/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/நெல் கொள்முதல் காலக்கெடுவை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கைநெல் கொள்முதல் காலக்கெடுவை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை
நெல் கொள்முதல் காலக்கெடுவை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை
நெல் கொள்முதல் காலக்கெடுவை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை
நெல் கொள்முதல் காலக்கெடுவை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை
கிருஷ்ணகிரி: 'கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நெல் கொள்முதல் செய்ய அரசு நிர்ணயித்துள்ள காலக்கெடுவை நீட்டிப்பு செய்ய வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.
ராமகவுண்டர்: காவேரிப்பட்டணம் நெல் கொள் முதல் மையத்தில் நாள்தோறும், ஒரு லட்ச ரூபாய்க்கு மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், மாவட்டத்தில் கடந்த போகத்தில் விளைந்த, 10 லட்சம் மூட்டை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதனால், நாள்தோறும், 2 லட்ச ரூபாய்க்கு நெல் கொள்முதல் செய்யவும், காலக்கெடுவை நீட்டிப்பு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ருக்குமணி (பொது விநியோக திட்ட மண்டல மேலாளர்): நெல் கொள்முதலை வரும் 31ம் தேதிக்குள் நிறுத்திவிடும்படி மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. மேலும், விவசாயிகளிடம் இருந்து தரமான அதாவது, 100 சதவீதத்தில், 67 சதவீதம் அரிசி வரும் வகையிலான நெல்லை மட்டுமே கொள்முதல் செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது.கலெக்டர் மகேஸ்வரன்: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதல் செய்யும் காலகெடுவை நீட்டிக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். எனவே, விவசாயிகள் தரமான நெல்லை மட்டும் நெல் கொள்முதல் மையத்தில் விற்பனை செய்யலாம்.வெங்கடசாமி: காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றில் குப்பைகள் குவிந்துள்ளதாலும், சாக்கடை நீர் கழிவுகள் கலப்பதாலும் ஆறு மாசுடைந்துள்ளது. இதனால் காவேரிப்பட்டணத்தில் சுகாதாரமற்ற நிலை உள்ளது.கலெக்டர் மகேஸ்வரன்: காவேரிப்பட்டணம் ஆற்றில் குவித்து வைக்கப்பட்டுள்ள மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை அகற்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளது. மாவட்ட நிர்வாகத்துடன் தொண்டு நிறுவனங்கள் இணைந்து, தென்பெண்ணை ஆற்றை சுத்தப்படுத்தும் பணி விரைவில் தொடங்கப்படும்.ராமகவுண்டர்: ஓசூர் பகுதியில் வங்கிகளில் கடன் வாங்கி பசுமை குடில்கள் அமைத்து விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை சீற்றம் காரணமாக பல இடங்களில் பசுமை குடில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.
பிரகாசம்(டி.ஆர்.ஓ.,): பசுமை குடில்களை அமைக்க விவசாயிகள் வங்கிகளில் கடன் வாங்கியபோது அதற்கு இன்சூரன்ஸ் செய்திருக்க வேண்டும். இன்சூரன்ஸ் செய்திருந்தால் அதன் மூலம் இழப்பீட்டு தொகை கிடைக்கும். இன்சூரன்ஸ் செய்யாத நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு எந்த வகையில் தருவது என்று அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.ஜெயலட்சுமி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடைகளை பல்வேறு நோய்கள் தாக்கி வரும் நிலையில், கால்நடை மருத்துவ முகாம்களை அதிக அளவில் நடத்த வேண்டும்.கலெக்டர் மகேஸ்வரன்: தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் உள்ளது போல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் மூலம் கிராமங்கள் தோறும் கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்த கால்நடை துறை மூலம் ஏற்பாடு செய்யப்படும்.சரவணன்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையில் நெல் சாகுபடி செய்துள்ளனர். இதற்கு முக்கியமாக பயன்படும் பவர் கோணோவீடர் கருவிகளை வட்டாரத்திற்கு, 10 என்ற அளவில் விவசாயிகளுக்கு மானியமாக வழங்க வேண்டும்.நாச்சியப்பன்(வேளாண் இணை இயக்குனர்): கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு, 100 கோணோவீடர் கருவிகள் தேவை என்ற கோரிக்கையை ஏற்று தமிழக அரசு வழங்கவுள்ளது. இதனை, வட்டார அளவில் அனைவருக்கும் பிரித்து மானிய விலையில் வழங்கப்படும்.


