண்ட பூனையாக எப்படியும் ஜெயித்து வந்து விடுவர் என்று மனப்பால் குடிக்கிறார் கருணாநிதி. ஆனால், ஆட்சி பறிபோனதற்கே, கட்டவிழ்த்து விடப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் அடாவடி செயல்பாடுகளும், வசூல் வேட்டைகளும், சாலை முதலான பணிகளில் அடித்த கொள்ளைகளும்தான் காரணம். அடாவடி, பர்சன்டேஜ் ஆட்கள் மீண்டும் நிற்கும்போது, மக்கள் ஓட்டு போடுவரா? வாழ்வா, சாவா நிலையில், கட்சி மேலிடத்திலிருந்து செலவுகளுக்கு பெருந்தொகை வரும்; ஜெயிக்கப் போவதில்லை. கட்சி மேலிடத்திலிருந்து வருவதை சுருட்டிக் கொள்ளலாமே என்றும், தி.மு.க.,வில் பலர் கணக்குப் போடுகின்றனர். குவாட்டர், பிரியாணி, பணம், தினமும் தேர்தல் முடியும் வரை அனுபவிக்கலாமே. ஆத்தோடு வருது, முடிந்தவரை அய்யா குடி, அம்மா குடி என்று சாதா உடன்பிறப்புகள், தி.மு.க.,வில் கணக்கு போடுகின்றன. கருணாநிதி கணக்கா அல்லது இவர்கள் கணக்கா, எது வெற்றி பெறப்போகிறது என்பது வரும், 21ம் தேதி தெரிந்து விடும்!
தேர்தலுக்குப்பின் சவடால் கட்சிகள் என்னாகும்?
நா.மு.நாச்சியப்பன், காரைக்குடியிலிருந்து எழுதுகிறார்: உள்ளாட்சித் தேர்தல் முடிவை அறிய ஆர்வமாக உள்ளது. சில கட்சிகளை எண்ணும்போது, சிரிப்பாகவும் உள்ளது. எல்லா உறுப்புகளும் நன்றாக இருப்பவர்களே, ஓட்டப் பந்தயப் போட்டியில் தோற்கின்றனர். கை, கால், கண்ணுமின்றி, வாய்ச் சவடாலை மட்டும் வைத்துக் கொண்டு, களத்தில் சில கட்சிகள் உள்ளனவே... என்ன செய்வர்? உள்ளாட்சித் தேர்தல் முடிவு வந்தவுடன், சில ஜாதி, ஓசி, சவடால், திருவோடு கட்சிகள், இருந்த இடம் தெரியாமல் போக வாய்ப்பு வரலாம். உள்ளாட்சித் தேர்தல், சட்டசபைத் தேர்தலை விட முற்றிலும் வேறானது. பெரிய கட்சிகளுக்கே சில இடங்கள் தண்ணீர் காட்டலாம். பண பலம், படை பலம் படைத்த கட்சிகளால், பண வினியோகம் மிக அதிகமாகும்; கண்டுபிடிப்பதும் கஷ்டம். 'தனித் தனியாக மோதுவோமா' என்ற பலரது அறைகூவல், இப்போது உண்மையாகி விட்டது. என்ன முடிவு வருகிறது பார்க்கலாம்.
தி.மு.க.,வில் மாற்றம்: கருணாநிதி முயல்வாரா?
எஸ்.பழனிச்சாமி, தலைமை ஆசிரியர் (பணி நிறைவு), ராமநாதபுரத்திலிருந்து எழுதுகிறார்: கடந்த, சட்டசபைத் தேர்தலில், கூட்டணியமைத்து, தேர்தலைச் சந்தித்ததில் மூன்றாவது இடத்திற்கு தி.மு.க., தள்ளப்பட்டது. '2ஜி' வழக்கில் பார்லிமென்ட் உறுப்பினர்களான ராஜா, கனிமொழி ஆகியோரும், நில அபகரிப்பு வழக்குகளில் முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலரும் சிறையில் உள்ளனர். வருமான வரித் துறையினரும், தி.மு.க.,வினரை ஆய்வு செய்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் தான் உள்ளாட்சித் தேர்தலை, தி.மு.க., தனியாகச் சந்திக்கப்போகிறது. காமராஜர் ஆட்சியில் இருந்த போது, ஒரு முறை ஆட்சியைத் துறந்து கட்சிப் பணிக்கு வந்தார். அதே போல் கருணாநிதியும் கட்சிப் பணிக்கு வரவேண்டும். ராஜா, கனிமொழி ஆகியோரை கோர்ட் தீர்ப்பு வரும் வரை கட்சியிலிருந்து நீக்குவதோடு, பார்லிமென்ட் உறுப்பினர் பதவிகளையும் ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். செய்வாரா கருணாநிதி.
