Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தமிழகத்தை மத்திய அரசு பரிசோதனை கூடமாக மாற்றுகிறது : நெல்லையில் வைகோ குற்றச்சாட்டு

தமிழகத்தை மத்திய அரசு பரிசோதனை கூடமாக மாற்றுகிறது : நெல்லையில் வைகோ குற்றச்சாட்டு

தமிழகத்தை மத்திய அரசு பரிசோதனை கூடமாக மாற்றுகிறது : நெல்லையில் வைகோ குற்றச்சாட்டு

தமிழகத்தை மத்திய அரசு பரிசோதனை கூடமாக மாற்றுகிறது : நெல்லையில் வைகோ குற்றச்சாட்டு

ADDED : செப் 13, 2011 12:21 AM


Google News

திருநெல்வேலி : ''தமிழகத்தை மத்திய அரசு பரிசோதனை கூடமாக மாற்றி வருகிறது'' என நெல்லையில் மதிமுக பொது செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.

அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு வரும் 15ம்தேதி நெல்லை டவுன் பொருட்காட்சிதிடலில் திறந்த வெளி மாநாடு நடக்கிறது. இம் மாநாட்டிற்காக பிரமாண்ட் பந்தல் அமைக்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. இந்த பணிகளை மதிமுக பொது செயலாளர் வைகோ நேற்று இரவு ஆய்வு செய்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.



பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது; நெல்லையில் நடைபெறவுள்ள மாநாடு மதிமுக வரலாற்றில் ஒரு உந்துதலை ஏற்படுத்தும். எங்களது கட்சி நிறைய மாநாடுகளை நடத்தியுள்ளது. இருப்பினும் இந்த மாநாடு அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் பெறும். மதிமுக சட்டசபை தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் கூட ஈழத் தமிழர் பிரச்னை, முல்லை பெரியாறு பிரச்னை, ஸ்டெர்லைட் பிரச்னை உட்பட பல்வேறு மக்கள் பிரச்னைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இதனால் மக்களின் பார்வை மதிமுகவின் பக்கம் திரும்பியுள்ளது. சமீபத்தில் ஜப்பானில் நிகழ்ந்த அணு உலை விபத்துக்களால் கூடங்குளம் பகுதி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கூடன்குளம் அணு மின் நிலையத்தால் மீனவர்கள் மட்டுமின்றி, தென் மாவட்ட மக்களுக்கே ஆபத்தாக அமையும். ஏற்கனவே பூமி அதிர்வுகள் ஏற்படக்கூடிய பகுதிகளாக தமிழகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற ஆபத்துக்களை தவிர்க்கவே கூடன்குளம் பகுதி மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். இதில் எந்த அரசியல் நோக்கமும் கிடையாது. அதிநவீன தொழில்நுட்பத்தை பின்பற்றும் ஜப்பான் நாட்டில் பூகம்பத்திற்கு பிறகு அணு உலைகளை மூடிவிட்டனர். அதுபோல் ஜெர்மனியில் 2030ம் ஆண்டில் அணு உலைகளை மூட முடிவு செய்துள்ளனர். இத்தாலியில் அணு உலைகளை மூட அங்குள்ள மக்களில் 90சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளே அணு உலைகளை மூட திட்டமிட்டுள்ளபோது, தமிழகத்தில் மட்டும் அணு உலைகளை அமைப்பது நியாயம் ஆகாது. மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக மத்திய அரசு நியூக்கிலியர் பார்க்காக மாற்ற முடிவு செய்துள்ளதாக கூறுகிறது. இதன் மூலம் மத்திய அரசு தமிழகத்தை பரிசோதனை கூடமாக மாற்றுகிறது. பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நீதிபதி விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்பட்டதால், தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தேன். தென் மாவட்ட மக்கள் சமூக ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும். அமைதிக்கு குந்தகம் ஏற்படாத வகையில் அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் மதிமுக தனித்து போட்டியிடும். நெல்லையில் நடைபெறும் திறந்த வெளி மாநாட்டிற்கு பிறகு தமிழகத்தின் மாற்று சக்தியாக மதிமுக திகழும். இவ்வாறு பொதுசெயலாளர் வைகோ தெரிவித்தார். ஆய்வின் போது மதிமுக மாநகர மாவட்ட செயலாளர் பெருமாள், புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் நிஜாம், மாநில விவசாய அணி செயலாளர் கல்லத்தியான், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோயல், குமரி மாவட்ட செயலாளர் தில்லை செல்வன், மாவட்ட அவைத் தலைவர் லட்சுமணன், நெல்லை மாவட்ட துணை செயலாளர் மின்னல் முகம்மது உட்பட பலர் உடனிருந்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us