தமிழகத்தை வாழவிடுவதில்லை மத்திய அரசு :ஜெ.,
தமிழகத்தை வாழவிடுவதில்லை மத்திய அரசு :ஜெ.,
தமிழகத்தை வாழவிடுவதில்லை மத்திய அரசு :ஜெ.,
UPDATED : ஆக 14, 2011 03:41 AM
ADDED : ஆக 12, 2011 11:20 PM

சென்னை:''தமிழக அரசு கேட்ட எந்த திட்டங்களுக்கும் நிதி கொடுக்க மத்திய அரசு மறுக்கிறது.
தமிழகத்தை வாழவிடுவதில்லை என்ற முடிவுடன் மத்திய அரசு செயல்படுகிறது,'' என்று, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.
சட்டசபையில், பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் நேற்று, சட்டசபை மார்க்சிஸ்ட் தலைவர் சவுந்தர்ராஜன் பேசும்போது நடந்த விவாதம்:சவுந்தர்ராஜன்: இன்னும் இரண்டு மாதங்களில் மழைக்காலம் துவங்கிவிடும். எனவே, முன்னெச்சரிக்கையுடன் சென்னை நகரில் மழைநீர் வடிகால் கால்வாய்களை தூர்வாரி சரிசெய்ய வேண்டும். ரேஷன் கடைகளில், ஐந்து லிட்டர் மண்ணெண்ணெய் வழங்குவதற்கு பதில், மூன்று லிட்டர் தான் கொடுக்கின்றனர். ரேஷன் கடைகளுக்கு, 80 சதவீதம் அளவிற்குத் தான் மண்ணெண்ணெய் அனுப்பப்படுகிறது. இதனால், 20 சதவீத கார்டுதாரர்களுக்கு மண்ணெண்ணெய் கிடைப்பதில்லை. வெளியில் வாங்கியாவது, மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா: மண்ணெண்ணெய் வெளியில் வாங்குவதற்கு, மாநில அரசிற்கு அதிகாரம் கிடையாது. மத்திய அரசு தான் வழங்க வேண்டும். டி.ஏ.பி., உரம் அதிகளவில் தமிழகத்திற்கு தேவைப்படுகிறது. ஆனால், அதைக்கூட மத்திய அரசு தான் வழங்க வேண்டும். நாமாக வெளியில் வாங்க முடியாது. உரம் வழங்க வேண்டும் என, பிரதமரிடம் வலியுறுத்தினேன். ஆனால், வழங்கவில்லை. மத்திய அரசு தொடர்ந்து, மாநில அரசுக்கு அநீதியை இழைத்து வருகிறது.
சவுந்தர்ராஜன்: மத்திய அரசின் ஏதேச்சதிகார போக்கால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துவிட்டது. போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க, 'ஸ்மார்ட் கார்டு' திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பட்ஜெட்டில் புதிய மின் திட்டங்கள் குறித்து எதுவும் கூறப்படவில்லை.மின்துறை அமைச்சர் விஸ்வநாதன்: மின் தட்டுப்பாட்டை நீக்கவும், மின் உற்பத்தியை அதிகரிக்கவும் முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆண்டுக்கு 7 சதவீதம் அளவிற்கு, மின் நுகர்வு அதிகரிக்கிறது. இதை நிறைவேற்ற பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மானியக் கோரிக்கையில், விரிவாக பதிலளிக்கிறேன்.
முதல்வர்: கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழகம் கேட்பாரற்று கிடந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் தான் ஆகின்றன. அதற்குள், இப்படி பல்வேறு கேள்விகளை கேட்கிறீர்கள். அடுத்த ஆண்டு இதே நாளில், என்ன செய்திருக்கிறீர்கள் என்று கேளுங்கள். 23 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.சவுந்தர்ராஜன்: குந்தா நீர் மின் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் விஸ்வநாதன்: காவிரி படுகையில் கிடைக்கும் நீரை பயன்படுத்தி, இத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு கர்நாடகா மற்றும் கேரள மாநில அரசுகளிடம் அனுமதி பெற வேண்டும் என, மத்திய அரசு கூறுகிறது. நமது மாநில எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்து தான், திட்டத்தை நிறைவேற்றப் போகிறோம். இதற்கு, மற்ற மாநிலங்களிடம் அனுமதி கேட்கத் தேவையில்லை. ஆனால், தேவையில்லாமல் மத்திய அரசு தொடர்ந்து, இரு மாநில அரசுகளிடம் அனுமதி பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இந்த பிரச்னையை விரைவில் முதல்வர் தீர்த்து வைப்பார்.
சவுந்தர்ராஜன்: சென்னையில் சூதாட்ட கிளப்கள் நடப்பது குறித்து, கலைராஜன் பேசினார். அதற்கு மறுநாளே அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலீசாருக்கு தெரிந்தே இவ்வளவு நாட்களாக கிளப் நடந்துள்ளது. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.முதல்வர்: இவ்வளவு நாளாக போலீசாருக்கு தெரிந்து நடந்ததோ, தெரியாமல் நடந்ததோ, இனிமேல் நடக்காது.