ஊழலுக்கு தண்டனை இவ்ளோதானா?
சந்திரசேகரன், திருவெறும்பூரிலிருந்து எழுதுகிறார்: மும்பையில் கலால் துறை இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் மீது கடந்த, 1987-88 கால கட்டத்தில், தன் வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்துள்ளார் என்று சி.பி.ஐ., விசாரித்து வழக்கு நடத்தியது. அதில், மதுரை சி.பி.ஐ., நீதிமன்றம், குற்றவாளி என்று தீர்மானித்து தண்டனையும், அபராதமும் விதித்துள்ளது. தண்டனைக் காலம், ஒன்றரை ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மட்டுமே. அபராதம், வெறும், 9 ஆயிரம் ரூபாய் மட்டுமே. வழங்கப்பட்ட சிறை தண்டனை காலத்தில், ஏற்கனவே விசாரணை கைதியாக வாரத்தில் மூன்று நாள் மட்டன் பிரியாணி, பல கூடுதல் வசதிகளுடன் இருந்த காலம் கழித்துக் கொள்ளப்படும் என்பது செய்தியில் விவரம் இல்லை. வெறும் 9 ஆயிரம் ரூபாய்தான் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக, 1987-88ல் வாங்கிக் குவிக்கப்பட்ட, 55 லட்சத்து, 28 ஆயிரத்து, 232 ரூபாய் சொத்து பறிமுதல் செய்யப்பட்டதா? அது வழக்கின் முடிவில் என்ன ஆயிற்று என்ற விவரமும் இனி வரலாம். குற்றவாளி மத்திய எக்சைஸ் துறை இன்ஸ்பெக்டராக பணி புரிந்துள்ளார். முடிந்த வரை தவறான வழிகளில் கொள்ளையடித்து, சொத்து சேர்த்துக் கொண்டு, பிடிபட்டால், ஒன்றரை வருடம் சிறையில், வாரம் மூன்று நாள் மட்டன் பிரியாணி சாப்பிட்டு, வெளியே வந்து சொகுசாக வாழலாம். அரசியல் கட்சியில் சேர்ந்து, பதவிகளை பிடித்து சொகுசாக வலம் வரலாம் என்பதுதானே!
சட்டம் ஒரு இருட்டறை தானே!
சிவசுந்தரபாரதி, புதுவயலில் இருந்து எழுதுகிறார்: சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி வீடுகளில், ரெய்டு நடப்பதில் ஆச்சரியப்பட என்ன உள்ளது? ஆடி அடங்கும் வாழ்க்கையடா; ஆறடி நிலமே சொந்தமடா என்பதை, எல்லாம் மறந்துவிட்டனர். தி.மு.க., தலைமையே ஊழலில் சிக்கித் தவிக்கிறது. வாரிசுகள், அமைச்சர்கள், மாவட்டம், வட்டம் பற்றி கேட்கவா வேண்டும். தங்களை யாருமே எதுவுமே செய்ய முடியாது என்ற நாற்காலித் திமிறும், ஆணவமுமே இதற்கு காரணம். தமிழகத்தில், '67க்குப் பிறகு தான் ஊழல், சொத்துக்குவிப்பு அவமானமெல்லாம் நிலவுகிறது. ஒரு தனி மனிதன் ஊழல் பற்றியே, இருபது இடங்களில் சோதனை நடக்கிறது. இந்நிலையிலும், தவறு என்பதை உணராமல், 'சட்டப்படி சந்திப்போம்' என்கின்றனர். சட்டமே இருட்டறை தானே? பாவம் தமிழகம்!