சவுந்தர்ராஜன்: தொழிலாளர் சங்க அங்கீகார சட்டத்தை, இந்த கூட்டத்தொடரில் கொண்டுவர வேண்டும். அரசுத் துறைகளில் இரண்டு லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவ்வளவு பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப முடியாது. எனினும், படிப்படியாக நிரப்பும் வகையில், கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசு பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
முதல்வர்: உறுப்பினர் பேசும்போது குறுக்கிடக்கூடாது என்று இருந்தேன். ஆனால், என்னை பேச வைத்துவிட்டார். ஒவ்வொரு திட்டத்திற்கும், கூடுதல் நிதி ஒதுக்குங்கள் என்று கேட்கிறார். எத்தனையோ குறைகளும், தேவைகளும் இருக்கின்றன. அவற்றையெல்லாம் நிவர்த்தி செய்வதற்கு பணம் தேவை. அதிக வருவாய் வரும் இனங்களை மத்திய அரசு தன்னிடம் வைத்துக்கொண்டுள்ளது. மாநில அரசுகளின் அதிகாரங்களையும் மத்திய அரசு பறித்துவிட்டது. நிதியும் தருவதில்லை.
மாநில அரசுக்கு, 'வாட்' வரி மற்றும் வணிக வரித்துறை மூலம் வரும் வருவாய் தான் முக்கியமாக உள்ளது. இதைக்கொண்டு தான், அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துகிறோம். எவ்வளவோ செய்ய வேண்டும் என்று ஆசை எனக்கு இருக்கிறது. 100 மடங்கு அல்ல, 1,000 மடங்கு செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. ஆனால், எல்லாவற்றுக்கும் நிதி வேண்டும்.
மத்திய அரசின் தடைகளை தகர்த்தெறிந்து, மக்களுக்கு தேவையான நன்மைகளை செய்வோம். தமிழகத்தை வாழவிடுவதில்லை என்ற முடிவுடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதை மீறி, எங்களால் முடிந்த நன்மைகளை செய்தே தீருவோம்.இவ்வாறு விவாதம் நடந்தது. இதன்பின், முதல்வர் கருத்தின் மீது, கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் பேசினர். 'முதல்வர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருப்போம்' என்று, அவர்கள் தெரிவித்தனர்.
மத்திய அரசை எதிர்த்து போராட தயார்:''மத்திய அரசை எதிர்த்து, போராடத் தயார்'' என்று, முதல்வர் ஜெயலலிதா பேசினார்.சட்டசபையில், பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, சட்டசபை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஆறுமுகம் பேசியதாவது:வால்பாறை தொகுதி மக்கள், வனவிலங்குகளின் பாதிப்புக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு, பாதுகாப்பு நடவடிக்கை தேவை. தெரு விளக்குள் முழுமையாக இல்லை. இரவில் யானைகளுக்குப் பயந்து, தீப்பந்தத்தை எடுத்துக் கொண்டு தான் செல்கின்றனர். பந்தம் கொளுத்த, மண்ணெண்ணெய் தேவை.5 லிட்டர் மண்ணெண்ணெய், சமையலுக்குப் போதுமானதாக உள்ளது. எனவே, மண்ணெண்ணெய் வழங்குவதில், அரசு தனிச்சலுகை வழங்க வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா: மாநிலத்திற்கு மத்திய அரசு தான், மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்து வருகிறது. கடந்த ஜூன் மாதத்திலிருந்து, என்ன காரணத்தினாலோ, மாநில அரசுக்கு வழங்க வேண்டிய மண்ணெண்ணெயின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அவரை நேரிலும் சந்தித்து வலியுறுத்தியுள்ளேன்.ஆறுமுகம்: தமிழகத்தின் வளர்ச்சிக்கு, மத்திய அரசு தடையாக இருக்கிறது. மத்திய அரசுக்கு எதிராக, கம்யூனிஸ்ட்டுகளும் போராட்டம் நடத்தினர். ஆனால், மக்கள் தான் பின்னால் வருவதில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி: கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்திற்குப் பின்னால், மக்கள் வரவில்லை என, சொல்ல முடியாது. மக்கள் ஆதரவு இருந்ததால் தான், தேர்தலில் நல்ல கூட்டணி அமைத்து, அமோக வெற்றி பெற்றோம்.முதல்வர் ஜெயலலிதா: மாநில அரசின் உரிமையைப் பெறுவதற்காக, மத்திய அரசை எதிர்த்து, நீங்கள் போராட்டம் நடத்துங்கள். நாங்களும் உங்களுடன் வருகிறோம். மக்களும் நம்மோடு வருவார்கள்.இவ்வாறு, விவாதம் நடந்தது.


